சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும், அதிரடிப் படைக்கும் நடந்த சண்டையைப் போலவே, வீரப்பன் கதையை 'வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக்கி இருக்கும் டைரக்டர் ரமேஷ§க்கும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே நடக்கும் சண்டையும் நீண்டுகொண்டே இருக்கிறது!
''எனது கணவர் வீரப்பன் புகழை இழிவுபடுத்தும் வகையில் 'வன யுத்தம்’ படத்தை ரமேஷ் எடுத்து இருக்கிறார். எனவே, அந்தப் படத்தை தடை செய்யவேண்டும்'' என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் முத்துலட்சுமி. அப்போது, ''நீங்கள் முதலில் 'வனயுத்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்'' என்றது நீதிமன்றம். உடனே, முத்துலட்சுமிக்காக பிரத்யேகமாகத் படத்தைத் திரையிட்டுக் காட்ட ரமேஷ் அழைப்பு விடுத்தும், வருவதாக ஒப்புக் கொண்ட முத்துலட்சுமி ஏனோ வரவே இல்லை.
முதலில், முத்துலட்சுமியிடம் பேசினோம். ''நான் 'வனயுத்தம்’ படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து இருக்கிறேன். இந்த நேரத்தில் எப்படி பட ரிலீஸ் குறித்து, பத்திரிகைகளில் விளம்பரம் செய்யலாம்? செய்யாத குற்றத்துக்காக கர்நாடக சிறையில் நான் மூன்று வருடங்கள் தண்டனை அனுபவித்தேன். நிரபராதி என்று சொல்லி கன்னட நீதிமன்றம் என்னை காலம் கடந்துதான் விடுதலை செய்தது. சிறையில் இருந்து வந்த நான், கன்னட மீடியாக்களை அழைத்து, 'வீரப்பன் கெட்டவர் இல்லை. நியாயத்துக்காக சண்டை போட்டவர்...’ என்று விளக்கினேன். இப்படிப்பட்ட நேரத்தில் கன்னடத் தில், 'அட்டகாசா’ என்ற பெயரில் படத்தை வெளியிட்டு என் கணவர் வீரப்பனைக் கெட்டவராகச் சித்திரிப் பது எந்த வகையில் நியாயம்? 'வன யுத்தம்’ படத்தில் நான் அப்படிக் காட்டவே இல்லை என்று சொல்லும் ரமேஷ் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
2007-ல் என்னைச் சந்தித்து 'வீரப்பன் கெட்டவன். ராஜ்குமார் நல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்...’ என்று சண்டை போட்டுவிட்டுச் சென்றவர்தான். அவர் எப்படி என் கணவரை நல்லவராகக் காட்டுவார்?'' என்று பொரிந்து தள்ளினார்.
இந்தநிலையில், 'எங்கள் சாதியில் பிறந்து தமிழர்களுக்காகப் போராடிய வீரப்பனைத் தவறாகச் சித்திரிக்கும் 'வனயுத்தம்’ படத்தைத் தமிழ்நாட்டில் எங்கேயும் திரையிட விட மாட் டோம்’ என்று கிளம்பி இருக்கிறார், வன்னியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் 'காடுவெட்டி’ குரு. அவரிடம் பேசினோம்.
''வீரப்பன் வாழ்க்கையில் என்னென்ன சம்பவங் கள் நடந்ததோ, அதை அப்படியே அப்பட்டமாய் மக்கள் தொலைக் காட்சியில் 'சந்தனக்காடு’ தொடரில் காண்பித்தோம். கடைசியில் காவல்துறையும் அதிகார வர்க்கமும் சேர்ந்து வீரப்பனை விஷம் வைத்துத்தான் கொன்றார்கள் என்ற உண்மையை உலகறிய ஒளிபரப்பியது மக்கள் தொலைக்காட்சி. அப்போது, நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளுக்கு காவல்துறையிடம் இருந்து எதிர்ப்பும் மறுப்பும் வரவே இல்லை. ஆனால், 'வனயுத்தம்’ படத்தில் காவல்துறையினர், வீரப்பனை என்கவுன்ட்டர் செய்வதுபோன்று காட்சி அமைத்து இருப்பதாக அறிகிறோம்.
இந்தப் படம் கன்னடத்தில் 'அட்டகாசா’ என்ற பெயரில் வெளியாகிறது. அதில் வீரப்பன், ராஜ்குமாரை கடத்தி வைத்து சித்ரவதை செய்வதுபோன்று காட்சிகளைச் சித்திரித்து இருக்கிறார், கன்னடர் ரமேஷ். காட்டில் ராஜ்குமார் இருந்தபோது அவருக்கு வீரப்பன் எப்படி எல்லாம் விருந்தோம்பல் செய்தார் என்பதை அண்ணன் நெடுமாறனைக் கேளுங்கள்... விளக்கமாகச் சொல்வார். ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன், தனக்கு பொதுமன்னிப்பு தரச்சொல்லி சுயநலக்கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. காவிரித் தண்ணீர் கேட்டார். கர்நாடகத்தில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கச் சொன்னார். அதிரடிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ்க் குடும்பங்களுக்கு நஷ்டஈடு கேட்டார். வீரப்பனாக நடித்திருக்கும் கிஷோர் ஒரு கன்னடர். போலீஸ் அதிகாரி விஜயகுமாராக நடித்திருக்கும் அர்ஜுன் ஒரு கன்னடர். ஏற்கெனவே 'குப்பி’ படம் மூலமாக ஈழத்தமிழர் போராட்டத்தை இழிவுபடுத்தியவர் இந்த ரமேஷ். கன்னடர்கள் சேர்ந்து எடுக்கும் படம் நிச்சயமாக, வீரப்பனைக் குறை கூறுவதாகத்தான் இருக்கும். அதனால் 'வன யுத்தம்’ படத்தை உடனே தடை செய்ய வேண்டும்'' என்று கொந்தளித்தார் குரு.
இவர்களின் கருத்துகளைச் சொல்லி, 'வன யுத்தம்’ இயக்குநர் ரமேஷிடம் பேசினோம்.
''முத்துலட்சுமி முதலில் படத்தைப் பார்க் கட்டும். நான் வீரப்பனைப் பற்றி தவறாக சித்தி ரித்து இருந்தால், என்னைப் பற்றி கடுமையாக விமர்சிக்கட்டும். நடக்காத சம்பவத்தை நான் படமாக்கி இருப்பதாகச் சொன்னால், அந்தக் காட்சிகளை நீக்கி விடுகிறேன். படத்தைப் பார்க்காமலேயே விமர்சித்தால் எப்படி? மத்திய அரசால் நியமித்த ஐந்து நபர் கொண்ட சென்சார் போர்டு, 'வனயுத்தம்’ படத்தைப் பார்த்துவிட்டு 'யுஏ’ சர்ட்டிஃபிகேட் கொடுத்திருப்பதால், பட ரிலீஸ் குறித்து விளம்பரம் செய்வதில் தப்பு இல்லையே. இப்போதுகூட, 14-ம் தேதி படம் பார்க்க வருவதாக முத்துலட்சுமி ஒப்புக்கொண்டு இருக்கிறார். மற்றபடி குரு என்பவர் அறிக்கை குறித்து நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.
'டேம் 999’ போன்று மீண்டும் ஒரு வில்லங்கம் சினிமாவை வைத்து எழுந்து விடக்கூடாது!
No comments:
Post a Comment