Saturday, September 8, 2012

நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆபாசப்படம். புதுவையில் கேபிளுக்கு இல்லையா கட்டுப்பாடு


ந்த வரைமுறையும் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாய் தெருக்களில் தொங்கும் கேபிள் வயர்களைப் போலவே தீர்க்க முடியாத இடியாப்பச் சிக்கலாய் இருக்கிறது, புதுச்சேரி கேபிள் டி.வி. விவகாரம். 
இது தொடர்பாக தனது ஆதங்கத்தைக் கொட்டு கிறார் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன். ''புதுச்சேரியில் கேபிள் டி.வி-க்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் இருக்கிறது. அதேபோன்று 390 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்கள் பொது மக்களிடம் இருந்து மாதம்தோறும் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சந்தா வசூல் செய்கின்றனர். எந்த கேபிள் டி.வி. என்றாலும், புதுச்சேரி நகராட்சிக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது, ஆனால் அதனை யாரும் மதிப்பதே இல்லை.
இப்போது புதுச்சேரியில் 3 லட்சத்து 42 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. 3 லட்சம் குடும்பங் களில் கேபிள் இணைப்புகள் உள்ளன. அதனால் 10 சதவிகிதம் கேளிக்கை வரி என்றால் மாதம் ஒரு கோடி ரூபாய் வரை நகராட்சிக்குக் கிடைக்க வேண்டும். ஆனால் புதுச்சேரியில் மொத்தமே 67 ஆயிரம்இணைப்புகள் மட்டுமே இருப்பதாகவும், ஓர் இணைப்புக்கு பொது மக்களிடம் இருந்து மாதம் 100 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதாகவும் பொய்க் கணக்குக் காட்டி, அரசை ஏமாற்றுகின்றனர். கிட்டத்தட்ட 2 லட்சத்து 33 ஆயிரம் இணைப்புகள் நகராட்சியின் கணக்கில் வரவில்லை. சுமார் 1,000 இணைப்புகள் வைத்திருக்கும் ஒரு கேபிள் ஆபரேட்டர் 400 இணைப்புகள் மட்டுமே இருப்பதாகக் கணக்குக் காட்டி, அதற்கு மட்டுமே வரி செலுத்துகிறார். மீதி இணைப்புகள் எங்கே போயின? இப்படி 390 ஆபரேட்டர்களும் போலிக் கணக்குக் காட்டுவதால், புதுச்சேரி அரசுக்குப் பல கோடிகள் வரி இழப்பு.  
புதுச்சேரியில் ஐந்து சர்வீஸ் ஆபரேட்டர்கள் உள்ளனர். லோக்கல் சேனல் நடத்துபவர்கள் மாதம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை சேனல் உரிமையாளர்களிடம் இருந்து பெறுகின்றனர். இந்த எம்.எஸ்.ஓ-க்களும் அரசுக்கு எந்த வரியும் செலுத்துவது கிடையாது. நகராட்சியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவே திணறும் புதுச்சேரி அரசு, இதுபோன்ற வரிப் பாக்கிகளில் கவனம் செலுத்தினால், நிதிப் பற்றாக்குறையை நிரந்தரமாகவே தீர்க்கலாம். சில பகுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் சேனல் லோகோக்களைத் தூக்கிவிட்டு, ஆபாசப் படங்களைக் காட்டும் கீழ்த்தரமான காரியங்களையும் சிலர் செய்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகளைக் களைந்து, ஒவ்வொரு கேபிள் ஆபரேட்டரிடமும் வரித் தொகையை வசூல் செய்ய நகராட்சி முன்வரவேண்டும்'' என்றார்.    
புதுச்சேரியின் பிரதான கேபிள் டி.வி. ஆபரேட்டர் மற்றும் முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் ஜான்குமாரிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ''லோக்கல் சேனல்கள் இல்லை என்றால், பொது மக்கள் மாதம்தோறும் 400 ரூபாய் கேபிள் சந்தாவாக கொடுக்கவேண்டி இருக்கும். நாங்கள் லோக்கல் சேனல்களிடம் மாதம் 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை, அந்தந்த நெட்வொர்க்குக்கு ஏற்ற மாதிரி வாங்குகிறோம். அந்தப் பணத்தைத்தான் கட்டணச் சேனல்களுக்குக் கொடுக்கிறோம். என்னிடம் நான்கு சேனல்கள் இருக்கிறது. நான் நகராட்சிக்கு ஒவ்வொரு மாதமும் சரியாக வரி கட்டிவிடுகிறேன்.
புதுச்சேரி நகராட்சி எப்படி வீட்டு வரி வசூல் செய்கிறதோ, அப்படியே ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கேபிள் வரியையும் வாங்கிக்கொள்ளும் முறை வரவேண்டும். ஏனென்றால் நகராட்சி வரி கட்டுவதற்காக, பொதுமக்களிடம் இருந்து நாங்கள் கூடுதல் பணம் வசூல் செய்ய முடிவது இல்லை. அதனால்தான் 500 இணைப்புகள் வைத்திருக்கும் ஆபரேட்டர் 100 இணைப்புகள் வைத்திருப்பதாக பொய் சொல்லவேண்டிய நிலை உண்டாகிறது'' என்றார்.
புதுச்சேரி நகராட்சி கமிஷனர் அழகிரியிடம் பேசினோம். ''புதுச்சேரி நகராட்சியில் மட்டும் கேபிள் ஆபரேட்டர்கள் 90 லட்சம் ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளனர். இப்போது 40 லட்சம் வரை வசூலித்துவிட்டோம். மீதித் தொகையை தவணை முறையில் வசூல் செய்துவிடுவோம். இப்போது மாதாமாதம் கேபிள் டி.வி. வரியை வசூல் செய்து வருகிறோம்'' என்று பட்டும் படாமலும் சொன்னார்.
இந்த விவகாரம் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சரான பன்னீர் செல்வம், ''தவணை முறையில் வரி செலுத்துவதாக ஆபரேட்டர்கள் கோரிக்கை வைத்த காரணத்தால், அதனை நடைமுறைப்படுத்தி வருகிறோம். மக்களிடம் நகராட்சி ஊழியர்கள் நேரடியாகச் சென்று வரி வசூல் செய்வதெல்லாம் இயலாத காரியம். கேபிள் ஆபரேட்டர்களிடம் இருந்துதான் கேளிக்கை வரி வசூல் செய்யப்படும். வரி கட்டத் தவறுபவர்களின் கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களைக்கொண்டு புதுச்சேரியில் உள்ள மொத்த இணைப்புகளையும் கணக்கெடுக்க உள்ளோம். அதன் பிறகு அனைவரும் சரியான கணக்குக் காட்டவேண்டிய சூழல் உருவாகிவிடும்'' என்றார்.  
ம்... பார்க்கலாம்.

No comments:

Post a Comment