* வர்த்தக நகரமாகவும், வேளாண் நகரமாகவும் சிறந்து விளங்கும் ஊர் சேலம். சேலத்தைச் சுற்றி கஞ்சமலை, கொல்லிமலை, பெருமாள் மலை, சேர்வராயன் மலை என ஏகப்பட்ட மலைகள் இருக்கின்றன. ‘சைலம்’ என்றால் மலை. சைலம் என்பதே சேலமானதாகச் சொல்வதுண்டு.
* சேலம் மக்கள் கடும் உழைப்பாளிகள். கிணறு தோண்டுவது, கட்டடம் கட்டுவது, சுரங்கவேலை, ரோடு போடுவது போன்ற கடினமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகம்.
* கைத்தறி நெசவுக்குப் பெயர் போன ஊர் என்பதால் வீடுகளிலேயே தறி போட்டு நெய்வார்கள். வெள்ளிப் பட்டறை, செயற்கை ஆபரணக்கல் தொழிற்சாலைகளில் பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள்.
* சினிமா பிரியர்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி நடித்த படங்கள் இன்றைக்கும் வசூலை வாரி இறைக்கும். இரவுக் காட்சி பார்த்துவிட்டு, பக்கத்து ஊர்களுக்குச் செல்பவர்களுக்காகவே ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும். ரசிகர் மன்றங்கள் அதிகம்.
* சேலம் பஸ் ஸ்டான்ட் இரவு நேரத்திலும் விளக்கொளி மின்ன பரபரப்பாக இருக்கும். மல்லி, கனகாம்பரம், கதம்பம், பழங்கள், இனிப்பு, காரம், சூடான இட்லி, பரோட்டா என நடு நிசி ஒரு மணிக்குக்கூட வியாபாரம் ஜரூராக நடக்கும்.
* உணவு விஷயத்தில் படு ரசனையானவர்கள். அசைவ உணவு அதகளப்படும். காடை, கவுதாரி, உடும்பு, முயல் என வறுத்தும், பொரித்தும் தரும் சாலையோர உணவுக் கடைகள் மிக அதிகம்.
* முன்பெல்லாம் கிராமப்புறங்களில் ஒரு நாள் திருமணங்கள் நடக்கும். முதல் நாள் இரவு பெண் வீட்டார் புறப்பட்டு, மறு நாள் காலை மணமகன் வீட்டுக்கு வருவார்கள். தாலி கட்டியதும், மாலையும் கழுத்துமாக நடத்தியே ஊர்கோலம் செய்வித்து விடுவார்கள்.
சாதம், கத்திரிக்காய் குழம்பு, அப்பளம், வடை, உருளைக் கிழங்குக் கறி, மோர், வெல்ல பாயசம் என விருந்து சிம்பிளாக முடிந்துவிடும். ஆனால் இரண்டு நாளைக்கு மைக், லவுட் ஸ்பீக்கர் கட்டி, சினிமா பாடல்கள், ஒலிச் சித்திரங்களை ஒளிபரப்பி என்டர்டெயின் செய்வார்கள்.
* தற்போது சத்திரம் எடுத்து, ஃப்ளெக்ஸ் பேனர் கட்டி, இசைக்கச்சேரி, டபுள் வீடியோ, என அசத்துகிறார்கள்.
* தள்ளுவண்டி மற்றும் கயிற்றுக் கட்டில் கடைகளைக் காணலாம். பெரிய எவர்சில்வர் தவலைகளில் ஜில்லென்ற கம்பங்கூழ் விற்பார்கள். சுவையான, சத்தான இந்தக் கூழுக்குத் தொட்டுக் கொள்ள தரப்படும் மாங்காய் பத்தை, வெங்காயம், சுட்ட மிளகாய், மோர் மிளகாய், சுண்டை வற்றல் போன்றவை அமிர்தமாக இருக்கும்.
* தெய்வபக்தி மிக்கவர்கள். முருகன் கோயில்களில் பங்குனி உத்திரமும், அம்மன் கோயில்களில் ஆடிப் பூரமும் விசேஷம். தீ மிதி, அலகுக் குத்தல் போன்றவற்றை பெரிய ஆஃபீஸர்கள் கூட செய்வார்கள். குறிப்பாக சேலம் கோட்டை மாரியம்மனுக்கு நடக்கும் பூச்சொரிதலும், வண்டி வேடிக்கையும் மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். பெரும் தனவந்தர்கள் கூட கடையை மூடிவிட்டு, சாமி கும்பிட வந்துவிடுவார்கள்.
* சேலம் டவுன் பகுதியில் உள்ள ராஜ கணபதியும் மிகுந்த சக்தி வாய்ந்த பிள்ளையாராக அருள் பாலிக்கிறார். தினமும் அவருக்குப் பூசை வைத்த பின்பே, வியாபாரிகள் தொழிலைத் தொடங்குவார்கள். இரவுப் பணிக்குச் செல்லும் லாரி, பஸ் டிரைவர்களும் தரிசித்துச் செல்லும் வண்ணம், பிள்ளையாரை கம்பிகளின் ஊடே காண முடியும்.
* முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பிறந்தாலே சலித்துக் கொள்வார்கள். வெறுப்பு காட்டி வளர்ப்பார்கள். ஆனால், இன்று விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், பெண் சிசுக் கொலை மிக மிகக் குறைந்துள்ளது.
* போக்குவரத்துப் பிரச்னை இல்லாத ஊர். ‘பளபள’ என்று சுத்தமாகவும், லேட்டஸ்ட் சினிமா பாட்டு சி.டி. ஓட சத்தமாகவும் இயங்கும் தனியார் பேருந்துகள் ‘நான் முந்தி... நீ முந்தி...!" என போட்டிப் போட்டு பயணிகளைக் கவர்வார்கள். பஸ்களின் உள் அலங்காரங்கள் டாப்பாக இருக்கும்.
* கிராமப் பஞ்சாயத்துகளுக்கு இன்றைக்கும் மதிப்பு உண்டு. குடும்பப் பிரச்னை என்றால், அபராதம் கட்டச் செய்து அறுத்துக் கட்டி விடுவார்கள். அதன்பின் அந்த ஆணும் இன்னொரு கல்யாணம் செய்யலாம். பெண்ணும் மறுமணம் செய்து கொள்ளலாம்.
* நேர்மையான குணமும், உண்மையான அன்பும் கொண்டவர்கள். பணம் இருந்தாலும் வெளிகாட்டிக் கொள்ள மாட்டார்கள். கோயமுத்தூர்காரர்கள் போலவே கொஞ்சம் ராகம் போட்டு, செஞ்சாப்லீங்க; வந்தாப்லீங்க; அக்குறும்பா போச்சாம்லீங்க!" என்று பேசுவார்கள்.
No comments:
Post a Comment