Thursday, May 31, 2012

கட்டண உயர்வால் கதறும் மக்கள்! மாதந்தோறும் கட்டுவது மாதிரி மாற்றக் கூடாதா?


வாட்டி எடுக்கும் கோடை வெயில் போதாது என்று, மக்களின் வயிறையும் எரிய வைக்கிறது, தமிழக மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு. 
கடந்த மார்ச் 30-ம் தேதி, தமிழ்நாடு மின்​சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி வீடு​களுக்​கான மின்கட்டணம், யூனிட் ஒன்றுக்கு 2.80 ரூபாயில் இருந்து 5.75 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு ஏப்ரல், மே மாதங்களுக்கான கட்டணத்தை இந்த ஜூன் மாதம்தான் செலுத்தப் போகிறார்கள். முன்பை விட இரண்டு பங்கு அதிகமாகக் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் மக்கள். எதிர்பாராத கட்டண உயர்வால், மின்சார நுகர்வோர்கள் வெடிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இந்தக் கூடுதல் தொகையை செலுத்துவதில் இருந்து விமோசனம் வேண்டி ஒரு கோரிக்கையை  முன்வைக்கிறார்கள்.
தமிழகத்தில் மின்வாரியம் தொடங்கப்பட்டதில் இருந்து நீண்ட காலமாக, மாதம்தோறும் கட்டணம் செலுத்தும் முறைதான் இருந்து வந்தது. மாதத்தின் கடைசி 15 நாட்களில், கணக்கீடும் அடுத்த 15 நாளில் கட்டண வசூலும் செய்யப்பட்டது. திடீரென 87-ம் ஆண்டு, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறைகட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. இப்போது கட்டணம் கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், மாதம் தோறும் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.
இதுகுறித்துப் பேசும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நிஜாமுதீன், ''மின்சார நுகர்வோர்களில் 80 சதவிகிதம் பேர், வாங்கும் சக்தி குறைவானவர்கள். இப்போது அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வைத் தாங்கும் நிலையில் இவர்கள் இல்லை. இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால், ஒரே நேரத்தில் அதிக அளவில் கட்டணம் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு மாதமும் என்றால் தொகை குறைவாக வரும், செலுத்துவதும் எளிது. இணையதளம் மூலம் அதிகம் பேர் மின் கட்டணம் செலுத்திவரும் நிலையில், நுகர்வோருக்கு வசதியாக மாதம்தோறும் கட்டணம் வசூலிக்கும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்'' என்றார், அழுத்தமாக.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்பிரமணியனோ, ''மின் வாரியத்தில் நவீனமயம் எனும் பெயரில், திட்டமிட்டுப் பணிஇடங்களை நிரப்பாமல் இருக்கிறார்கள். 9,000 பேர் செய்யவேண்டிய மின்கணக்கீட்டுப் பிரிவில் 2,500 பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால், ஊழியர்களுக்கு அதிக வேலைப் பளுவும் நுகர்வோருக்குச் சிரமங்களும் ஏற்படுகிறது. அதன் ஒரு பகுதிதான், இன்றையக் கட்டணம் செலுத்தும் முறையின் பிரச்னைகள்.
மேலும் 88-ம் ஆண்டிலேயே அகற்றப்பட வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்று இலக்க மீட்டர்கள், இன்னும் ஏராளமான இடங்களில் இருக்கின்றன. இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் வாரியப் பணியாளர் கணக்கீட்டுக்குச் செல்லும்போது, இந்த மீட்டர்களில் ஒரு சுற்று முழுவதும் சுற்றி முடித்து விடுகின்றன. அந்த மீட்டர்களின் அளவிடப்படாத மின்பயன்பாடு கணக்கில் இல்லாமல், மின் வாரியத்துக்கு பெரும் இழப்பாகிறது. மீண்டும் பழையபடியே மாதத்துக்கு ஒரு முறை கட்டண வசூல் எனக் கொண்டுவந்தால், வருவாய் சீர்குலைவு ஏற்படாமல் தடுக்க முடியும். நுகர்வோருக்கும் வசதியாகவே இருக்கும்'' என்றார்.
மின்சார நுகர்வோர்களின் இந்த நீண்ட காலப் பிரச்னை குறித்து, மின் வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபாலிடம் கேட்டோம். ''தமிழகத்தில் 1 கோடியே 40 லட்சம் வீட்டு மின்சார நுகர்வோர்கள் இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் 2,700 கட்டண வசூல் மையங்கள்தான் இருக்கின்றன. இந்த மையங்களில் அவ்வளவு வீட்டு நுகர்வோர்களும் மாதம்தோறும் திரண்டால், சமாளிக்க முடியாது. மொத்த சிஸ்டமும் பாதிக்கப்படும். போதுமான அளவுக்கு எங்களிடம் ஊழியர் இல்லை. 26 வருடங்களாக இரு மாதக் கட்டண முறை, வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மாதத்துக்கு ஒருமுறை என மாற்றுவதால், நுகர்வோருக்கு எந்த லாபமும் இல்லை. பலபேர் புரியாமல் பேசுகிறார்கள். இதுகுறித்து அரசு பல முறை விளக்கம் கொடுத்து விட்டது. இருந்தாலும் இதை ஒரு குறையாக நினைப்பவர்கள், அரசுக்கு மனு கொடுக்கலாம்'' என்றார்.
மக்கள் கோரிக்கைக்கு விளக்கம் வேண்டாம், தீர்வுதான் வேண்டும்!

No comments:

Post a Comment