விஜய நகர ஆட்சியில் கிராம நிர்வாக முறையை கட்டோடு மாற்றி புதிய ஆயக்கர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 12 பேர் அடங்கிய குழு கிராமத்தைப் பராமரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயக்கர் முறையில் உள்ள 12 பேரில் கர்ணம், மணியம், தலையாரி ஆகிய மூன்று பேரும் மன்னரால் நேரடியாக நியமிக்கப்படுவர். மற்றவர்களான தச்சு வேலை செய்பவர், குயவர், தட்டார், கருமார், புரோகிதர், செருப்புத் தைப்பவர், துணி துவைப்பவர், சவரத்தொழிலாளி, தண்ணீர் கொண்டுவருபவர் ஆகியோரை உள்ளுர் முடிவு செய்துகொள்ளும். கிராமத்தின் வரி வருவாய், நிலம் மற்றும் நீர்ப் பங்கீடு பராமரிப்பு குறித்த விவரங்களைப் பதிவு செய்வது கர்ணத்தின் வேலை. நேரடியாகச் சென்று வரி வசூலிப்பவர் மணியம். இவரோடு ஊரின் காவல் பணியைச் செய்பவர் தலையாரி. இவர்களுக்கு அரசின் மானியமாக நிலம் வழங்கப்படும். ஆனால் அதற்கு, அவர்கள் தனியே வரி செலுத்த வேண்டியது அவசியம். ஆயக்கர் முறை, ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது. இன்றும்கூட, கர்ணம், மணியக்காரர், தலையாரி குடும்பங்கள் இருப்பது இதன் மிச்சமே.விஜய நகர ஆட்சிக் காலத்தில் தெலுங்கு, கன்னட, சமஸ்கிருத மொழிகளின் இலக்கியங்கள் பெரிதும் வளர்ச்சி அடைந்தன. தமிழ் அப்போது ஆட்சி மொழியாக இல்லை. ஆகவே, முக்கியத்துவம் பெறாமல் போனது. விஜய நகர மன்னர்களும் அவர்களுக்குப் பின்வந்த நாயக்கர்களும் கோயில்களைப் பராமரிப்பதிலும், உருவாக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டினர். பாசன வசதியைப் பெருக்கும் நீர் நிலைகளை உருவாக்குவது, ஒவியம், இசை, நாடகம் உள்ளிட்ட கலைகளை மேம்படுத்துவதிலும் அதிக ஈடுபாடு காட்டினர்.
விஜய நகரப் பேரரசு தன்னை கர்நாடக சாம்ராஜ்யம் என்றும் குறிப்பிட்டுக்கொண்டது. இதற்கும் இன்றைய கர்நாடகத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. மாறாக, ஆந்திராவின் கோரமண்டல் கடற்கரைப் பகுதியை ஒட்டி விஜய நகரப் பேரரசு ஆட்சி செய்ததையே கர்நாடிக் என்று கூறுகிறார்கள். மொழியியல் அறிஞர் கால்டுவெல், 'கர் என்றால் கறுப்பு. நாடு என்றால் தேசம். கரிசல் நிலம் உள்ள பகுதி என்பதால் கர்நாடகம் என்று கூறியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் தருகிறார். 'விஜய நகர ஆட்சிக்கும், அவர்கள் வழிவந்த நாயக்கர் ஆட்சிக்கும் உட்பட்டு இருந்த காரணத்தால் தமிழகத்தின் சோழ மண்டலக் கடற்கரை, கர்நாடகக் கடற்கரை என்றானது. அதன் தொடர்ச்சியாகவே தெலுங்கில் இருந்து உருவான இசை, கர்நாடக இசை என்று அழைக்கப்பட்டு வருகிறது’ என்கிறார் வரலாற்று அறிஞர் ரிச்சர்ட் ஸ்மித்.தொடக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் கொள்ளிடம் நதி வரையிலான பகுதிகள் செஞ்சி நாயக்கர்களின் கீழ் இருந்தன. பின்னர், விஜய நகரப் பேரரசின் ஆரவீடு மரபினர் வேலூரைத் தலைநகரமாகக்கொண்டு ஆளத் தொடங்கியதும்... வடக்கே பாலாறு முதல் தெற்கே கொள்ளிடம் வரையிலானதாக செஞ்சி நாயக்கர்களின் ஆட்சி எல்லை சுருங்கியது.செஞ்சி நாயக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர். இவர் பெயரால் கிருஷ்ணாபுரம் எனப் பெயர் மாற்றம் பெற்றது செஞ்சி. இன்றுள்ள செஞ்சிக் கோட்டையை வடிவமைத்தவர் பெத்த கிருஷ்ணப்பரே. செஞ்சியில் உள்ள மூன்று குன்றுகளையும் உள்ளடக்கி எழுப்பப்பட்டு உள்ள பெருஞ்சுவர்களும் இவரால் கட்டப்பட்டவை. விஜய நகரப் பேரரசின் மிகச் சிறந்த மன்னராகக் கொண்டாடப்படுபவர் கிருஷ்ண தேவராயர். இவரது ஆட்சிக் காலத்தில் விஜய நகரப் படைகள் தொடர்ந்து வெற்றியைக் குவித்தன. கலைகளிலும் இலக்கியத்திலும் அதிக ஆர்வம்கொண்ட கிருஷ்ண தேவராயர், தொடர்ந்த படையெடுப்பின் வழியே விஜய நகரப் பேரரசை வலிமைமிக்கதாக மாற்றினார்.ஒரு முறை கிருஷ்ண தேவராயர், படைத் தளபதி நாகம நாயக்கனை மதுரையைக் கைப்பற்றிக் கப்பம் வாங்கி வருமாறு அனுப்பினார். நாகம நாயக்கர் மதுரையைக் கைப்பற்றி, தன்னையே மதுரை மன்னராகப் பிரகடனம் செய்துகொண்டார். இந்த அதிர்ச்சித் தகவலை அறிந்த கிருஷ்ண தேவராயர், நாகம நாயக்கரை வென்று வர அவரது மகன் விஸ்வநாத நாயக்கரின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் .நாகம நாயக்கரை வென்று அவரை சிறைப்பிடித்து வந்து கிருஷ்ண தேவராயர் முன் நிறுத்தினர் விஸ்வநாத நாயக்கர். இந்தச் செயலைப் பாராட்டிய ராயர், விஸ்வநாத நாயக்கரை மதுரையின் சுதந்திர மன்னராக பிரகடனம் செய்ததாக சொல்லப்படுகிறது.
மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னராக 1529-ல் விஸ்வநாத நாயக்கர் முடிசூடினார். இவரது அமைச்சராக இருந்தவர் அரியநாத முதலியார். இவரது வீர சாகசம் பற்றி நிறையக் கதைகள் இருக்கின்றன. இவர்தான் தென்னகத்தை 72 பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்களை நியமித்தார்.நாயக்கர்களின் வம்சம் அதன் பிறகு மதுரையில் தொடர்ந்து அரசாட்சி செய்தது. இவர்களில் குறிப்பிடத்தக்க இரண்டு பேர், திருமலை நாயக்கரும் ராணி மங்கம்மாளும். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை புதுப் பொலிவு அடைந்தது. திருச்சியில் இருந்த தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றியவர் திருமலை நாயக்கரே. சைவ, வைணவ ஆலயங்களுக்கு நிறையத் திருப்பணிகள் செய்து இருக்கிறார். மதுரையைச் சுற்றி உள்ள ஏரிகள், நீர்நிலைகள் இவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டு, விவசாயம் மேம்பாடு அடைந்தது. இவர், கி.பி. 1,623 முத்ல 1,659 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.இவரது ஆட்சியின்போது உருவாக்கப்பட்டதுதான் மதுரையில் இன்றும் நாம் காணும் நாயக்கர் மஹால். இன்றுள்ள மதுரையின் அமைப்பும், சத்திரங்களும் இவர் உருவாக்கியதே. ராணி மங்கம்மாள் 1689-ல்ஆட்சிக்கு வந்தார். இவர், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி. 1682-ல் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது, அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாதக் குழந்தை. எனவே, தன் மகனைக் காப்பாற்ற வேண்டி உடன்கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை, காப்பாளராக ஏற்றுக்கொண்டார்.இவருடைய ஆட்சிக் காலத்தில் நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சி விளங்கியது. அன்னையின் வழிகாட்டுதலில் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார். தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றைப் போரிட்டு மீட்டார். ஏழு ஆண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், அம்மை நோயால் 1688-ல் இறந்தார். மலேசியாவில் வாழும் வரலாற்று ஆய்வாளர் ஜேபி எனப்படும் ஜெயபாரதி தனது கட்டுரை ஒன்றில், முத்துவீரப்பர் காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார். இதை நிரூபணம் செய்யும் சான்று எந்த வரலாற்று ஆவணத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், ஒரு மதுரை தன்னரசின் துணிச்சலை வெளிப்படுத்துவதாக இந்தச் சம்பவம் உள்ளது.ஒளரங்கசீப் காலத்தில் யானையை அலங்கரித்து அதன் முதுகில் ஆடம்பரமாக பீடம் அமைத்து, அதன் மீது ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஒளரங்கசீப்பின் செருப்பு ஒன்றை வைத்து, ஊர் ஊராக ஊர்வலம் வந்தார்கள். கூடவே, ஜுல்பிர்கான் என்ற தளபதியோடு ஒரு படைப் பிரிவும் வரும். யாராவது மன்னர்கள், இந்தச் செருப்பை மதிக்கவில்லை என்றால், அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இதற்குப் பயந்து, பல மன்னர்கள் யானையை எதிர்கொண்டு வரவேற்று செருப்பை வணங்கி மரியாதை செலுத்தினர். ஒவ்வொரு நகரிலும், இந்தச் செருப்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மன்னரின் அரசாளும் இருக்கையில் வைக்கப்படும். அந்த மன்னர் விழுந்து வணங்கி ஒளரங்கசீப்புக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதாக சாசனம் எழுதிக் கொடுக்க வேண்டும். இந்தச் செருப்பு ஊர்வலம் மதுரை நாட்டின் எல்லையான காவிரிக் கரைக்கு வந்து சேர்ந்தது. எல்லையில் இருந்தபடியே மன்னர் முத்துவீரப்பருக்குத் தகவல் அனுப்பினர். அவர் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். கோட்டைக்குள் செருப்புத் தாம்பாளத்தைத் தூக்கி வந்தனர். முத்துவீரப்பரோ, அதை வணங்குவதற்குப் பதிலாக தன்னுடைய ஒரு காலை அந்தச் செருப்புக்குள் நுழைத்துக்கொண்டு தங்கத் தாம்பாளத்தை ஓங்கி எத்திவிட்டார்.
'முட்டாளே, உங்கள் டில்லி பாஷாவுக்கு மூளை இல்லையா? ஒரு காலுக்கு மட்டும் செருப்பை அனுப்பி இருக்கிறானே? இன்னொரு செருப்பு எங்கே? எனக்கு வேண்டியவை இரண்டு செருப்புகள் அல்லவா?' என்று கேலியாகக் கேட்டார் முத்து வீரப்பர். பிறகு, அவர்களை அடித்து விரட்டினார். அதோடு, ஒளரங்கசீப் தன் செருப்பு ஊர்வலத்தை நிறுத்திக்கொண்டார் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.கணவர் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இறந்தவுடன், முத்தம்மாள் உடன்கட்டை ஏறினார். அவரது மகன் விஜயரங்க சொக்கநாதருக்கு பட்டம் சூட்டப்பட்டது. விஜயரங்க சொக்கநாதரின் சார்பில் அவருடைய பாட்டியான மங்கம்மாள் பொறுப்பாளராக பதவிஏற்று ராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1,706 வரை ஆட்சி நடத்தினார்.17 ஆண்டுகள் ஆட்சி நடத்திய மங்கம்மாள், போரை விரும்பாதவர். இவர், மதுரையில் பெரிய அன்னச்சத்திரம் அமைத்தார். அது, 'மங்கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. இப்போது, மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே, ராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனை. இதில் உள்ள தமுக்கம் மைதானத்தில்தான் அந்தக் காலத்தில் யானைச்சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும், அரச விழாக்களும் நடைபெற்றன. மங்கம்மாள் காலத்தில் உருவாக்கிய சாலைகள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. இவர் காலத்தில் உருவாக்கப்பட்ட சந்தைகள், சத்திரங்கள், தர்ம ஸ்தாபனங்கள் மக்களுக்கு அரிய சேவை செய்தன.தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர், ராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதி சிறையில் அடைத்தார். அதில் மனம் உடைந்துபோன ராணி மங்கம்மாள் 1706-ல் இறந்துபோனார். விஜயரங்க சொக்கநாதர் மறைந்த பிறகு, அவரது மனைவி மீனாட்சி, 1732-ல் தன் உறவினரான விஜயகுமாரன் என்ற பையனைத் தத்தெடுத்து அவனை ஆட்சிப் பொறுப்பில் அமரவைத்து தானே ஆட்சியை நடத்தினார். விஜயகுமாரின் தந்தை பங்காரு திருமலை தனக்கு ஆட்சியில் உரிமை வேண்டும் என்று மதுரையின் எதிரியான ஆற்காடு நவாபிடம் கோரிக்கை வைத்தார். இதற்காக, ஆற்காடு நவாபின் மருமகனும் திவானுமாகிய சந்தா சாகிப்புக்கு லஞ்சமாக நிறையப் பொன்னும் பொருளும் தந்தார்.இந்த நெருக்கடியை சமாளிக்க, சாந்தா சாகிப் தன்னை ஆதரிக்க ஒரு கோடி பகோடா தருவதாக உறுதி அளித்தாள் மீனாட்சி. அதைச் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்ட சாந்தா சாகிப், சதி செய்து ராணி மீனாட்சியை சிறையில் அடைத்தார். மனம் உடைந்த அவள், விஷம் குடித்து இறந்துபோனார். அதன் பிறகு, பங்காரு திருமலையையும் நயவஞ்சக சாந்தா சாகிப் கொன்று மதுரையை வென்றார். இப்படியாக 1736-ல் மதுரை நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து தென்னகக் கோயில்களைக் காப்பாற்றிய இந்துப் பேரரசு விஜய நகரம். அதன் காரணமாகவே நமது கலைச் செல்வங்கள் காப்பாற்றப்பட்டன. இல்லாவிட்டால், வட இந்தியாவைப் போல நிறையக் கோயில்கள் இடிபட்டும் கொள்ளையிடப்பட்டும் போயிருக்கக்கூடும் என்று வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.விஜய நகரப் பேரரசின் நினைவுச் சின்னமாக உள்ள ஹம்பியை, உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ பராமரித்து வருகிறது. இடிபாடுள்ள ஹம்பியோடு சுழித்து ஒடும் துங்கபத்திரையின் நீரில் விஜய நகரப் பேரரசின் அழியாத நினைவுகளும் கரைந்து ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
No comments:
Post a Comment