Thursday, May 31, 2012

வருசநாடு... ஊத்தங்கரை... பழனிமலை... முருகமலை..தமிழகத்திலும் மாவோயிஸ்டுகள்?


செங்கொடி பூமியாய் தமிழகம் மாறிக்கொண்டு இருக்கிறது! 
சென்னையில் மாவோயிஸ்ட் இயக்கப் பொதுச் செயலாளர் விவேக் கைது செய்யப்பட்ட நேரத்தில், 'எனது பணியைத் தொடர்ந்து செய்ய வெளியில் ஆட்கள் இருக்​கிறார்கள். தமிழகத்தில் மாவோயிஸ்ட்களின் செயல்பாடுகள் மிக திருப்தியாக இருக்கிறது’ என்று சொல்லி இருந்தார். அப்படி என்றால் தமிழகத்தில் மாவோயிஸ்ட்கள் இருக்கிறார்களா என்று நக்சல் தடுப்பு போலீஸாரிடம் விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தகவல் எல்லாமே அதிர்ச்சி ரகம்.
''மாவோயிஸ்ட் சித்தாந்தத்தைத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் என்று கணக்கிட்டால், தமிழகத்தில் தோராயமாக  6,000 பேரைக் குறித்து வைத்துள்ளோம்.  இதில் 1,000 பேர் வழக்கறிஞர்கள், 500 பேர் சட்டக் கல்லூரி மாணவர்கள். 2007-ம் ஆண்டு ஊத்தங்கரை, முருகமலை, வருசநாடு பகுதிகளில் நக்சல்கள் பயிற்சியில் ஈடுபடுவது வெளியே தெரிந்த பிறகே, நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸ் அணி உதயமானது. தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் நக்சல் தடுப்புப் போலீஸார் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இன்னும் நக்சல்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.
கொடைக்கானல் - பழனி மலைப் பாதையில் ஒரு குழு, முருகமலை வனப்பகுதியில் ஒரு குழு, வருசநாட்டு மலைப் பகுதியில் ஒரு குழு, ஊத்தங்கரை பகுதியில் ஒரு குழு என நான்கு குழுக்கள் இருக்கின்றன. பின்தங்கிய மலைவாழ் மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அரசியல் பயிற்சி வகுப்பும், ஒரு சிலருக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கிறார்கள்.
அவர்கள் தங்கி இருக்கும் வருசநாடு, அடர்ந்த காட்டுப் பகுதியாகும். குமணந்தொழவு தொடங்கி வெள்ளி​மலை வரை சுமார் 624 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சுமார் மூன்று தலைமுறைகளாக பிற்படுத்தப்​பட்டோர், சீர்மரபினர், ஒடுக்கப்பட்டோர், ஆதிவாசிகள் என சுமார் 40 ஆயிரம் பேர் ஆங் காங்கே வாசிக்கிறார்கள்.
மே 1-ம் தேதி முதல் இந்தப் பகுதியை வனச் சரணாலயமாக மாற்றுவதாக அரசு அறிவித்து இருக்கிறது. அதனால் இவர்கள் எந்த நேரமும் இங்கிருந்து வெளியேற்றப்படலாம் என்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மாவோயிஸ்ட்கள் இந்த மக்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கப் போவ தாகத் தெரி​கிறது. அதனால், தீவிரமாக கண்காணித்து வருகிறோம்'' என்று சொன்​னார்கள்.
இதுகுறித்து, வனத்துறை அலுவலர்களிடம் விசாரித்தோம். ''மலையில் வாழும் மக்கள் யாரையும், எதற்காகவும் வெளியேற்றப்போவது இல்லை. ஆனால், காடுகளில் வசிக்கும் மக்களால் இனி தங்களது தேவைக்காக கூடுதல் இடங்களைப் பயன்படுத்த முடியாது. இதுவரை செய்து கொடுத்த அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், குடிநீர் இணைப்பு போன்றவை நீடிக்கும். புதிய வசதிகள் எதையும் ஏற்படுத்த முடியாது'' என்றார்கள்.
ஆதிவாசிகள், பழங்குடியின​ருக்கான வன உரிமைச் சட்டம், 'காடுகளில் வசிக்கும் பழங்​குடியினர், ஆதிவாசிகளை எந்தக் காரணம்கொண்டும் வெளியேற்றம் செய்யக்கூடாது. அவர்கள் அனு​பவிக்கும் நிலங்களுக்கு விவசாயப் பட்டாவும், வீட்டுப் பட்டாவும் வழங்க வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு, வேளாண்மைக்கு முழு உரிமைகள் வழங்க வேண்டும்’ என்று சொல்கிறது. ஆனால் இவை பின்பற்றப்படுவது இல்லை. அதனால்தான் இந்தியாவில் நக்சல்கள் குறித்துப் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.பந்தமாந்தாயா கமிட்டி, 'நக்சல் என்பது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை இல்லை. மக்களுக்கு எதிரான பொருளாதார நடவடிக் கைகள் எடுப்பதாலும், பூர்வகுடி மக்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுவதாலும்தான் அவர்கள் ஆயுதம் எடுக்கிறார்கள். அரசின் கொள்கைகளில் மாற்றம் வந்தால்தான், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்’ என்று சொல்லி இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள், ''வனச் சரணாலயம், புலிகள் சரணாலயம், வரையாடு சரணாலயம் என்ற பெயரில் உலக வங்கியிடம் இருந்து நிதி வாங்கி, அதை முறைகேடாகக் கொள்ளை அடிக்கவே மக்களை வெளியேற்றம் செய்கிறது அரசு. காடு வளர்ப்பு என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு காடுகளைத் தாரை வார்க்கப்போகிறார்கள். இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு மலைப் பகுதிகளில் எஸ்டேட்கள், தோட்டங்கள், மாளிகைகள், கல்லூரிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இவற்றை மீட்க எந்த அரசும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால், பூர்வகுடி மக்களை மட்டும் விரட்டப் பார்க்கிறது.
மஞ்சம்பட்டி என்ற மலைக் கிராமத்​​தில் வாழ்ந்த 64 குடும்பங்களை சமீபத்தில் அரசு வம்படியாக வெளி​யேற்றம் செய்தது. அவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்றாலும், அந்த மக்களால் கீழே உள்ள வாழ்க்கைக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடிய​வில்லை. அதனால் பலர் மீண்டும் மலைக்குப் போகவே முயற்சி செய்கிறார்கள். அவர்கள் உரிமை மறுக்கப்படும் நேரத்தில் அவர்கள் மாவோயிஸ்ட்களாக மாறுகிறார்கள்'' என்று அரசை குற்றம் சாட்டினர்.
மக்களை வெளியேற்றுகிறோம் என்று சொல்லி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மாவோயிஸ்ட்​டுகளை உருவாக்குவதாக மட்டுமே அமைந்து​விட்டது!

No comments:

Post a Comment