5வது ஐ.பி.ல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். எங்கள் மாநிலம் ஏழை மாநிலம் எனவும், அதனால் வீரர்களுக்கு பரிசளிக்க எங்களிடம் எதுவும் இல்லாததால் எங்கள் அன்பை அவர்களுக்கு பரிசளிக்கிறோம் எனவும் மம்தா கூறியுள்ளார்.
ஆனால் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து, கோப்பை வென்ற வீரர்களுக்குப் பாராட்டு விழா நடத்த இருப்பதாகவும் மம்தா கூறியுள்ளார். திறந்தவெளியில் நடைபெற உள்ள இவ்விழாவைக் காண யாரும் டிக்கெட் பெற வேண்டியதில்லை எனவும், முதலில் வருபவர்களுக்கு விழாவைக் காண முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் மைதானம் 60,000 இருக்கைகளைக் கொண்டது.
கொல்கத்தா அணி வீரர்கள் இன்று மாலை, சென்னையிலிருந்து விமானம் மூலம் கொல்கத்தா சென்றடைகின்றனர். மாநில அரசு சார்பாக அமைச்சர்கள் சிலர் கலந்துகொண்டு, விமான நிலையத்தில் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. வெற்றிக் கோப்பையுடன் கொல்கத்தா வீரர்களை அங்குள்ள விக்டோரியா பகுதியிலிருந்து, மகாகரன் பகுதி வரை ஊர்வலமாக அழைத்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் அணியின் வெற்றியை மேற்குவங்க மக்களுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment