Wednesday, May 2, 2012

'அடடா அடடா ஆதீனமே ஆடுது!''





டத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிப்பார்கள்’ என்ற பழமொழிக்கு புதிய உதாரணமாக ஆகி விட்டார் நித்தியானந்தா! 
  ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதா சகிதம் மதுரை ஆதீன மடத்துக்கு விசிட் அடித்துவிட்டுப் போனார் நித்தியானந்தா. அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள். 'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் நடி கையுடன் வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று விருந்தாளியாக வந்தவரே... இன்று மதுரை ஆதீனமாக மாறிவிட்டார்.
சம்பந்தம் இல்லாவிட்டாலும் தானே போய் சர்ச்சையில் சிக்கிக்​கொள்பவர் மதுரை ஆதீனம். கடந்த 2004-ம் ஆண்டு தன் அத்தை மகளின் மகனான சுவாமிநாதனை ஆதீனத்தின் இளவரசராக கோலாகல விழா நடத்திப் பட்டம் சூட்டினார். மிகக்குறுகிய காலத்துக்குள், 'ஆதீன விதிகளுக்கு விரோதமாகச் செயல்படுவதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்கி, சுவாமிநாதனை மடத்தை விட்டு விலக்கியும் வைத்தார். இந்த வில்லங்கமே இன்னமும் முழுமையாகத் தீராத நிலையில், நித்தியானந்தாவை அவசர கதியில் அடுத்த குரு மகா சந்நிதானமாகத் தேர்வு செய்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஆதீனம்.
தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானத்திடம் இதுகுறித்துப் பேசினோம். ''திருஞானசம்​பந்தரால் உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். சிறந்த முறையில் சைவத் தொண்டாற்றி மக்களைப் பண்புள்ள மனிதர்களாக உருவாக்கிய ஒரு பாரம்​பரியமான மடத்துக்கு, செக்ஸ் வழக்கில் சிறை சென்று வந்த ஒருவரை, இன்னும் வழக்கில் இருந்து விடுபடாத ஒருவரை, அடுத்த மடாதிபதியாக ஆதீனகர்த்தர் நியமித்து இருப்பது கண்டிக்​கத்தக்கது. வருந்தத்தக்கது. சைவப் பாரம்​பரியத்தில் வந்தவர்​களுக்கும் ஆன்மிகத்​துக்கு சிறந்த தொண்டாற்றி பல்வேறு அறிஞர்களை உருவாக்கிய சைவ சமயத்தாருக்கும் இது மாபெரும் இழுக்கு. இந்தச் செயலை சைவப் பாரம்பரியத்தில் வந்த எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, ஆதீனகர்த்தர் அவர்கள் தனது அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சைவ சமயத்துக்கு உண்மையாகத் தொண்டாற்றும் ஒருவரை நியமிக்க வேண்டும். சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13 சாதிக்காரர்கள்தான் மதுரை ஆதீனமாக வர முடியும். ஆனால், மரபுகளை மீறி, முதலியார் சாதியைச் சேர்ந்த நித்யானந்தாவை அடுத்த வாரிசாக அறிவித்திருக்கிறார் ஆதீனம். ஆதீனத்தின் செயல்பாடுகள் எல்லாமே முரண்பாடாகவே இருக்கிறது.
தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்கள், கல்லூரி​களைத் தொடங்கித் தமிழை வளர்க்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் பழைய தமிழ் நூல்களை எல்லாம் புதுப்பித்து வெளியிட்டு சேவை செய்கிறார்கள். மதுரை ஆதீனம் இதுவரை தமிழுக்காக என்ன செய்திருக்கிறார்? நித்தியானந்தா ஒரு கோடி கொடுத்தால், மடத்தை விக்கிறதுக்கு இது என்ன மாநகராட்சி டெண்டரா? அப்படியானால் நாளைக்கு இன்னொருவர் இரண்டு கோடி கொடுத்தால், அவருக்குப் பட்டம் சூட்டுவாரா? ஆதீனம் தன் இஷ்டத்துக்குச் செயல்படுவதற்கு மடம் ஒண்ணும் அவங்க பாட்டன் சொத்து இல்லை. நித்யானந்தா சைவ வேளாளரே அல்ல. அவருக்குப் பட்டம் சூட்டியது செல்லாது என்று கோர்ட்டுக்குப் போகப்போகிறோம். அரசாங்​கமும் இந்த விஷயத்தைக் கவனிக்க வேண்டும்'' என்றார்.
பெங்களூருவில் இருந்த மதுரை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு பேசி​னோம். ''எங்களைப் போல அனைத்துத் திறமைகளும் தகுதிகளும்கொண்ட ஒரு துணிச்சலான மாவீரனைத் தேடிக்கொண்டு இருந்தோம். பார்வதி தேவியும் சிவபெருமானும் நித்தியானந்தாவை அடையாளம் காட்டினார்கள். அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால், அவசர அவசரமாக நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டிவிட்டோம்'' என்றார்.
''மடம் மதுரையில் இருக்க, மகுடத்தை பெங்களூருவில் வைத்து சூட்டி இருக்கிறீர்களே?''
''நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டும் விழாவில் பிடதியில் உள்ள அவரது சிஷ்யர்களும் வெளி​நாடுகளில் இருப்பவர்களும் கலந்துக்கப் பிரியப்பட்டாங்க. அவ்வளவு பேரையும் மதுரைக்கு கூட்டிட்டுப்போறது முடியாதுங்​கிறதால நாங்களே இங்கு வந்து விட்டோம்.''
''சைவ வேளாளர் அமர வேண்டிய ஆதீனகர்த்தரின் இருக்கையில் முதலியாரான நித்தியானந்தாவை வைத்து உள்ளீர்களே?''
''அதெல்லாம் இல்லை. நித்தியானந்​தாவும் சைவ வேளாளர்தான். மதுரை ஆதீனகர்த்தராக அமர்வதற்கான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கு. இப்படிப்பட்ட ஆற்றல்மிக்க ஒரு தம்பி​ரானைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றமைக்காக, நாங்கள் இறைவனுக்கு நன்றி சொல்கிறோம். இதை நாங்கள் செய்த தவத்தின் புண்ணியமாகக் கருதுகிறோம் நித்தியானந்தாவின் வருகை ஆதீனத்துக்குப் பெருமை''
''ஒரு கோடிக்கும் தங்க சிம்மாச​னத்துக்கும் உங்களது சுயநலத்​துக்​காகவும் மதுரை ஆதீனத்தை நித்தி​யானந்தாவிடம் அடகு வைத்து​விட்ட​தாகச் சொல்கிறார்களே...''
இந்தக் கேள்விக்கு அருகில் இருந்த நித்தியானந்தாவே பதில் சொன்னார். ''நானும், நித்தியானந்தர் பீடத்தின் சீடர்களும் பீடத்தின் அசையும் அசையா சொத்துக்களும் குரு மகா சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். இனி நாங்கள் வேறு, அவர்கள் வேறு அல்ல. எங்களது அன்பின் அடையாளமாகத்தான் சந்நிதானம் அவர்களின் சமுதாயப் பணிகளுக்காக இந்தச் சிறிய தொகையை பாத காணிக்கையாகத் தந்திருக்கிறோம். வேறு எதுவும் சொல்லி இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இந்தத் தொகையை இப்போது ஐந்து கோடியாகக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து, மதுரை ஆதீனத்திடம் பேசினோம்
''நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தை வீழ்த்தி​விட்டாரா?''
''ஆதீனத்தை யாரும் வீழ்த்த முடியாது. அவருக்கு ஏராளமாய் சொத்துக்கள் இருக்கு. அதனால் எங்களை வீழ்த்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சிவபெருமான் - பார்வதி தேவியின் அஸ்திரம்கொண்டு நாங்கள்தான் அவரை வீழ்த்தி இருக்கிறோம்.''
''செக்ஸ் புகாரில் சிக்கிய ஒருவர்தான் அடுத்த மதுரை ஆதீனமாக வர வேண்டுமா, வேறு நல்ல சைவத் தொண்டர்கள் கிடைக்கவில்லையா?''
  ''செக்ஸ் புகாருக்கும் நித்தியானந்தாவுக்கும் சம்பந்தம் இல்லை. அவர், அதுபோன்ற காரியங்களில் ஈடுபடவும் இல்லை. அவரையும் ரஞ்சிதாவையும் இணைத்து பரப்பப்பட்ட செய்திகள் அனைத்துமே அப்சல்யூட்லி ராங்.
இது ஒரு பெரிய பிரச்னையா? செக்ஸ் குற்றச்சாட்டு யார் மீதுதான் இல்லை. புகார் கொடுக்கணும்னா, திருமணமாகி பிள்ளை பெற்ற அத்தனை பேர் மீதும் செக்ஸ் புகார் குடுக்கலாம். ஒரு பொம்பளைப் பிள்ளைகிட்டப் பேசுறது தப்பா? நாமெல்லாம் பெண்ணில் இருந்துதானே வந்தோம். மதுரை ஆதீனத்திலும், 'வைஷ்ணவி, கஸ்தூரி, மாதவி, கோபிகா’னு நிறையவே பெண்கள் பணிவிடை செய்கிறார்கள். அதற்காக எங்கள் மீதும் ஏதாவது பழி போடுவதா? மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசிதானே திருஞானசம்பந்தரை அழைத்து வந்து மதுரை ஆதீன மடத்தையே தொடங்கினார். பெண்களின் சிறப்புகளை மதித்து அவர்களின் மாண்புகளைக் காக்கிற மடம், மதுரை ஆதீன மடம். அதே நிலைப்​பாட்டில்தான் நித்தியானந்தர் பீடமும் இருக்​கிறது. சைவ வேளாளர் சங்கத்தினர் ஆதீனம் எடுத்திருக்கும் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்காமல், பழி போடுவது வேதனையாக இருக்கிறது'' என்று மதுரை ஆதீனம் கூறினார்.
அடுத்து நித்தியானந்தாவிடம் பேசினோம் ''ஸ்வாமி அவர்கள் என்னை மதுரை ஆதீனத்தின் அடுத்த குருமகா சந்நிதானமாக அறிவித்​திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயக்கமாக இருந்தாலும், இப்போது தைரியம் வந்துவிட்டது. இந்த வாய்ப்பை முழுமையாக ஏற்று இன்னும் மூன்று ஆண்டுகளில் மதுரை ஆதீனத்தை அகில உலக ஆன்மிக இயக்கமாக மாற்றிக்​காட்டுவோம். நித்தியானந்தர் தியான பீடத்துக்கு 151 நாடுகளில் மையமும் 40 நாடுகளில் கிளைகளும் இருக்கின்றன. உலகம் முழுவதும் 1.20 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாங்கள் நினைத்ததை முடிப்போம். பிடதி ஆசிரமப் பணிகள் இருப்பதால், மதுரை ஆதீனத்தில் என்னால் முழுமையாகத் தங்கி இருக்க முடியாது என்றாலும், அடிக்கடி மதுரைக்கு வருவேன்'' என்கிறார் பூரிப்புடன்.

பிடதியில்...
 கடந்த 27-ம் தேதி, கர்நாடக மாநிலத்​தின் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ஆட்டம் பாட்டம்,  எக்கச்சக்கக் கூட்டம் என்று கல்யாண வீட்டுக் கலகலப்பு.
தங்கமுலாம் பூசப்பட்ட மூன்று  ஆசனங்கள் மேடையில் போடப்பட்டு இருந்தன. அதில், ஆனந்த சிரிப்போடு நிஜ நித்தியானந்தாவும், அடுத்த ஆசனத்தில் ஃபைபரில் ட‌ம்மி நித்தியானந்தா சிலையும், மூன்றாவது ஆசனத்தில் மதுரை ஆதீனமான அருணகிரியும் காட்சி தந்தார்கள்.
சரியாக 9.05 மணிக்கு மதுரை ஆதீனமான அருணகிரி, நித்தியானந்தாவை மதுரையின் 293-வது ஆதீனமாக அறிவித்தார். கூடவே வெள்ளைப் பேப்பரில் மேடையில் வைத்து கையெழுத்து போடப்பட்டது. இதனால் அகம் மகிழ்ந்துபோன நித்தி, ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை மதுரை ஆதீனத்திடம் வழங்கினார். கூடவே, ஆறு அடி உயர தங்கச் செங்கோல் வழங்கி, தங்கக் கிரீடத்தையும் அணிவித்தார். மதுரை ஆதீனமும் நித்தியானந்தாவுக்குத் தங்கக்கிரீடம் அணிவித்தார். நித்தியானந்தா மற்றும் மதுரை ஆதீனத்தின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட பக்தர்கள், சத்தமாக ஒலித்த சினிமா பாடலுக்கு ஏற்ப ஆட்டம் போட ஆரம்பித்தனர். மதுரை ஆதீனமும் ஆடலுக்கு ஏற்ப தலையை ஆட்டி ரசித்தபடி, ஆடுபவர்களை உற்சாகப்படுத்தினார். இதை, முன்வரிசையில் இருந்து பார்த்த ரஞ்சிதா, அமைதியான சிரிப்போடு ரசித்தார்.
விழாவில் பேசிய மதுரை ஆதீனம், ''திருஞான சம்பந்தரால் 1,500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாகக் கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில் தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு’ என்று சொன்னார். அதன்பிற‌கு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு பழகிப்பார்த்தேன். அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன்.அப்போது பல பெண்கள், 'அடடா... ஆதீனமே ஆடுது’ என ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். இப்படித்தான் எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும். நித்தியானந்தாவின் இந்த அணுகுமுறையை நான் ரொம்ப லைக் பண்றேன். நித்தியானந்தா மிகவும் இளமையாக இருக்கிறார். அதனால் என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். இந்து மதத்தை அவரால் மட்டுமே சரியான திசையில் வளர்க்க முடியும். கூடவே,  ஆதீனத்தின் கொள்கையான சைவ சித்தாந்தத்தில் நித்தியானந்தாவும் ஆழமாக இருப்பதால், எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. நித்தியானந்தா மாதிரி புனிதமானவரைப் பார்க்கவே முடியாது. எனவே, மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும், 1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்’ என்று பயபக்தியோடு அழைக்க வேண்டும்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி முடித்தார்.
அடுத்து உற்சாக மிகுதியில் பேசிய நித்தியானந்தா, ''மதுரை ஆதீனமான ஸ்ரீஸ்ரீ அருணகிரி சுவாமிகளின் ஆன்மீக சேவை செய்த ஆண்டுகள்கூட என் வயது இல்லை. மதுரை ஆதீனத்தின் புகழை சர்வதேச அளவுக்கு உயர்த்துவேன். அதேபோன்று மதுரை ஆதீனத்தின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களும் கைப்பற்றப்பட்டு, புனரமைக்கப்பட்டு ஓர் ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஏற்கெனவே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமாக இருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீண்டும் ஆதீனத்தின் ஆளுகைக்கே கொண்டு வருவேன். இதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் தகர்த்தெறிவேன். ஆதீனம் சார்பாக மதுரையில் மருத்துவக் கல்லூரியும், 24 மணி நேர அன்னதானச் சேவையும் உடனே தொடங்கப்படும். அதேபோன்று, ஜூன் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் குரு பூஜையில், மதுரை ஆதீனமான அருணகிரி சுவாமிகளுக்கு தங்க சிம்மாசனம், தங்க செங்கோல், தங்கக் கிரீடம் வழங்கப்படும்'' என்று பட்டியல் வாசித்தார்.
அதுசரி, எப்படி மதுரையைப் பிடித்தார் நித்தியானந்தா? சில கதைகளைச் சொல்கிறார்கள்.
கதை ஒன்று:
சி.டி. மேட்டரில் சிக்கியதில் இருந்தே, நித்தியானந்தாவின் இமேஜ் ஈடு செய்ய முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகியிருந்தது. அதை எப்படியாவது மீட்டுக்கொள்ளத் துடித்தார். கர்நாடகத்தில் எந்த மடாதிபதியும் இவரை அருகில் சேர்க்கவே இல்லை. அதனால், தமிழகத்தில் தன்னுடைய செல்வந்த பக்தர்கள் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார்.
மதுரையில் இருக்கும் பிரபல பிசினஸ் புள்ளிஒருவர் ஹீலிங் டச் மூலமாக நித்தியானந்தாவால் கடந்த ஆண்டு குணப்படுத்தப்பட்டார். அவர் மூலமாக ஆதீனத்​துக்கு அறிமுகமாகி, அவரை பெங்களூருவுக்கு லவட்டிக் கொண்டு​வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகத் தன் சேவையில் ஆதீனத்தை வைத்துப் பராமரித்தாராம். ஆதீனத்​தை ஹாங்காங் கூட்டிச் சென்றும் ஆன்மீக சேவையை அரங்கேற்றி​னாராம் நித்தி. அங்கே நடந்தவை குறித்தும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன!  
கதை இரண்டு:
மதுரை ஆதீனத்துக்குப் பணச் சிக்கல் இருந்தது. நித்தியிடம்  எக்கச்சக்கமாகப் பணம் இருந்தது, ஆனால், போதிய மதிப்பு இல்லை. அதனால், இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி தேவைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை.
கதை மூன்று:
ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் நீண்ட காலமாகவே நல்ல தொடர்பும் உறவும் உண்டு. இருவரும் பல்​வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஒன்றாகவே போய் வந்திருக்கிறார்கள். அந்த நேரங்களில் மதுரை ஆதீனத்தின் ஆர்வங்களை மிகத்தெளிவாக அறிந்துகொண்ட நித்தியானந்தா, சரியான நேரத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டார். மதுரையில் வைத்து பதவியேற்பு விழாவை நடத்தினால் பிரச்னை வரும் என்றுதான் பெங்களூருவில் நடத்தினார்.
ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள், ஆதினமூலமும் அப்படித்தானோ?

 மதுரையில்...
 பட்டத்து இளவரசரை அழைத்துக்கொண்டு கடந்த 29-ம் தேதி காலையில் மதுரை வந்து இறங்கினார் மதுரை ஆதீனம். அதிகாலையிலேயே விழாக்கோலம் சூடிக்கொண்டது ஆதீன மடம். நித்தியின் சீடர்களால் ரொம்பிக்கிடந்த ஆதீன மடத்தில் ஆளாளுக்கு லேப்டாப்களைத் தூக்கிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்​கொண்டு இருந்​தார்கள்.
சரியாக காலை 9.35 மணிக்கு கிழக்கு வாசல் திறக்க, ஆதீனங்கள் இருவரும் புன்னகைத்தபடி பிரசன்னமானார்கள். வழக்கமான காவியை விடுத்து, மதுரை ஆதீனத்தின் டிரேட் மார்க் காவிக்கு மாறி இருந்த நித்தியானந்தா, முடி இறக்கம் செய்யாமலே தலையில் ருத்ராட்சம் கட்டி இருந்தார். ஒருவருக்கொருவர் தங்கக் கிரீடங்களை அணிவித்துக்கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.
முதலில் பேசிய ஆதீனம், ''நம்முடைய குருமகா சந்நிதானம் திருஞான சம்பந்தர் பெருமான் தீராத வியாதிகளை எல்லாம் தீர்த்து வைத்தார். அதேபோன்ற வல்லமை நித்தியானந்தருக்கு இருக்கு. இவர் இங்கிருந்து பிரார்த்தனை செய்தால், வெளிநாட்டில் இருந்து தங்கமும் வைரமும் வருகிறது. எனக்கு இருந்த சுவாசக் கோளாறையே குறைத்து விட்டார். அதனால், உங்களில் யாருக்காவது நோய் வந்தால், நம்முடைய 293-வது குருமகா சந்நிதானத்தை அணுகுங்கள்'' என்று கலாய்த்த ஆதீனம், ''உலகத்திலேயே இப்படிப்பட்ட முதலமைச்சரை நான் பார்த்தது இல்லை. புரட்சித் தலைவி என்றால், புரட்சித் தலைவிதான். தமிழ் மக்களை, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைக்கும் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியைப் பாராட்டி ஆசீர்வதிக்கின்றோம்'' என்று அம்மாவுக்கு திடீர்ப் புகழாராம் சூட்டினார்
  அடுத்துப் பேசிய நித்தியானந்தா, ''பிடதி ஆசிரமத்தில் நடக்கும் அத்தனை பணிகளும் மதுரை ஆதீனத்துக்கும் விரிவுபடுத்தப்படும். இதை நான் ஏற்கெனவே சொல்லி இருந்தா, 'அத்தனை பணிகளுமா?’ன்னு நீங்க ஏடாகூடமாக் கேள்வி கேப்பீங்க. இப்ப நீங்களே கேட்டதால், இதைச் சொல்கிறேன். குருமகா சந்நிதானம் அவர்கள் ஒரு ஆல விருட்சம். நாங்களெல்லாம் முந்தா நாள் பெய்த மழையில் நேத்து முளைத்த காளான்கள். ஆலமரத்தின் நிழலில் காளான்கள் இருப்பது இயற்கைதானே. மதுரை ஆதீனம் என்பது மிகப் பெரிய கடல். நாங்கள் சிறு துளி. கடலில் கலப்பதை துளி விரும்புவதைப் போல எனக்குக் கொடுத்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு இருக்கிறேன்'' என்றார். பேட்டியை முடித்துக்கொண்டு இருவரும் பூரண கும்பங்கள் சகிதம் மீனாட்சி அம்மனைத் தரிசிக்க ஊர்வலமாய்க் கிளம்பினார்கள்.

No comments:

Post a Comment