Monday, May 28, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. ஆதரவை கேட்போம். தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ்.



புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலையொட்டி தே.மு.தி.க. தேர்தல் அலுவலகம் திறப்புவிழா மற்றும் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் பங்கேற்க வந்த தே.மு.திக. மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- 

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வு தான் அ.திமு.க.வின் சாதனைகளாக உள்ளது. தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா? என்ற சாவலை ஏற்று சங்கரன் கோவில் தேர்தலில் போட்டியிட்டோம்.  

சங்கரன்கோவில் இடைத்தேர்தலை  போல புதுக்கோட்டை தேர்தல் இருக்காது. சங்கரன்கோவிலில் 22 அமைச்சர்கள் தான் பிரசாரத்தில் களம்  இறக்கப்பட்டனர்.  ஆனால் புதுக்கோட்டையில் 32 அமைச்சர்களும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளர் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 

தே.மு.தி.க. வெற்றி பெற்றால் நாட்டில் விலைவாசி குறையும். இந்த வெற்றி என்பது ஆளுங்கட்சியினர் செய்து வரும் தவறுகளை திருத்தி கொள்ள வாய்ப்பாகவும், படிப்பினையாகவும் அமையும். இந்த தேர்தல் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையேயான போட்டியில்லை. முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும்தான் போட்டி. தொகுதி  மக்களிடம்  நீதி கேட்க கட்சி தலைவர் விஜயகாந்த் ஜுன் 5-ந்தேதி புதுக்கோட்டை வருகிறார். 

தொடர்ந்து  4  நாட்கள் அவர் தீவிர பிரசாரம் மேற்கொள்வார். இந்த தேர்தலை தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து சந்திக்கிறது. தே.மு.தி.க. இளைஞர்களின் ஒருமித்த கருத்தோடு புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தி.மு.க. ஆதரவை கேட்க வேண்டும் என்று மாநில செயலாளர் என்ற முறையில் நான் கட்சி தலைவர் விஜயகாந்திடம் வலியுறுத்துவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.         

No comments:

Post a Comment