Thursday, May 31, 2012

மீண்டும் குடும்பக்குத்து. பரிதாபத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்.


மீண்டும் குடும்பக் குத்தாட்டம் மதுரையில் ஆரம்பம்! 
கருணாநிதியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதற்காக மதுரையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம், மீண்டும் ஒரு பிரளயத்தை தி.மு.க. மேலிடத்தில் கிளப்பி​யுள்ளது. கடந்த 26-ம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மொத்தமே 20 பேர். ஆட்கள் குறைவு என்றதும், வாடகைக்கு ஆட்களைத் திரட்டி வந்த பிறகும் கலந்துகொண்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 200-ஐத் தாண்டவில்லை என்பதுதான் சோகம்.
சமீபத்தில் அழகிரியின் அனுமதி இல்லாமலேயே மதுரைக்கு வந்த ஸ்டாலின், இளைஞர் அணி நேர்காணல், பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி​விட்டுத் திரும்பினார். அதனால், மதுரையிலும் கட்சி அவரது கைக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். 'அப்படி எல்லாம் இல்லை. என்றைக்கு​மே, மதுரைக்கு அண்ணன்தான் மன்னன்’ என்று சொல்லாமல் சொல்வதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நிர்​வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்​தார்களாம்.
மதுரை மாநகரில் மொத்தம் உள்ள 72 வட்டச் செயலாளர்களில் 66 பேர் ஆப்சென்ட். 9 பகுதிச் செயலாளர்களில் ஒருவர் மட்டுமே கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர் மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவியையும் வகிக்கும் ஜெயராமன். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறு பேரில் பொட்டு சுரேஷ், குருசாமி உள்ளிட்ட ஐந்து பேரைக் காணவில்லை. அதிதீவிர ஸ்டாலின் ஆதரவாளரான வேலுச்சாமி மட்டும் வந்திருந்தார். மாநிலப் பொதுக் குழு உறுப்பினர்களில் சிம்மக்கல் போஸ் மட்டும் ஆஜர். ஆக, 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டார்கள்.
வரவேற்றுப் பேசிய ஜெயராமன், 'தலைவர் கலைஞர், தளபதி ஸ்டாலின், அஞ்சா நெஞ்சன் அழகிரியின் ஆலோசனையின்படி நடைபெறும் இந்தக் கூட்டத்தில்...' என்று தொடக்கத்திலேயே தற்காப்பு ஆட்டம் ஆடினார்.
'நான்தான் ராஜினாமா கடிதம் கொடுத்​துட்டேனே. அதை ஏத்துக்கிடாம கூட்டம் போடச் சொல்லி அசிங்கப்படுத்துறாங்களே...' என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் புலம்பிக்கொண்டே பேச எழுந்த தளபதி, அழகிரி பெயரையோ, ஸ்டாலின் பெயரையோ உச்சரிக்கவில்லை.
முன்னாள் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி மட்டும் அழகிரியை லேசாக உரசிப் பார்த்தார். 'நம்முடைய நண்பர்கள் சிலர் இங்கே வரவில்லை. ஏனோ, தெரியவில்லை. மதுரையின் நேரங்காலமோ என்னவோ! கழகம் கட்டளை இடுகிறது. நாம் இதை எல்லாம் செய்திட வேண்டும் என்று தலைமை கட்டளை இடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாம் எப்போதுமே போர்வீரர்கள் போல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எப்பேர்ப்பட்ட எதிரிகள் வந்தாலும் வீழ்த்த முடியும். படையைப் பலப்படுத்த வேண்டியவர்களே, அந்தப் படையைத் தடுத்து நிறுத்துவது சரியல்ல. நிர்வாகிகள் வராவிட்டாலும், ஒவ்வொரு வட்டத்தில் இருந்தும் ஒரே ஒரு தொண்டனாவது வந்திருப்பான் என்று நினைக்கிறேன். எனவே தலைமைக் கழகத்தின் உத்தரவுப்படி, தலைவரின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதோடு, வருகிற 30-ம் தேதி பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். எவர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி கழகத் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் படையெடுத்து வர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர், ­­'தம்பி நாங்க எல்லாம் அழகிரி, ஸ்டாலின் பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே கட்சியில இருக்கோம். என்னமோ இவங்கதான் கட்சி மாதிரி நடந்துக்கிறாங்க. மதுரையில, ஆர்ப்பாட்டம், மறியல், பட்ஜெட் விளக்கக் கூட்டம், சாதனை விளக்கக் கூட்டம், மொழிப்போர் தியாகிகள் கூட்டம், பொங்கல் விழா அது இதுன்னு ஆயிரம் நிகழ்ச்சிகளுக்கு அழகிரி பேரைப் போட்டு நோட்டீஸ் அடிச்சிருக்கோம். ஒரு நிகழ்ச்சியில்கூட அந்த மனுஷன் கலந்துக்கிட்டது கிடையாது. ஆனா, அவர் வர விரும்பாத ஒரு நிகழ்ச்சிக்குப் பேர் போடலைன்னு மாவட்ட நிர்வாகிகளை ஒதுக்கி ​வைக்கிறார்.
ஸ்டாலின் கொஞ்சம் பக்குவ​மானவர்னு நினைச்சோம். ஆனா, பிரச்னை வரும்னு தெரிஞ்சுக்கிட்டே அழகிரி இல்லாத நேரத்துல அவர் மதுரைக்கு வந்து பிரச்னையைக் கிளப்புறார். விளக்கம் கேட்டு நோட்டீஸ், கட்சியைவிட்டு நீக்கம்னா யாருக்கு அசிங்கம், கட்சிக்குத்தானே? தலைவரோட பிறந்த நாளைக் கொண்டாடுறதுலயுமா பாலிடிக்ஸ் பண்ணணும்? சென்னையில இருந்து கூட்டம் போடச் சொல்லி உத்தரவு வருது. கொடைக்கானல்ல இருந்துக்கிட்டு, 'ஒருத்தனும் போகாதே’னு உத்தரவு போடுறார் அழகிரி. கலைஞர் பிறந்த நாள் விழாவையும் இதே மாதிரி புறக்கணிச்சிடுவாங்களோனு கவலையா இருக்கு தம்பி. ஏன்னா, அழகிரி சொன்னா உதயசூரியனையேதோற்​​கடிக்கிற பயலுங்க இங்க அதிகம்'' என்றார் சோகமாக.
மதுரை அசிங்கத்தை தலைமை எப்படித் துடைக்கப்​போகிறதோ?

No comments:

Post a Comment