Monday, September 3, 2012

கட்சி பொதுக்கூட்டத்திலும் தனது பாணியில் நாக்கைக் கடிக்கும் விஜயகாந்த்.


மேடையில் நின்றபடி தன்னுடைய தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சகட்டுமேனிக்குத் திட்டுவது விஜயகாந்த் ஸ்டைல். 'இப்போது விஜயகாந்த் நிறைய மாறிவிட்டார். தொண்டர்களிடம் அன்போடு இருக்கிறார்’ என்று நாம் எழுதி இரண்டு வாரம் முடிவதற்குள் மீண்டும் மாறிவிட்டார் விஜயகாந்த். 
கடந்த 26-ம் தேதி, கடலூர் மஞ்சக்குப்ப மைதானத் தில் பொதுக்கூட்டம். கிட்டத்தட்ட 7,000 பேர் கூடி இருந்தனர். கூட்ட அரங்கில் 1,000 நாற்காலிகள் மட்டும் போடப்பட்டு இருந்ததால், ஏகத் தள்ளுமுள்ளு. இது போதாது என்று ராகு காலத்தில் விழாவுக்கு வர வேண்டாம் என்று விஜயகாந்த் தனது சகலை ராமச்சந்திரன் வீட்டில் இருந்து மிகவும் தாமதமாகவே பிரேமலதாவுடன் பொதுக்கூட்டத்துக்கு வந்தார்.
மைக் பிடித்த பிரேமலதா, ''தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி என்றால், இயற்கை அன்னைக்கே பிடிக்காது. அவரின் ஆணவ ஆட்சியின்போதுதான் சுனாமி, 'தானே’ புயல் போன்ற இயற்கைச் சீரழிவுகள் மக்களை வாட்டி வதைத்தன. இப்போது மழை பெய்யாமல் இருக்கிறது. நாங்கள் அ.தி.மு.க., தி.மு.க. போன்று நலத்திட்ட உதவிகளை, யாரிடமும் இருந்து வசூல் செய்து நடத்த வில்லை. எங்கள் சொந்தப் பணத்தில் செய்கிறோம்'' என்றார் நறுக்கென.
ஏற்கெனவே, கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுகளைக் கண்டு கண் சிவந்த நிலையில் இருந்தார் விஜயகாந்த். அவர் பேசுவதற்காக மைக் பிடித்ததும் கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்தனர் தொண்டர்கள். அதனால் மீண்டும் உஷ்ணமான விஜயகாந்த், ''இந்த சத்தத்தை எல்லாம் நீங்க போடலை. ஜெயலலிதாவின் டாஸ்மாக் கடைதான் போடச் சொல்லுது. வரும்போதே எல்லாம் கடைக்குப் போயிட்டுத்தான் வந்தீங்களா?'' என்று தொண்டர்களைப் பார்த்துக் கோபப்பட்டார். ஆனாலும் சத்தம் அதிகமாகவே, மைக்கை விட்டு சில அடிகள் தள்ளி வந்து கையை உயர்த்திக் காட்டி... தனது பாணியில் நாக்கைக் கடிக்க... ஒரு வழியாக அமைதியானது கூட்டம்.
பிறகு பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''தானே புயலின்போது ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து போனாங்க. காரில் வந்தால்தானே மக்களின் கஷ்டம் புரியும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது கட்சியின் சார்பில் எவ்வளவோ உதவிகளைச் செய் தோம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் வழங்குவோம்’ என்றார் ஜெயலலிதா. ஆனால், இப்போதுதான் 10 மணி நேர மின்தடை உள்ளது. தே.மு.தி.க. இல்லையென்றால் அந்த அம்மையார் கண்டிப்பாக ஆட்சியைப் பிடித்து இருக்க முடியாது!'' என்று அழுத்தமாகப் பேசியதும் தொண்டர்கள் மீண்டும் உற்சாகமாக விசிலடித்தனர். உடனே முகம் சிவந்த விஜயகாந்த், ''இப்படிச் செய்தால் போலீஸ் உங்களை அடிப்பார்கள். அதற்கு நான் பொறுப்பல்ல'' என்று உணர்ச்சி வசப்பட்டார். ஆரவாரம் செய்த தொண்டர்களை அமைதிப்படுத்த நிர்வாகி ஒருவர் மேடைக்கு அருகில் வர, விஜயகாந்த்தோ பேசிய மைக்கை ஓரமாகத் தள்ளிவிட்டு, அந்த நிர்வாகியை அடிக்கப் பாய்ந்தார். ஒரு வழியாகக் கூட்டம் நடந்து முடிந்தது.
கடலூரில் டென்ஷனான விஜயகாந்த்துக்கு அடுத்து நடந்த வேலூர் பொதுக்கூட்டம் நிம் மதியைக் கொடுத்தது என்றே சொல்லலாம். வேலூரில் எந்தப் பொதுக்கூட்டம் என்றாலும் கோட்டை மைதானத்தில் நடத்தத்தான் காவல் துறையினர் அனுமதி வழங்குவார்கள். ஆனால், தே.மு.தி.க. கூட்டத்துக்கு அங்கே கடைசி வரை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்தனர். டிராஃபிக் பிரச்னை அதிகம் ஏற்படும் என்று, புதிய மாந கராட்சி சாலையில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தனர். அங்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு மனைவியுடன் மேடை ஏறிய விஜயகாந்த், ''அந்த அம்மா இங்க வருதுன்னா, அஞ்சு நாளுக்கு முன்னாடியே டிராஃபிக்கை ஒழுங்குபடுத்துறீங்க. ஆனா, எங்களுக்கு அனுமதி கொடுக்கவே நாள் கணக்கா இழுத்தடிக்கிறீங்க. இப்பவும் சொல்றேன். காலம் மாறும். அப்போ நீங்க எல்லோரும் அப்படியே மாறி ஆகணும். காவல் துறை உங்கள் நண்பன்னு சொல்லி ஊர் முழுக்க வலம் வர்றீங்க. ஆனா, இன்னைக்கும் பொதுமக்கள் அவதிப்படுறாங்க என்றால், அதுக்கு முழுக்க முழுக்க நீங்கதான் காரணம்!'' என்று போலீஸ் மீது பாய்ந்த விஜயகாந்த், ''ஒரு பக்கம் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் இளைஞர் அணியைப் பலப்படுத்துறேன்னு சொல்லிக்கிட்டுத் திரியுறாங்க. ஆனா, எதுவும் வேகாது. எல்லா இளைஞர்களும் எங்க பக்கம்தான் இருக்காங்க. மின்சாரம் பற்றி நந்தம் விஸ்வநாதன் 'காத்து வரலை, அதனால் காற்றாலை செயல்படலை, அப்புறம், கூடங்குளம் இன்னும் முழுமையா செயல்படலை!’ (அவர் போலவே பேசிக்காட்டுகிறார்) என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்கிறார். சென்னையில் ஒரு குழந்தை எலி கடித்து இறந்துபோனதாச் சொன்னாங்க. அதுக்கு அமைச்சர் விஜய் 'எனக்கு அதுபத்தி தெரியாது’னு சொல்றார். அப்புறம் ஏன்யா அமைச்சரா இருக்கே? 2014-ம் ஆண்டு உங்க வீட்டுக்கு வந்து பிச்சை கேட்பதுபோல அவங்க ஓட்டு கேட்பாங்க. அவங்களை ஒதுக்கித் தள்ளுங்க!'' என்று ஆர்ப்பரித்து விடை பெற்றார்.
-

No comments:

Post a Comment