Wednesday, May 9, 2012

என் வயதுக்கும் படிப்புக்கும் மரியாதை தராத ஸ்டாலினை, அந்த ஆண்டவன் மன்னிக்​கட்டும்.



வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்வது என்பது இதுதான்! 
தனது வீட்டை அபகரித்து கொண்டதாக முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது நண்பர்​கள் மீது புகார் கொடுத்து இருந்தார் சென்னையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார். ஸ்டாலினைக் கைது செய்ய ஜெயலலிதாவுக்கு கிடைத்த அஸ்திரம் என்று இது சொல்லப்பட்டது. போலீஸ் பலரையும் வரவழைத்து விசாரித்தது. ஆனால், திடீரென்று ஒரு நாள் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. புகார் கொடுத்த சேஷாத்ரி குமார், வழக்கை வாபஸ் வாங்கியதோடு, 'நாங்கள் கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்கிறோம்’ என்றார். ஸ்டாலினைப் பொறுத்த வரை சுபம். மலை போல வந்த கஷ்டம் பனி போல விலகியது என்று நிம்மதியாக ஸ்டாலின் இருந்திருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகளால்தான் சும்மா இருக்க முடியாதே!
கொளத்தூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் பற்றி ஏராளமான ஃபைல்களை வைத்துக்கொண்டு பேசினார். ''நான் இப்போது குடியிருக்கும் வீட்டை சேஷாத்ரி குமாரிடம் இருந்தோ அல்லது அவருடைய தகப்பனாரிடம் இருந்தோ வாங்கவில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வீடு ஏலத்துக்கு வந்தது. நானும் விண்ணப்பித்தேன். அந்த வீடுதான், என் மகன் உதயநிதி நடத்தும் நிறுவனத்​​தின் பெயரில் வாங்கப்பட்டது. அதற்கு உண்டான பத்திரப் பதிவில் வங்கியின் மேலாளர்தான் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். இதைக்கூடத் தெரிந்து​கொள்ளாமல், யாரோ தெருவில் போகிறவர் கொடுத்த புகாரை வைத்து, என் மீது வழக்குப் பதிவு செய்து இருந்தார்கள்'' என்று பேசி இருந்தார். இந்தப் பேச்சு சேஷாத்ரி குமாரைக் கொந்தளிக்க ​வைத்து உள்ளது. 'கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்குச் சொந்தக்காரரான தன்னை, யாரோ தெருவில் போகிறவர் என்று ஸ்டாலின் அலட்சியப்படுத்தி விட்டார்’ என்று கோபமான நிலையில் நம்மிடம் சில விளக்கங்களைச் சொல்வ​தற்காக சேஷாத்ரி குமார் அழைத்தார்.
''ஸ்டாலின் கூறி இருப்பதுபோன்று, எனக்கோ... எனது குடும்பத்தினருக்கோ எந்த வங்கியிலும் கடன் இல்லை. ஸ்டாலின் இப்போது குடியிருக்கும் வீடு (புதிய எண்: 25 சித்தரஞ்சன் சாலை)​ ஒரு காலத்தில் என் அப்பாவுக்குச் சொந்தமானது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், அந்த வீட்டை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு அவர்தான் விற்றார். அந்த வீட்டை, வங்கியின் விருந்தினர் இல்லமாகப் பயன்படுத்தி வந்தனர். பணமுடையால் அந்த வீட்டை என் தந்தை விற்கவில்லை. மற்றபடி, வங்கியில் கடன் வாங்கிவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் எப்போதுமே எங்கள் குடும்பம் இல்லை. ஆனால், இந்த விவகாரத்தை ஸ்டாலின் வேறு விதமாகச் சொல்லி இருக்கிறார். அவர் குடியிருக்கும் வீட்டைப்பற்றி நான் புகார் கொடுக்கவில்லை. அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் என் வீட்டை (புதிய எண் 23, சித்தரஞ்சன் சாலை) அபகரித்துக்கொண்டது பற்றித்தான் புகார் செய்தேன். அதாவது, இப்போது ஸ்டாலினின் மகள் செந்தாமரை குடியிருக்கும் வீடு.
ஸ்டாலின் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என்றாலும், அந்தக் காலத்திலேயே அமெரிக்காசென்று எம்.எஸ். படித்தவன். ரிசர்வ் வங்கி, ராணுவம், விண்வெளித் துறை, அணு சக்தித் துறை மற்றும் எல் அண்டு டி உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்களைக் கணினிமயமாக்கியவன் நான்தான். சிங்கப்பூரில் நல்ல வேலையில் மிக உயர்ந்த சம்பளத்தில் இருந்த நான், என் பெற்றோருடன் வசிக்க வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன். என் தந்தை கொடுத்த இடத்தில் வீடு கட்டி, அவர்களுடைய நினைவாக (நாராயணசுவாமி ஐயர் - விஷாலாட்சி) 'நார்விஷா’ என்று அந்த வீட்டுக்குப் பெயர் சூட்டினேன். அந்த வீட்டைத்தான், என்னை மிரட்டி அபகரித்து வேணுகோபால் ரெட்டி பெயரில் பதிவு செய்துகொண்டனர். அப்போது, ரூ.5 கோடியே, 54 லட்சத்து, 50,000 கொடுத்தனர். இந்த வழக்கை நான் வாபஸ் பெற வேண்டும் என வேணுகோபால் ரெட்டி என்னிடம் பேசியபோதுகூட, இந்த விவகாரத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட ரூ. 1 கோடியே 75 லட்சம் கொடுத்தார். யாரோ தெருவில் போகிறவனுக்குத்தான் கோடிக்கணக்கில் கொடுப்​பார்களா?
எனக்கு 65 வயது ஆகிவிட்டது. நான் தெருவில் போகிறவன் என்று ஸ்டாலின் பேசி இருப்பதைப் படித்து, மிகவும் வருந்தினேன். அந்த தெருதான் என்னுடைய பூர்வீகம். அந்தத் தெருவுக்கு சித்தரஞ்சன் சாலை என்று பெயர் சூட்டியதே என் தந்தைதான். அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்.  என் வீட்டை அபகரித்துக்கொண்டு, என் வயதுக்கும் படிப்புக்கும் மரியாதை தராமல் பேசி இருக்கும் ஸ்டாலினை, அந்த ஆண்டவன் மன்னிக்​கட்டும். ஏனென்றால், அவரை மன்னிக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.  இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை ஒரு நாளும் நான் சந்தித்துப் பேசியது இல்லை. இந்த சமரசத்தில், எனக்கு மிகப் பெரிய நஷ்டம்​தான். என்ன செய்வது? என்னை மிரட்டி எழுதி வாங்கி விட்டார்கள். நானும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் நீதிமன்றத்துக்கு அலைந்து​கொண்டு இருக்க முடியும்? என் காலத்துக்குப் பிறகு, என் குடும்பத்தினர் அலைய வேண்டி இருக்கும். அந்தக் கஷ்டத்தை அவர்களுக்கு நான் கொடுக்க விரும்பவில்லை. ஆனால், நானே முன்வந்து வழக்கை முடித்துக்கொண்ட பிறகும் என்னைப்பற்றி மரியாதைக் குறைவாகப் பேசுவதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை'' என்று ஆதங்கப்​பட்டார்.
பொலிடிக்கல் கோதா என்பது இதுதானா?

No comments:

Post a Comment