மத்திய அரசு தமது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (டி.ஏ.) ஜனவரி - 2012லிருந்து 7 சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 8000 கோடிக்கும் அதிகமாகக் கூடுதல் செலவாகும். இதே அளவு அகவிலைப்படி உயர்வை எல்லா மாநில அரசுகளும் வழங்க வேண்டியிருக்கும். சமீபத்தில், தமிழக அரசு 7 சதவிகித அகவிலைப்படி வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இதனால் எல்லா மாநில அரசுகளுக்கும் சுமார் ரூபாய் 1000 கோடி வரை ஆண்டொன்றுக்கு அதிக செலவாகும். தனியார் துறை ஊழியர்களுக்கும் தொழிற்சங்க ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு இருக்கும் என்று கணக்கிடலாம். ஆக மொத்தத்தில் சுமார் ரூபாய் 38,000 கோடிக்கும் அதிகமான அதிக பணப் புழக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுகிறது. இதனால் உற்பத்தியின் அளவு எந்த விதத்திலும் அதிகரிக்காது.அதிக பணப்புழக்கத்தினால் விலைவாசிகள் மீண்டும் உயர வழி ஏற்படும். இந்த நிலை, முடிவில்லாத ஒரு தொடர். அக விலைப்படி உயர்வு பெறும் ஊழியர்கள் விலைவாசி உயர்வை ஓரளவுக்குச் சமாளிக்க முடியுமென்றாலும் இதைப் பெறாத இதர ஊழியர்கள் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு என்ன நிவாரணம்? அவர்களும் தங்கள் தினக்கூலியை அதிகரித்தோ, பொருள்களின் விலைகளை உயர்த்தியோ, கட்டணத்தை உயர்த்தியோ விலைவாசி உயர்வைச் சமாளிப்பார்கள். இதனாலும் மீண்டும் விலைவாசிகள் உயருகின்றன. அதனால் மீண்டும் அகவிலைப்படி உயர்வு! மீண்டும் விலைவாசி உயர்வு! முடிவில்லாத தொடர். இதற்கு என்னதான் நிவாரணம்?
நடப்பு நிதி ஆண்டில் அரசின் செலவினங்களுக்காக, கடனாக வாங்கும் தொகை பட்ஜெட்டில் மதிப்பிட்டிருப்பது ரூபாய் 5,70,000 கோடி. இதில் இந்த வருஷம் திருப்பிக் கொடுக்க வேண்டிய பழைய கடன் 91000 கோடி ரூபாய். ஆக அரசின் நிகர கடன் தொகை இந்த ஆண்டுக்கு ரூபாய் 479000 கோடி. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதத்திலேயே மேற்சொன்ன கடன் தொகையில் ரூபாய் 3,70,000 கோடி திரட்ட, அரசு முடிவு செய்துள்ளது. கீழே அரசின் கடன் சுமையைப் பற்றி ஒரு புள்ளி விபரம் கொடுத்திருக்கிறேன்.
நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் தொகையையும் சேர்த்து 5 ஆண்டுகளில் அரசின் கடன் சுமை 22.40 லட்சம் கோடி ரூபாய். இதில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய பழைய கடன் 18.72 லட்சம் கோடி ரூபாய். இந்த நிகர கடன் வருவாயின் பெரும் பகுதியை அரசு அன்றாடச் செலவினங்களுக்கு உபயோகப்படுத்தி இருக்கிறது. மூலதனச் செலவு மிகவும் கம்மி.இந்தக் கடன் சுமை ஒவ்வொரு வருஷமும் ஏறிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் பழைய கடனைத் திருப்பித் தருவதற்கே புதிய கடன் தொகை முழுவதும் உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இதைத் தவிர வட்டிச் சுமை வேறு! இதற்கும் என்னதான் நிவாரணம்? நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன்னால் மத்திய அரசு சில கடுமையான, கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.அடுத்து 2 அல்லது 3 வருஷங்களுக்குள் அரசுக்கு எந்தவித மான்யச் செலவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் வரியை அதிகரிக்க முடியுமோ, அதிகரித்து எங்கெல்லாம் செலவினங்களைக் குறைக்க முடியுமோ குறைத்து அரசின் நிதி நிலைமையைச் சீர்படுத்த வேண்டும்.சென்ற 5 ஆண்டுகளில் அரசின் வருமான வரி, சுங்க வரி மற்றும் கலால் வரி மூலம் வசூலிக்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 25 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வசூலிக்க முடியாத தொகை அனைத்தும் பெரிய கம்பெனிகள் /பெரிய பணக்காரர்களிடம் இருந்துதான் என்று சொல்லப்படுகிறது. ஏன்? இந்தியாவின் பல நகரங்களில் வானளாவி உயர்ந்து நிற்கும் கட்டடங்களும், சாலைகளில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலையில் இருக்கும் பல லட்சக்கணக்கான வாகனங்களும் எதைத் தெரிவிக்கின்றன? நாட்டின் பொருளாதார வளர்ச்சியினால் ஒரு பிரிவினர்தான் பயன் அடைந்திருக்கிறார்கள். அரசைப் போலவே ஏராளமான இந்தியர்களும் கடன் சுமையில் உழன்று கொண்டிருக்கிறார்கள். நன்கு புலப்படும் உண்மை இது. உலக நாடுகளின் நாணயத் தரத்தை அவ்வப்போது நிர்ணயிக்கும் ஸ்டாண்டர்ட் அண்டு புவர், சமீபத்தில் இந்தியாவின் நாணயத்தரத்தை ஒரு குறியீட்டு எண் குறைப்பதாகத் தெரிவித்திருக்கிறது. அதன்படி இந்தியாவின் புதிய நாணயத் தரம் ஆஆஆ அதாவது 3 பி மைனஸ். இந்தியாவின் பொருளாதார நிலை அபாய கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள். அந்த நிறுவனம் அதற்குச் சொன்ன காரணம் இது: ‘இந்திய அரசின் கடன் சுமையும் நிதிப்பற்றாக்குறையும் உயர்ந்துகொண்டே போகிறது. இந்திய அரசு பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் மெத்தனம் காட்டுகிறது.’
இந்த அபாயச் சங்கை நாம் அலட்சியம் செய்ய முடியாது!
No comments:
Post a Comment