Thursday, September 6, 2012

'வன்னியன் ஆளணும். புதிய ஆயுதத்தை கையில் எடுக்கும் ராமதாஸ்.


புதிய அரசியல், புதிய நம்பிக்கை’ என்ற கோஷத்தோடு வன்னியர் இன மக்கள் வாழும் மாவட்டங்களில் சில மாதங்களாக வலம் வந்தார் பா.ம.க-வின் நிறுவனரான ராமதாஸ். அடுத்து டாஸ்மாக் கடைகளுக்குப் பூட்டு போடும் போராட்டம் நடத்தினார். லேட்டஸ்ட்டாக அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்... 'வன்னியன் ஆளணும்’ என்பதுதான்! 
செப்டம்பர் 17-ம் தேதி தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வன்னியருக்குத் தனி இட ஒதுக்கீடு கோரிப் போராட்டம் அறிவித்திருக்கிறது பா.ம.க. தலைமை. அந்த நிகழ்ச்சிக்கு கட்சித் தொண்டர்களை அழைக்கும் விதமாக ஆகஸ்ட் 29-ம் தேதி போராட்ட விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தினார் மருத்துவர். அந்தக் கூட்டத்தில் பேசிய அனை வரின் பேச்சிலும் ஓவர் சாதி நெடி!
ராமதாஸுக்கு முன்பாக மைக் பிடித்த மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாஜி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி-க்கள் என அனைவரின் பேச்சிலும் சாதி கோஷமே கனமாக ஒலித்தது. ராமதாஸ் முகத்தில் மலர்ச்சி தென்படுகிறதா என்று கவனித்தபடியே பேசினார்கள்.
இறுதியாகப் பேசிய ராமதாஸ், ''மிகப் பெரிய வரலாறுகொண்ட, ஆண்ட வம்சம் நம் வன்னிய வம்சம். தமிழகத்தின் பெரும்பான்மையாக உள்ள இனமும் நம் வன்னிய இனம். நியாயமாகப் பார்த்தால் நாம்தான் தமிழகத்தை அதிக முறை ஆண்டு இருக்க வேண்டும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங் களில் அங்குள்ள பெரும்பான்மை சமூகம்தான் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. தமிழகத்திலோ நிலைமை தலைகீழ். திராவிடக் கட்சிகள் நம்மை ஏய்த்து நம் மக்களை மாறிமாறி ஆட்சி செய்கின்றன. இதுநாள் வரை நாம் ஏமாந்தது போதும். இனி வன்னியர்கள் அனைவரும் விழித்தெழுவோம்.
ஒவ்வொரு வன்னியனுக்கும் குலதெய்வம் பாட்டாளி மக்கள் கட்சிதான். இன்று முதல் எல்லா வன்னியனும் எந்த நேரமும் தன் வாயில் உச்சரிக்க வேண்டிய மந்திரம் 'வன்னியன் ஆளணும்’ என்பதுதான். இந்த ஒன்பது எழுத்து மந்திரத்தில்தான் வன்னியர்களின் எதிர்காலம் அமைந்து இருக்கிறது. தூங்கப்போகும் முன், காலை எழுந்த உடன், குழந்தைகளைப் பார்க்கும்போது, உறவுகளைப் பார்க்கும் போது என எந்நேரமும் உங்கள் உதடு 'வன்னியன் ஆளணும்’ என்ற மந்திரத்தை முணுமுணுக்கட்டும்.
வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டு நம் கட்சி பல ஆண்டுகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, கருணாநிதி அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அதில், 137 மிகவும் பிற்பட்ட சாதிகள் உள்ளடங்கிய அனைவருக்கும் சேர்த்து இட ஒதுக்கீட்டை அறிவித்தார். நீண்ட காலம் போராடிய வன்னிய சமூகம் பத்து பேரில் ஒருவராக நின்றுதான் அந்த இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடிகிறது.

தர்மபுரியில் 50 தனியார் பஸ் உரிமையாளர்கள் இருந் தால், அதில் 15 பேர் வன்னியர்களாக இருக்கணும். இதேபோல தொழில் துறை, அரசியல் உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் நம் சாதிக்காரர்களின் கை ஓங்கணும். அதற்கான அடிக்கல்லை நாட்டும் வேலையைத்தான் இப்போது நாம் தொடங்கி இருக்கிறோம். சத்ரிய வம்ச வீரர்களான உங்களை நம்பித் தான் வன்னியர்களுக்கு 20 சதவிகித ஒதுக்கீடு கேட்டு பா.ம.க களத்தில் இறங்க இருக்கிறது. தர்மபுரியைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் இந்தப் போராட்டம் நடக்கும். வட மாவட்டங்களை நம்முடைய போராட்டங்களால் அதிரவைக் கணும். ஆட்சியாளர்கள் நம்மைப் பார்த்துப் பதறணும்'' என்று பொரிந் தார்.
கூட்டத்துக்கு வந்திருந்த பார் வையாளர்கள் சிலர்,, ''நடிகர் வடிவேலு ஒரு படத்துல 'மறுபடியும் முதல்ல இருந்தா..?’னு கிண்டல் அடிச்ச மாதிரி, பா.ம.க. மீண்டும் தன் குழந்தைப் பருவத்துக்கே போயிருச்சு. உரக்க சாதி கோஷம் போட்டு தங்கள் கட்சிக்குப் புது விதையை ஊன்றி புது இன்னிங்ஸை தொடங்க நினைக்கிறாங்க. பலன் எப்படியிருக்குமோ... பொறுத்திருந்து தான் பார்க்கணும்'' என்றபடியே கலைந்தனர்.

No comments:

Post a Comment