Thursday, May 31, 2012

ஸ்ட்ரீட் ரேஸ் - சென்னை



ஸ்ட்ரீட் ரேஸ்.... சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பரபரப்பான நகர டிராஃபிக்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப்படும் பைக் ரேஸ் பயங்கரங்களை அறிவீர்களா?'கட்டுப்படுத்திவிட்டோம்’ என்று போலீஸார் அடித்துச் சொன்னாலும், 'வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன்றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில ரேஸ்களின் விதிகள்... பைக்கின் கிளட்ச், பிரேக் முதலியவை பயன்படுத்தக் கூடாது, சிக்னல் சிவப்புக்கு நிற்கக் கூடாது என்றெல்லாம் திகில் கூட்டுகின்றன.

இந்த பைக் ரேஸ்கள் எப்படித்தான் நடத்தப்படுகின்றன?

ஆதி முதல் அந்தம் வரை அறிந்துகொள்ள முயற்சித்தேன். நண்பரின் நண்பர் மூலம் பென்சில் ஸ்ட்ரெட்ச் மற்றும் ஜிக்ஜாக் பைக் ரேஸ்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.பென்சில் ஸ்ட்ரெச் என்றால், சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஒரே நேர்க்கோட்டில் பறந்து இலக்கை மிகக் குறைந்த நேரத்தில் கடப்பது. லயோலா கல்லூரி சாலையில் வைத்து கறுப்பு கரிஷ்மாவை உறுமவைத்துக்கொண்டு இருந்தான் அந்தச் சுள்ளான். பில்லியனில் ஏறி அமர்ந்தால், ஒட்டகத்தின் மீது அமர்ந்ததுபோல செம உயரம். செமத்தியாக உறுமிவிட்டு எடுத்த எடுப்பில் எழுபதைத் தொட்டது கரிஷ்மாவின் ஸ்பீடாமீட்டர். ஒரே நொடியில் உயிர் பயத்தைக் காட்டிவிட்டான் சுள்ளான். கண்களை மூடிக்கொண்டேன்.  கார்ட்டூன் படங்களில் வில்லனை ராக்கெட் நுனியில் கட்டி அனுப்புவார்களே... சத்தியமாக அப்படித்தான் இருந்தது. டிராஃபிக் இல்லாத அந்த அதிகாலை வேளையில் நம்பினால் நம்புங்கள்... முழுதாக ஒரே நிமிடம்தான்... மூன்று கிலோ மீட்டர்களைக் கடந்து ஸ்கைவாக் அருகே வந்து சேர்ந்தோம். பைக்கை நிறுத்திய நொடி விருட்டென்று தாவி இறங்கினால் கண்களில் பூச்சி பறக்க... காலுக்குக் கீழே சாலை நழுவியது!'ஈவ்னிங் சிக்ஸ்... ஹாரிங்டன் ரோடு... ஜிக்ஜாக்!'' என்று சங்கேத பாஷைபோலச் சொல்லிவிட்டுப் பறந்துவிட்டான் சுள்ளான்.மாலை 6 மணி... போக்குவரத்து நெரிசலில் பிதுங்கி வழிந்துகொண்டு இருந்தது ஹாரிங்டன் சாலை. குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டு அந்த பல்சரில் ஏறி அமர்ந்தேன். கியர் தட்டிப் புறப்பட்டு நூறைத் தொட்ட பின் அதில் இருந்து இம்மியும் குறையவில்லை வேகம். அவ்வளவு நெரிசலிலும் பாம்பு போல வளைந்து நெளிந்து பறந்தது பைக். முன் பின் செல்பவர்கள் பைக்கின் உறுமல் சத்தத்துக்கே வழிவிட்டுத் தெறித்தார்கள். 'ஜஸ்ட் மிஸ்’ஸில் சிக்னல் சிவப்பைக் கடந்தான் பையன். டிராஃபிக் கான்ஸ்டபிள் ஊதிய விசில் பகீர் கிளப்பியது. மாநகரப் பேருந்துக்கும் மெட்ரோ வாட்டர் லாரிக்கும் நடுவே லேசாக உரசி சைக்கிள் கேப்பில் பறந்தது பைக்.  ஸ்டெர்லிங் சாலை பெட்ரோல் பங்க்தான் எண்ட் பாயின்ட். பைக்கில் இருந்து இறங்கி நீண்ட நேரத்துக்குப் பிறகும் வயிற்றைக் கலக்கிக்கொண்டே இருந்தது.

'பிரதர்... இதெல்லாம் தப்பு இல்லையா? பப்ளிக்கை இப்படித் தொந்தரவு பண்ணலாமா? போலீஸ் பிடிச்சா என்ன சொல்வீங்க?'' என்று கேட்டேன். ''ஹ... எங்களை சேஸ் பண்ணிப் பிடிக்க சென்னை சிட்டி யில ஒரு போலீஸ்கூடக் கிடையாதுங்க. ஏன், சோழாவரம் பைக் ரேஸர்கள்கூட எங்களைப் பிடிக்க முடியாது. ஏன்னா, அவங்களுக்கு டிராக்குல மட்டும்தான் ஓட்டத் தெரியும். டிராஃபிக்ல ஓட்ட எங்களுக்குத்தான் தெரியும். சரி... வாங்க அடுத்து மவுன்ட் ரோட்ல ஒரு ஜெர்க் போடலாமா?'' என்று அழைத்தான். தலைக்கு மேலே கும்பிடு போட்டு இடத் தைக் காலி செய்தேன்.பிறகு, பைக் ரேஸ் விவரங்களை விசாரித்தால், டாப் கியரில் கிறுகிறுப்பு தட்டுகிறது.டிராக் ரேஸ்களைப் போலவே பக்கா பகீர் விதிமுறைகளுடன் சென்னையில் நடக்கின்றன ஸ்ட்ரீட் ரேஸ்கள். ஃபார்முலா 1 முதல் ஃபார்முலா 7 வரை பல பிரிவுகளாகப் பிரித்து விதவிதமாக ரேஸ் நடத்துகிறார்கள். பல்ஸர் 180, பல்ஸர் 220, யமஹா ஆர்-15, கரிஷ்மா, அப்பாச்சி, யமஹா ஆர்.எக்ஸ் 100 இவையே ரேஸுக்கான பைக்குகள்.

ஃபார்முலா 1: ரேஸுக்கு அறிமுகமாகும் பொடிப் பையன்களுக்கான வரவேற்புப் பிரிவு. அதிகாலை அல்லது இரவு 10 மணிக்கு மேல் வெறிச்சோடிய சாலைகளில் நடக்கும். பைக்கை டியூன் செய்யக் கூடாது. அடையாறு பாலம் தொடங்கி கலங்கரை விளக்கம் சிக்னலுக்கு முன் முடியும் இந்த ரேஸ். ஐந்து நிமிடங்களுக்குள் வந்து சேர வேண்டும். 1,000 ரூபாய் அல்லது பீர் பார்ட்டி... இதுதான் பந்தயம்.

ஃபார்முலா 2: தாம்பரம், மதுரவாயல், கானாத்தூர் புறநகர் பைபாஸ், கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பக்கம் பகல் நேரங்களில் நடக்கும் ரேஸ். டபுள்ஸ் கட்டாயம். 10 கி.மீ. பயண தூரம். பைக் டியூனிங் கூடாது. சைலன்ஸரின் உள்ளே இருக்கும் மப்ளரை வெட்டக் கூடாது. ஹெல்மெட் கட்டாயம். பந்தயத் தொகை 5,000 தொடங்கி 10 ஆயிரம் வரை!

ஃபார்முலா 3: காந்தி சிலை டு ராயபுரம் அல்லது காந்தி சிலை டு திருவான்மியூர் ரூட். பைக் நன்றாக ஓட்டத் தெரிந்த ரேஸர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும். மிதமான போக்குவரத்து இருக்கும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணிக்குள் ரேஸுவார்கள். ஹெல்மெட் அணியக் கூடாது. பந்தயம் பணம் மட்டுமே. 10 ஆயிரம் தொடங்கி 20 ஆயிரம் வரை.

ஃபார்முலா 4: காந்தி சிலையில் இருந்து ராயபுரம் சென்று அங்கு குறிப்பிட்ட நபரிடம் இருக்கும் ரகசிய எண் எழுதப்பட்ட அட்டையை வாங்கிக்கொண்டு, ஜெமினி வழியாக வடபழனி லட்சுமண் - ஸ்ருதி சிக்னல் வரை சென்று அங்கு இன்னோர் அட்டையைப் பெற்றுக்கொண்டு காந்தி சிலை வர வேண்டும். டபுள்ஸ் கட்டாயம். பந்தயத்தை நடத்துபவர்களின் பிரதிநிதிகள் பயண தூரம் முழுக்கப் பயணித்துக் கண்காணிப்பார்கள். நேரக் கணக்கு இல்லை. முதலில் வருபவரே வெற்றியாளர். பந்தயத் தொகை 20 ஆயிரம் தொடங்கி 40 ஆயிரம் வரை.

ஃபார்முலா 5: சென்னையின் குறிப்பிட்ட இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களே இதில் பங்கெடுக்கிறார்கள். பல்ஸர் மற்றும் அப்பாச்சி பைக்குகளில் பூந்தமல்லி நெடுசாலையில் தாசப்ரகாஷ் ஹோட்டல் அருகே தொடங்கி, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாநகராட்சிப் பூங்கா வரை. காலை மற்றும் மாலையின் பீக் ஹவர்களில் மட்டுமே இந்த ரேஸ் நடக்கும். 5,000 தொடங்கி 20 ஆயிரம் வரை பந்தயம். சைலன்சரில் சின்ன மாற்றம் மேற்கொள்வதன் மூலம் செம விர்ர்ர்ரூம் சத்தத்தையும் அதிக புகையையும் கிளப்பு வார்கள்.  

ஃபார்முலா 6: மெக்கானிக்குகளுக்கு இடையே  நடத்தும் ரேஸ் இது. கலங்கரை விளக்கு முதல் திருவொற்றியூர் வரை. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும். ஒரு டீமூக்கு இரண்டு பைக்குகள். டபுள்ஸ் கட்டாயம். இரண்டில் எந்த பைக் முந்தி னாலும் அணிக்கு வெற்றிதான். மொத்தம் ஐந்து அணிகள் களத்தில் இருக்கும். பந்தயத் தொகை 50 ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை. போட்டி தொடங்கும் முன்னே நடுவரின் சாட்சிக் கையெழுத் துடன் பந்தயத் தொகைக்குப் பத்திரம் எழுதிவிடுவார்கள். பெரும்பாலும் பல்ஸர் 220-தான் இந்தப் பந்தயத்தில் பறக்கும். குறிப்பிட்ட ஐந்து இடங்களில் பைக்கை ஜிக்ஜாக் செய்து, மெயின் ஸ்டாண்டை சாலையில் உரசி தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். இதைக் கண்காணிக்க ஸ்பாட்டில் ஆட்கள் இருப்பார்கள். பீக் ஹவரில் நகர நெரிசலில் தொடங்கி வட சென்னையின் புழுதி பறக்கும் சாலை கன்டெய்னர் லாரி டிரைவர்கள் வரை கண்ணில் விரல்விட்டு ஆட்டிவிடுவார்கள் இந்த ரேஸர்கள். சைலன்சர் மட்டும் அல்ல, இன்ஜின் மற்றும் பெட்ரோல் டேங்குகளிலும் சிற்சில மாற்றங்களை மேற்கொண்டு பைக்கின் வேகத் திறனை அதிகரிப்பார்கள்.

ஃபார்முலா 7: செம டெரர் ரேஸ் இது தான். தேர்ந்த மெக்கானிக்குகள், கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள்எனக் கலந்து கட்டிய ரேஸர்கள் பங்கெடுக்கும் ரேஸ். இரண்டு இரண்டு பைக்குகளாக 10 அணிகள் களம் இறங்கும். ஒரே சாலையில் அத்தனை பைக்குகளும் சென்றால் சிக்கிக் கொள்வார்கள் என்பதால், ஒவ்வோர் அணிக்கும் ஒவ்வொரு ரூட். அனைத்து ரூட்டுகளும் சரியாக ஐந்து கி.மீ. தூரம் இருக்கும். ஹெல்மெட் அணியக் கூடாது. சைடு ஸ்டாண்டை மடக்கக் கூடாது. பைக்கை ஜிக் ஜாக் செய்து ஐந்து இடங் களில் தீப்பொறி பறக்கவைக்க வேண்டும். சமயங்களில் பந்தயத் தொகையைப் பொறுத்து பைக் பிரேக்கின் க்ரிப் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். சிக்னலில் நிற்கக் கூடாது. இவை இந்த ரேஸின் கண்டிப்பான விதிமுறைகள்.

கடும் போக்குவரத்து நெரிசலில் மட்டுமே நடக்கும் இந்த ரேஸில் வேகத்தைக் குறைக்க பிரேக் பிடிக்க மாட்டார்கள். கியர்கள் மூலமே வேகத்தைக் கட்டுப்படுத்தி, முழு த்ராட்டிலிலேயே பறப்பார்கள். எவ்வளவு போக்குவரத்து நெரிசலிலும், வளைந்து நெளிந்து கட் அடித்துச் செல்வது இவர்களின் முதுகெலும்பைச் சிலிர்க்கச் செய்யும் ஸ்பெஷாலிட்டி. ரேஸின்போது வேறு வழி இல்லாமல் சிக்னலில் வண்டியை நிறுத்தியவர்கள், போலீஸிடம் மாட்டியவர்கள், தடுமாறிக் கீழே விழுந்தவர்கள், விபத்தை ஏற்படுத்தியவர்கள் வாழ்நாள் முழுக்க மீண்டும் ரேஸில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.இந்த ரேஸில் கலந்துகொள்ளும் பைக்குகளின் மதிப்பு ஏழெட்டு லட்சங்களை நெருங்கும். தவிர, ரீ-மாடிஃபிகேஷனுக்கு ஓரிரு லட்சங்களை இறைத்திருப்பார்கள். பந்தயத் தொகை ஒரு லட்சம் தொடங்கி 10 லட்சம் தாண்டியும் எகிறும். அதிக ரேஸ்களில் ஜெயித்த பைக்கும் சமயங்களில் பந்தயமாக வரும். இதில் பெரும்பாலும் பைக்கை ஓட்டுபவர் பணம் கட்ட மாட்டார். குதிரைப் பந்தயத்தில் குதிரையை ஓட்டும் வீரன்போலத்தான் இதில் பைக்கை ஓட்டு பவரும். உயிரைப் பணயம் வைத்து பைக் ஓட்டுபவருக்குச் சம்பளம் 10 ஆயிரம் மட்டுமே. ஜெயித்த ரேஸர்களுக்கு பந்தயத் தொகையைப் பொறுத்து ஆயிரங்களில் தொடங்கி லட்சம் வரை போனஸ் கிடைக்கும்.இந்த ரேஸ் கொடுக்கும் விறுவிறு போதை இளைஞர்களைச் சுண்டி இழுக்கிறது. ஆனால், இதன் மறுபக்கம்... தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இளங்கோ, வாகன விபத்துகளில் ஏற்படும் தலைக் காயம் உண்டாக்கும் பகீர் விளைவுகளைப் பட்டியலிடுகிறார். ''தலைக் காயம் ஏற்படும்போது மண்டையின் சருமம் கிழிந்து, மண்டையோட்டு எலும்புகள் நொறுங்கும். மூளையைப் பாதுகாக்கும் மூளை உறையில் ரத்தம் உறைந்துவிடும். மூளையின் உள்ளே நிரம்பியிருக்கும் திரவம் ரத்தம் கலந்து காதில் வழியும். கண்ணுக்குச் செல்லும் நரம்புகள் அறுந்து கண் பார்வை பாதிக்கும்.       மூளைக்கு ரத்தம் செல்லும் நாளம் வெடித்து, மூளையின் உள்ளேயும் ரத்தம் உறைந்துவிட்டால்... அது கிட்டத்தட்ட மரண நிலைதான். மூளையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் உயரும். மூளையின் செல்கள் இறந்ததாலும் ரத்த இழப்பாலும் உடனடியாக உடலின் தாதுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு, சிறுநீரகமும் பாதிக்கும்! விபத்து நடந்த இடத்திலேயே அடிப்படை முதலுதவிகள் அளித்து உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கவில்லைஎன்றால், வாழ்க்கையே கேள்விக்குறியில் முடியும்!'' என்கிறார்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் பைக் ரேஸ்கள் மிக அதிக அளவில் நடக்கும். போலீஸ் கண்காணிப்பு என்பதே கிட்டத்தட்ட இல்லாமல் இருந்தது. ஆனால், சமீப வருடங்களில் கொஞ்சம் கெடுபிடி காட்டினார்கள். இப்போது சிறுமி ஷைலஜாவின் மரணத்துக்குப் பிறகு கெடுபிடி இன்னும் இறுகி இருக்கிறது. இருந்தாலும் ஸ்ட்ரீட் ரேஸர்கள் அசருவதாக இல்லை. இப்போதும் தினமும் ஒரு ரேஸ் சென்னையின் ஏதோ ஒரு மூலையில் விறுவிறுத்துக்கொண்டேதான் இருக்கிறது.

விகடன்

No comments:

Post a Comment