Wednesday, May 9, 2012

ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சிக்கு மக்கள் போட்ட மார்க் எவ்வளவு?


ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து மக்களின் மதிப்பீடு என்ன என்பதை அறிவதற்காக, 18 கேள்விகளை உள்ளடக்கிய சர்வே நடத்தினோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நகரம், கிராமம் எனப் புகுந்து 3,659 நபர்களைச் சந்தித்தது
அதில் 10 கேள்விகள் கடந்த இதழில் வெளியான நிலையில், அடுத்த 8 கேள்விகள் இந்த இதழில்... 'முதல்வராக ஜெயலலிதாவின் செயல்பாடுகள்?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதா மாறவில்லை’ என்பதைத்தான் அதிகம் பேர் 'டிக்’ அடித்தனர். 'முந்தைய முதல்வர் கருணாநிதியின் செயல்பாட்டுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதாவின் செயல்பாடு...’ என்ற அடுத்த கேள்விக்கு, 'பெரிய வித்தியாசம் இல்லை’ என்றவர்கள் அதிகம்.
சசிகலாவுடன் ஏற்பட்ட பிரிவு, மீண்டும் உறவு காட்சிகளையும் சர்வேயில் கேள்விகளாகச் கேட்டு இருந்தோம். 'சசிகலாவுடனான உரசல்... பிறகு, மீண்டும் இணைந்தது?’ தொடர்பான கேள்விக்கு, 'அவர்களின் தனிப்பட்ட விஷயம்’ என்று சொன்னவர்கள் 41.46 சதவிகிதம். 'சுயநலத்தால் அரங்கேறிய நாடகம்’ என்று சொன்னவர்கள் 40.67 சதவிகிதம். இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் வெறும் 0.79 சதவிகிதம்தான்.
'சசிகலா குடும்பத்தினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்​தியது...?’ என்ற கேள்விக்கு, 'ஜெயலலிதாவுக்குத் தெரியும்’ என்று அதிகம் பேர் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள்.
'சசிகலா நீக்கம், சேர்ப்பு விவகாரத்தால் ஜெயலலிதாவின் அரசியல் இமேஜ்?’ என்ற கேள்விக்கு 'பாதிப்பு எதுவும் இல்லை’ என்கிறார்கள்.  'சசிகலாவை விட்டு ஜெய லலிதா எப்போதும் பிரிய மாட்டார்’, 'சசிகலா விவகாரத்தில் ஜெயலலிதா எடுக்கும் நடவடிக்கைகள் எப்போதுமே நாடகமாகத்​தான் இருக்கும்’ -  சர்வே எடுக்கச் சென்ற இடங்களில் எல்லாம், மக்கள் மிகத் தெளிவாகக் இப்படிக் கருத்துச் சொன்னார்கள். ஓர் ஆண்டு ஆட்சியில் நடந்த முக்கிய விஷயங்களை எல்லாம் பட்டியல் போட்டு இதில் எது உங்களை அதிகம் பாதித்தது என்ற கேள்விக்கு அதிகபட்சமாக மின்வெட்டுப் பிரச்னையைக் குறிப்பிடுகிறார்கள்.
'ஜெயலலிதாவின் ஓர் ஆண்டு ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற, மிக முக்கியமான கேள்விக்கு, 'ஜஸ்ட் பாஸ்’ என்று சொன்னவர்கள்தான் அதிகம்.  
ஜெயலலிதாவின் ஆட்சி, அவருடைய செயல்பாடு​கள், மின்வெட்டுப் பிரச்னை, பஸ், பால், மின் கட்டண உயர்வு, புதிய தலைமைச் செயலகத்தை முடக்கியது என்று அரசுக்கு எதிராக கடுமையான கருத்தை சர்வேயில் வெளிப்படுத்திய மக்கள், ஜெயலலி​தாவுக்கு ஜஸ்ட் பாஸ் என்று போட்டிருப்பது ஏன்? சர்வே ஃபாரங்களை நீட்டியதும் எல்லாவற்றுக்கும் தயங்காமல் நம் முன்பே டிக் அடித்தவர்கள், 'ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் எவ்வளவு?’ என்ற கேள்விக்கு, நீண்ட யோசனைக்குப் பிறகே பலரும் மதிப்பெண் போட்டார்கள்.
ஒரு சிலரின் கருத்துக்கள் இங்கே....
கண்ணன், சேலம்: ''கட்டப்பஞ்சாயத்து, நில ஆக்கிர​மிப்புன்னு தி.மு.க. ஆட்சியில் அனுபவிச்ச கொடுமைகளுக்கு அளவே இல்லை. இப்போது சட்டம் ஒழுங்கு சரியா இருக்கு. கட்டப்பஞ்சாயத்தும் நில ஆக்கிரமிப்பும் இல்லை. மக்கள் பயம் இல்லாம நிம்மதியா இருக்காங்க. இதுவே நல்ல விஷயம்தானே!''
குமார், கரூர்: ''சமச்சீர்க் கல்வி விவகாரத்தில் ஜெயலலிதா செய்த குளறுபடிகளை மறக்கவே முடியாது. மாணவர்கள் அனுபவிச்ச கொடுமை​யும் அதிகம். பஸ் கட்டணத்தை நினைச்சாலே, அடிவயிறு பத்திக்கிட்டு எரியுது. இதே மாதிரி ஆட்சி செஞ்சா, ஜெயலலிதா அடுத்த எலெக்ஷன்ல டெபாசிட் வாங்க முடியாது.''
ஆறுமுகம், திருவண்ணாமலை: ''தி.மு.க. ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இந்த அரசு ஏதோ பரவாயில்லைன்னு சொல்லும் அளவுக்கு இருக்கு. நடுராத்திரியில கரன்ட் கட் ஆகி, தூங்க முடியாம வீதியில வந்து உட்காரும் நேரத்தில்தான், ஜெயலலிதா மீது கோபம் கோபமா வருது.''
ஜெயஸ்ரீ, திருச்சி:  ''தி.மு.க. ஆட்சியில் என்னென்ன குளறுபடிகள் செய்திருக்​கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கவே முதல்வருக்கு ஒரு வருஷம் போதாது. அதை எல்லாம் சரிசெய்த பிறகுதானே, மக்கள் நலனில் அக்கறை காட்ட முடியும்? அடுத்த முறை ஆட்சிக்கு வருவதற்குள் நிச்சயம் அனைத்தையும் முதல்வர் சரிசெய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது காலத்தின் கட்டாயம்.''
தீபக், வேலூர்: ''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராப் பக்கம் ஓடிவிட்டதாகச் சொன்னார். இப்போது நடக்கும் கொலைகளையும் கொள்ளைகளையும் பார்த்தால், வெளி மாநிலங்​களில் இருக்கும் ஒட்டுமொத்த ரவுடிக் கும்பலும் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டதைப் போல இருக்கிறது. ஒண்ணும் சரியில்லீங்க...''
சொக்கலிங்கம், மதுரை: ''காவல் நிலையங்களில் அரசியல் தலையீடு இல்லை என்பது, நான் கண்கூடாகப் பார்த்த உண்மை. தமிழ், தமிழ் என்று சொன்னவர்கள் எல்லாம் செய்யாத விஷயங்களை, ஜெயலலிதா ஆக்கப்பூர்வமாகச் செய்து முடித்திருக்​கிறார். மின் வெட்டுப் பிரச்னை உள்ளிட்ட கஷ்டங்களையும் சொல்லி ஆகணும். வேப்பம்பூ பச்சடி போல இனிப்பும் கசப்பும் கலந்த ஆட்சி இது.''
சரவணன், காரைக்குடி:  ''எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் அதிகம். நிலஅபகரிப்பு வழக்குகளில் அதிரடிக் கைதுகள் நடந்ததைப் பார்க்கும்போது, நியாயமான நடவடிக்கை என்று நினைத்தோம்.. ஆனால், உள்ளே போனவர்கள் எல்லாம் அதே வேகத்தில் திரும்பி வந்ததைப் பார்த்தால், அரசின் நடவடிக்கை மீதே சந்தேகம்தான் வருகிறது.''
கண்பத் மோகன், சென்னை: ''சட்டம் ஒழுங்கு பிரமாதமா இருக்கிறதுன்னு முதல்வர் சொல்றாங்க. ஆனால், பட்டப் பகலில் கோடம்பாக்கம் ஏரியாவுல பொண்ணுங்க கழுத்தில் இருந்து சங்கிலியை அறுத்துட்டுப் போறாங்க. இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது? முதல்வர் கையில் இருக்கும் காவல்துறை என்னதான் செய்யுதுன்னே புரியலை?''

No comments:

Post a Comment