கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 56 கி.மீ. தூரத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் சிதைந்துபோன கலைக்கூடம்போல இருக்கும் ஹம்பி நகரம்தான், ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய விஜய நகரம்! வெற்றியின் நகரம் என்று புகழ்ந்து சொல்லப்படும் விஜய நகரம், கி.பி. 1336-ல் உருவாக்கப்பட்டது. பாரீஸ் நகரைவிட, இரண்டு மடங்கு பெரியது. உலகின் மிகப் பெரிய நகரங்களில் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது. விஜயநகரில் ஐந்து லட்சம் மக்கள் வசித்தனர் என்று, வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இன்று மிச்சம் இருப்பது அதன் சிதைந்துபோன இடிபாடுகள் மட்டும்தான். கோயில்கள், கல் மண்டபங்கள், கலைக்கூடங்கள் என்று, நகரின் மத்தியப் பகுதியில் சிதைவுகளை காணலாம். அந்தப் பகுதியின் பெயர்தான் ஹம்பி.ஹம்பி என்பது, கன்னடப் பெயரான ஹம்பேயில் இருந்து உருவானது. இது, துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதில் இருந்து உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும் என்கின்றனர். இந்த நகரை விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாக்ஷரின் பெயரைத் தழுவி விருபாக்ஷபுரம் என்றும் அழைக்கின்றனர்.இஸ்லாமிய மன்னர்கள், தெற்குப் பகுதியில் படை எடுத்து வந்தபோது, அவர்களை எதிர்ப்பதற்காக,குறுநில மன்னர்கள் ஒன்று சேர்ந்தனர். அப்படி உருவாக்கப்பட்டதே விஜய நகரப் பேரரசு.
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் முதன் முதலில் கைமாறியது விஜயநகரப் பேரரசின் உருவாக்கத்தால்தான். முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருநாதர் வித்யாரண்யரின் வழிகாட்டுதல்படி கி.பி. 1336-ல் விஜயநகரப் பேரரசை நிறுவினர். இந்தப் பேரரசு உருவாக்கப்பட்டது குறித்து நிறையக் கருத்துக்கள் நிலவுகின்றன.'புக்கரும் ஹரிஹரரும் வாரங்கல் அரசரின் படைத் தளபதிகளாக இருந்தனர். முகமது பின் துக்ளக்கோடு நடந்த சண்டையில் தோற்று, இருவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். அங்கிருந்து, டில்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டு இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்கு ஒப்புக்கொள்ளாத இருவரும், தப்பி வந்து தங்களது குரு வித்யாரண்யர் வழிகாட்டுதலில் விஜய நகரப் பேரரசை நிறுவினர்’ என்று ஒரு கருத்து நிலவுகிறது.'காகதீய அரசில் போர்ப் பணியாற்றிய ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இருவரும், தங்களது குருவான சிருங்கேரி அரசபீடத்தைச் சேர்ந்த வித்யாரண்யரை, துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ஆனைக்குந்தி என்ற மலை அடிவாரத்தில் சந்தித்தனர். இஸ்லாமியப் படையெடுப்பு குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினர். சிறு படைகளை இணைத்து புதிய அரசை உருவாக்கலாம் என்ற யோசனையை வித்யாரண்யர் கூறி இருக்கிறார். அதன்படி உருவாக்கப்பட்டதே விஜயநகரப் பேரரசு’ என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இது எதுவுமே உண்மை இல்லை. ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருமே கர்நாடகத்தின் ஹொய்சால வம்சாவழி வந்தவர்கள் என்றும் ஒரு சாரர் அடித்துச் சொல்கின்றனர்.கி.பி. 1331-ல் தமது 36-வது வயதில் வித்யாரண்யர் சிருங்கேரி மடத்து பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது இயற்பெயர் மாதவர். கன்னட பிராமணரான இவர், விஜய நகரத்தைச் சேர்ந்த ராய வம்சத்துக்குக் குலகுருவாக இருந்தார். சர்வமத சங்கிரகம் என்ற நூலை இவர் எழுதி இருக்கிறார். சங்கமர், துளுவர், சாளுவர் மற்றும் ஆரவீட்டார் ஆகிய நான்கு குலத்தினர், விஜய நகரத்தை ஆட்சி செய்து இருக்கின்றனர். சாளுவர் மற்றும் ஆரவீட்டார் ஆகியோருக்கு தாய்மொழி தெலுங்கு. சங்கமர் மற்றும் துளுவர் ஆகிய இருவரும், கன்னடத்தைத் தாய்மொழியாகக்கொண்டவர்கள்.விஜயநகரப் பேரரசை நிறுவிய முதலாம் ஹரிஹரர், குருபா இனத்தைச் சேர்ந்தவர். இவர், சங்கம மரபைத் தொடங்கிய பாவன சங்கமரின் மூத்த மகன். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவது ஆகும். இவரது ஆட்சியின்போது, ஹொய்சாலப் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இவருடைய தம்பிகளில் ஒருவர்தான் புக்காராயன் எனும் புக்கர்.தனது சகோதரன் ஹரிஹரருடன் இணைந்து, விஜயநகரப் பேரரசை நிறுவியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஹரிஹரரின் மறைவுக்குப் பின், புக்காராயன் அரசன் ஆனார். புக்கரின் 21 ஆண்டு கால ஆட்சியில்தான், நாட்டின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டன. தென்னிந்திய அரசுகளைத் தோற்கடித்து, அந்தப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
1360-ல் ஆற்காட்டுச் சம்புவராயரும், கொண்டவிடு ரெட்டிகளும், புக்காராயனிடம் தோற்றனர். 1371-ல் மதுரையில் இருந்த சுல்தானைத் தோற்கடித்து, பேரரசின் எல்லைகளை தெற்கே ராமேஸ்வரம் வரை விரிவுபடுத்தினார் புக்கர். இவர் காலத்தில்தான், பேரரசின் புகழ்பெற்ற தலைநகரமாக விஜய நகரம் மாறியது. 40 கி.மீ.(அவர் தூரத்தை லீக் என்ற அள வீட்டில் குறித்திருக்கிறார்) அளவு பெரியதாக இந்த நகரம் இருந்தது என்கிறார், பெர்னாவோ நுனிஸ் என்ற போத்துக்கீசியப் பயணி. இவர் ஒரு குதிரை வணிகர். இன்று உள்ள ஹம்பி, அதன் அருகில் உள் கமலாபுரா கிராமம், அங்கிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள ஹோஸ்பெட் ஆகியவையும் விஜய நகருக்குள் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார்.1420-ம் ஆண்டு இந்த நகரைப் பார்வையிட வந்த நிகோல கோண்டி என்ற இத்தாலியப் பயணி, இந்த நகரம் 60 மைல் சுற்றளவுகொண்டது என்று வியந்து கூறி இருக்கிறார். அதுபோலவே, 1522-ல் விஜயநகரத்துக்கு வந்த போர்த்துக்கீசிய யாத்ரீகர் பயாஸ், இது ரோம் நகரைப்போல அழகான பூந்தோட்டங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. துங்கபத்திரை ஆற்றின் அழகும், அதை ஒட்டி அமைக்கப்பட்ட மாடமாளிகைகளும் கண்ணைக் கவருகின்றன. 2892 கி.மீ. நீளமுள்ள கடற்கரைகொண்டது விஜய நகரம் என்று பாராட்டி இருக்கிறார்.14-ம் நூற்றாண்டில் தொடங்கி 200 ஆண்டு களுக்கும் மேலாக இந்த நகரம் புகழ்பெற்று விளங்கி இருக்கிறது. விஜய நகரப் பேரரசில் கிராம எல்லைகளைக் குறிக்க திரிசூல அடை யாளம் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடப்பட்டன. அந்தக் கற்களை, பிற்காலத்தில் சிறுதெய்வமாக மக்கள் வழிபடத் தொடங்கினர் என்கிறார் பர்போசா. விஜயநகர ஆட்சியின்போது கோட்டைச் சுவருடன் உள்ள சிறிய நகரங்கள் பல உருவாக்கப்பட்டு இருந்தன. நகரங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மனிதர்கள் வசித்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ரஷ்யப் பயணி நிக்கிதின்.விஜய நகரப் பேரரசின் படைப் பிரிவில் 24,000 குதிரைகளும், ஒரு லட்சம் வீரர்களும் இருந்தனர். ஒரு படை வீரனுக்கு மாதச் சம்பளம் ஐந்து வராகன். படைப் பிரிவின் தலைமை அதிகாரிக்கு ஆண்டுக்கு 47,000 வராகன். மெய்க்காப்பாளருக்கு ஆண்டுக்கு 600 முதல் 1,000 வராகன் வழங்கப்பட்டது.
விஜய நகர அரண்மனையில் மல்யுத்தம் புகழ்பெற்று விளங்கியது. அங்கே, ஆயிரம் மல்லர்கள் இருந்தனர். அரசனின் அனுமதியோடு வரையறை செய்யப்பட்ட ஆயுதங்களை ஏந்தி இவர்கள் மற்போர் செய்வது வழக்கம். புக்கரின் மகனான குமார கம்பணன் காலத்தில், துருக்கி சுல்தானின் தளபதியாகஇருந்த அலாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை நகரம் கவனிப்பு இல்லாமல் இருந்தது. 1371-ல் குமார கம்பணன், மதுரை மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவி கங்கம்மா தேவி எழுதிய 'மதுரா விஜயம்’ என்ற சம்ஸ்கிருதக் காவியம் இந்த நிகழ்ச்சியை விரிவாக வர்ணிக்கிறது. அதன் பிறகு விஜய நகரத்துக்கு, மதுரை கப்பம் கட்டியது.இந்தக் காலகட்டத்தில், தெலுங்கர்களும் கன்னடர்களும் அலுவலர்களாகவும் போர் வீரர்களாகவும் வணிகர்களாகவும். கூலி ஆட்களாகவும் தமிழ்நாட்டில் குடியேறினர்.விஜய நகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் நிர்வாக முறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. சோழர் காலத்தில் மண்டலம், கோட்டம், நாடு, ஊர் என்று பிரிக்கப்பட்டு இருந்தன. விஜய நகர ஆட்சிக் காலத்தில், ராஜ்யம், கோஷ்டம், சீமை, ஸ்தலம் எனப் பிரிக்கப்பட்டன. இவற்றில், நாடு என்பதே சீமை என அழைக்கப்பட்டது. இன்றும்கூட, உள்ளூரில் தயாரிக்கப்படும் பொருட்களை நாட்டுச் சரக்கு என்றும் வெளியூர்ப் பொருட்களை சீமைச் சரக்கு என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாகவே, வெள்ளைக்காரர்களை சீமைக்காரர் என்று அழைத்தனர். வெள்ளைக்காரன் விற்பனை செய்த பொருட்கள் சீமைத் துணி, சீமைச் சாராயம், சீமைச் சரக்கு என அழைக்கப்பட்டன.தமிழகத்தில் பிற்கால சோழர் காலம் தொட்டு கிராமத் தன்னாட்சி முறை நடைமுறையில் இருந்தது. வரி வாங்கவும், கோயில் குளங்களைப் பராமரிக்கவும் பஞ்ச காலத்தில் வரி தள்ளுபடி செய்யவும், கோயில் நிலங்கள், பொதுச் சொத்துக்கள் ஆகியவற்றை நிர்வகிக்கவும் பாசன வசதி, சந்தை, தானிய சேமிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை தானே திட்டமிட்டு வகுத்துக்கொண்டு உள்ளுர் வருவாயை உருவாக்கிக்கொள்ளும் உரிமை கிராமத்துக்கு இருந்தது.
விகடன்
No comments:
Post a Comment