சத்தீஸ்கர் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனின் விடுதலைக்குப் பிறகும், பேரத்தின் மர்மம் விலகவில்லை. நக்சல்களுடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்று, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒரே குரலில் சொல்கிறார்கள். 13 நாட்களாக நக்சல்களின் பிடியில் இருந்த அலெக்ஸ், விடுதலையான மறு நாளே பணிக்கு வந்து விட்டார்.
இந்த விஷயத்தில், பெரும் சர்ச்சைக்கு உள்ளானவர் மணீஷ் குஞ்சாம். சி.பி.ஐ. கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஆதிவாசிகள் மகா சபாவின் தலைவருமான இவரது பெயரும், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான குழுவில் நக்சல்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மறுத்து விட்டார். அலெக்ஸ் பால் மேனனுக்கு மருந்துகளை மட்டும் காட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தார். ஆனால், அலெக்ஸ் விடுதலைக்கு நாள் குறிக்கப்பட்ட நேரத்தில், திடீர் என்று மத்தியஸ்தர்களுடன் காட்டுக்கு கிளம்பிச் சென்றார். அவரை, சுக்மாவில் சந்தித்தோம்.
''அலெக்ஸின் விடுதலைக்கான பேச்சு வார்த் தையில் பங்குகொள்ள மறுத்ததும், பிறகு திடீரென மத்தியஸ்தர்களுடன் கிளம்பிச் சென்றதும் ஏன்?''
''மாவோயிஸ்ட்டுகளைப் போல் நாங்களும் ஆதிவாசிகள் நலனில் அக்கறை கொண்டவர்கள். நான் மத்தியஸ்தப் பேச்சில் இறங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடு வளரும். அதைத் தவிர்க்க விரும்பினேன்.முதல்வர் கேட்டுக் கொண்டதால்தான், மருந்துகளை மட்டும் கொடுத்துவர ஒப்புக் கொண்டேன். கலெக்டர் விடுதலையின்போது மத்தியஸ்தரான பி.டி.சர்மா, என்னையும் வரச் சொல்லி விட்டார். அவரது வேண்டுகோளை மறுக்க முடியாமல்தான் கிளம்பினேன்.''
''அலெக்ஸை எங்கே இருந்து அழைத்து வந்தீர்கள்?''
''தாட்மட்டேலாவின் அருகில் உள்ள கிராமமான குமேங்தாம் எனும் இடத்தில் இருந்துதான் கலெக்டரை அழைத்து வந்தோம்.''
''ரகசியப் பேரம் நடந்ததாகச் சொல்கிறார்களே?''
''மத்தியஸ்தராக நான் இல்லை என்பதால், அதுகுறித்து எனக்குத் தெரியாது.''
''மாவோயிஸ்ட்டுகளின் ஆள் கடத்தல் இனியும் தொடருமா?''
''இதை நீங்கள் மாவோயிஸ்ட்டுகளிடம்தான் கேட்க வேண்டும். ஆதிவாசிகள் கடத்தப்படுவதும், பாதுகாப்புப் போலீஸாரால் சித்ரவதை செய்யப்படுவதையும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. கலெக்டர் போன்ற வி.ஐ.பி-கள் கடத்தப்பட்டால்தான், தீவிரமாக உணர்கிறார்கள்.''
''நீங்கள் கடத்தலை ஆதரிப்பதுபோல் தெரிகிறதே?''
''ஆட்களைக் கடத்துவது சரியில்லைதான். எங்கள் பேச்சை மாவோயிஸ்ட்டுகள் கேட்பதாக இருந்தால், ஆயுதங்களை அவர்கள் என்றைக்கோ ஒப்படைத்து இருப்பார்கள். இந்த விஷயத்தில் அரசும் எங்கள் பேச்சைக் கேட்டிருந்தால், மாவோயிஸ்ட்டுகளை சரண் அடைய வைத்திருக்கலாம்.''
''ஆதிவாசிகளுக்கு உள்ள பிரச்னைதான் என்ன? அதனை ஏன் அரசால் தீர்க்க முடியவில்லை?''
''ஆதிவாசிகளுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச வசதிகளைக்கூட, அரசு செய்து கொடுக்கவில்லை. அவர்களை அடக்கி ஒடுக்கவே செய்கிறது. ஆதிவாசிகளின் சொத்தான கனிம வளத்தைக் கொள்ளை அடித்து, தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் அரசு தீவிரமாக உள்ளது''.
''மேற்கு வங்கத்தின் லால்கர் பகுதியில் நக்சல்களை ஒழிக்க முடிந்தபோது, சத்தீஸ்கரில் மட்டும் ஏன் அதைச் செய்ய முடியவில்லை?''
''மாவோயிஸ்ட்டுகளின் மீதான நடவடிக்கை என்ற பேரில் வரும் கோடிக்கணக்கான பணத்தால், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு லாபம். அதனால் மாவோயிஸ்ட்டுகள் வளர்வதைத்தான் இங்கு சில அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். இந்த நிலைமை நீடிக்கும் வரை... மாவோயிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் போராடுவதற்கு விஷயமும் இருக்கும்!''
No comments:
Post a Comment