பெரியாரின் பிறந்த நாளை ஈரோட்டில் படு உஷ்ணமாகக் கொண்டாடி முடித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. 'பெரியாரை மதிக்காத சீமான், பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தக் கூடாது’ என்று, திராவிடர் கழகத்தினர் எதிர்ப்புக் காட்ட, அதைப் பொருட்படுத்தாமல் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்.
பொதுக்கூட்டத்தில் முதலில் பேசிய மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வன், ''எங்களுக்கு வழிகாட்டிகள் பெரியாரும் தலைவர் பிரபாகரனும்தான். எங்களின் தமிழ் தேசியத்துக்குத் தந்தை பெரியார் தடையாக இருந்தால், அவரை ஒதுங்கி நில்லுங்கள் என்றுதான் சொல்வோம்'' என்று, தீயைக் கொளுத்திவிட்டு அமர்ந்தார்.
இளைஞர் பாசறை மாநில ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், ''புலியோடு பூனையை மோத விட்டால் பரவாயில்லை. எலிக்குட்டியை அல்லவா மோத விடுகிறார்கள்? கூடங்குளம் பாதுகாப்பானது என்கிறார் வீரமணி. அய்யா வீரமணியே... பெரியார் உங்களிடம் படமாக மட் டும்தான் இருக்கிறார். எங்களுக்கு அவர் பாட மாகவும் இருக்கிறார். உங்களிடம் அவருடைய சொத்து மட்டும்தான் இருக்கிறது. எங்களிடம் அவருடைய அறிவு இருக்கிறது. பிரபாகரனை பற்றி தரக்குறைவாக பேசிய முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு வாய் அடக்கம் தேவை. இல்லை என்றால் உங்கள் தலைவர் கலைஞருக்கு வரலாற்றில் நிகழ்வது உனக்குத் தெருவில் நிகழும். நாங்கள் சொல்ல மாட்டோம். செய்து காட்டுவோம்'' என்று எச்சரித்தார்.
கடைசியாக, தொண்டையைச் செருமியபடி மைக் பிடித்தார் சீமான். ''பெரியாரைப் புறந்தள்ளி எந்தச் சமூக மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. மார்க்ஸ், லெனின், பகத்சிங், போஸ் ஆகியோரை எப்படி வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு இருக்கிறோமோ... அதைப்போலவே பெரியாரையும் ஏற்றுக் கொண்டுதான் இருக் கிறோம். ஆனால், எங்களுக்குத் தலைவர் எங்கள் இனத்தில் பிறந்த பிரபாகரன் மட்டும்தான்.
மராட்டியத்தில் பிறந்த சிவாஜிக்கு இங்கே இந்து முன்னணியினர் படம் வைத்து இருக்கிறார்கள். மராட்டியத்தில் எங்காவது தீரன் சின்னமலையின் படம் இருக்கிறதா? ஆரியத்தை வீழ்த்துவதற்குத்தான் திராவிடம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் ஆரியத் தோடு திராவிடம் கைகுலுக்கிக் கொண்டது. இங்கு சாதிக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பறையர் நின்றால் வன்னியர் ஓட்டுப் போட மாட்டார். வன்னியர் நின்றால் பறையர் ஓட்டுப் போட மாட்டார். அதனால்தான் வடமாவட்டங்களில் தமிழர் அல்லாத விஜயகாந்த்தும், ஜெயலலிதாவும் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளைக் கைப்பற்றினர்.
கச்சத்தீவை மீட்போம் என்று இப்போது போராடுபவர்கள், அதைக் கொடுக்கும்போது என்ன செய்து கொண்டு இருந்தனர்? மலை முழுங்கி மகாதேவன் என்று புராணத்தில் சொல்வார்கள்... அதை இப்போது கிரானைட் விஷயத்தில் நேரடி யாகப் பார்க்க முடி கிறது. போன வருஷம் பார்த்த ஆறு மலை கள், இந்த வருஷம் காணாமல் போய்விட்டன. ஆறுமுகச்சாமி எவ்வளவு வேண்டு மானாலும் மணலைக் கொள்ளை அடிக்கலாம். யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
சிவகாசி பட்டாசு விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 40 லட்சம் ரூபாய் மருந்துகளைத் தருகிறார் மம்முட்டி. மலையாளியாக இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறார். யாராவது ரசிகர் மன்றம் ஆரம்பிக்க நினைத்தால், மலையாளியாக இருந்தாலும் பரவாயில்லை என்று, மம்முட்டிக்கு ஆரம்பியுங்கள். நம் ஊரில் இருக்கிற முட்டாள்களுக்கு ஆரம்பிக்காதீர்கள்.
பட்டாசைக் கூட பாதுகாப்பாகத் தயாரிக்க முடியாத இந்த அரசு, அணுஉலை பாதுகாப்பானது என்று வாய் கிழியப் பேசுகிறது. இந்தியா விற்பனைக்கு வந்து விட்டது. விற்பனை செய்வதற்கான இரண்டு தரகர்கள் நாராயணசாமியும், ப.சிதம்பரமும்தான். பத்திரப்பதிவு முற்றிலும் இலவசம். மொத்த உரிமையும் சோனியாவுக்குத்தான். எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்துக் கொள். மாட்டிக்கொண்டால் பதவி விலகினால் போதும். இந்த அநியாயங்கள் அனைத்தையும் மாற்றுவோம். 2020-ல் தமிழகத்தை ஆள்பவனும் தமிழன்.. எதிர்க்கட்சியும் தமிழன் என்ற நிலையை உருவாக்குவோம். 2016 லட்சியம் 2020 நிச்சயம்'' என்று அனல் தெறித்து முடித்தார்.
சீமானுக்குப் பதிலடிக் கொடுப்பதற்காக, கூடிய சீக்கிரமே வீரமணி தலைமையில் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு களைச் செய்து வருகிறது திராவிடர் கழகம். ஈரோடு மக்களுக்கு நல்ல பொழுதுபோக்குதான்.
No comments:
Post a Comment