Friday, September 21, 2012

"என் எதிரி, என் கட்சிக்குள்ளேயே இருக்கான்!" நேருவின் நெத்தியடி



"என்ன பேசினாலும் உள்ளே புடிச்சுப் போட்டுர் றாங்க... என்னையும் அந்த லிஸ்ட்ல சேர்க்கணும்னு ஆசையா உங்களுக்கு?'' - சிரித்துக்கொண்டே என் எதிரில் அமர்கிறார் கே.என்.நேரு.
 இறுக்கி நெருக்கிய நில அபகரிப்பு வழக்குகளுக்கு இடையே திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி. தம்பி ராமஜெயம் கொடூரமாகக் கொல்லப்பட்டது, இடையிடையே உட்கட்சிப் பூசல். அலைக்கழிக்கும் விவகாரங்களுக்கு மத்தியில் தவிக்கும் நேரு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மனம் திறக் கிறார்...  
''உங்கள் வலது கரமாகச் செயல்பட்டுவந்த ராமஜெயத்தின் மறைவு உங்களை அரசியலில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டதாகச் சொல்கிறார்களே... உண்மையா?''
''நேரு அதே உத்வேகத்துடன்தான் இருக்கான். தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக 10 ஆயிரத்துக்கும் மேல் தொண்டர்கள் கலந்துக்கிட்டது திருச்சியில்தான். நான் 50 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல்ல அதிக இடங்களை ஜெயிச்சோம். நல்ல ஆரோக்கியமா இருக்கிறவன்கிட்ட, 'உடம்பு நல்லா இருக்கா?’னு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருந்தா, அவன் சோர்வடைவான்ல... அப்படித்தான் என்னைச் சுத்தி காரியங்கள் நடந்துட்டு இருக்கு. ஆனா, திருச்சியில் தி.மு.க-வின் செல்வாக்கு குறையாது. குறையவும் விட மாட்டேன்!''  

''ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை ஆறு மாதத்தைத் தாண்டியும் முன்னேற்றம் எதுவும் இல்லையே?''
''அட... விசாரணை கெடக்கட்டும் விடுங்க. ஆனா, போலீஸ்காரங்களே ராமஜெயத்தைப் பற்றி தப்புத் தப்பாத் தகவல் பரப்புறாங்களே... அதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கு. அவன் அப்படிப்பட்டவன் கிடையாது. (சட்டெனக் கண் கலங்குகிறார்) என்னைவிட மக்களுக்காக அதிகம் சேவை செய்தவன். அவனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததா போலீஸே மீடியா மக்களுக்குச் செய்தி கொடுக்கிறாங்க. அந்த வழக்குல என்ன நடக்குதுன்னே தெரியலை. எனக்கும் உண்மை வெளிவரணும்னுதான் ஆசை. கட்டுக்கதையா வதந்தி பரப்பாதீங்க. பெண் தொடர்பு காரணமாகத்தான் ராமஜெயம் கொல்லப்பட்டார்னா, அதைப் பகிரங்கமாச் சொல்லுங்களேன். ஆதாரத்தோட சொல்ற எந்த உண்மையையும் நான் ஏத்துக்குவேன். எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது!''
''விசாரணை இழுத்தடிக்கப்படுவதில் என்ன உள்நோக்கம் இருக்கும்?''
''யாராவது, ஏதாவது மனசுவிட்டுப் பேசினால்தானே, என்ன ஏதுனு எனக்குப் பிடிபடும். விசாரணை அதிகாரிகள் எங்ககிட்ட பேசவே யோசிக்கிறாங்க. நேர்மையான அதிகாரிகள்கூட உண்மையை மறைக்கிறாங்க. என்கிட்ட பேசுறதே குற்றங்கிற மாதிரி நடந்துக்கிறாங்க. இந்தச் சூழ்நிலையில் நான் என்ன சொல்ல முடியும்? இதே வழக்கை விசாரிச்சு, ஒரு மணி நேரத்தில் உண்மையைக் கண்டுபிடிக்கும் திறமையுள்ள அதிகாரிகளும் இங்கே இருக்காங்க. ஆனா, ஏனோ அவங்ககிட்ட இந்த வழக்கைக் கொடுக்கலை. இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல் துறை அதிகாரிகள், மேலிடம் சொல்றதை மட்டும் அல்ல... சொல்லாததையும் சேர்த்தே செய்றாங்க!''
''ராமஜெயம் கொல்லப்பட்டபோது உங்கள் செல்போன் நம்பரைக் கொலையாளிகள் கேட்டதாகவும் எனவே, உங்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் சொன்னார்களே?''
''போலீஸ்தான் அப்படிச் சொல்லுது. அதுக்காக முடங்கிப்போய் மூலைல உட்கார்ந்துட முடியுமா? ஜெயலலிதா சொன்ன மாதிரி என்கிட்ட கோடிக்கணக்கில் சொத்து இருந்தா, அதை எல்லாம் வித்துட்டு வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கலாம். ஆனா, இப்பவும் நான் விவசாயம் செஞ்சுதான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கேன்!''
''அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. புள்ளிகள் தொடர்ந்து கைதாகிறார்களே..?''
''தொண்டர்களைச் சிறையில் தள்ளுவதால் அழியக்கூடிய இயக்கம் அல்ல தி.மு.க. மிசா, தடாவெல்லாம் பார்த்தவங்க நாங்க. முதலமைச்சர் அவர் மேல இருக்கும் வழக்கு விசாரணையைத் திசை திருப்ப தி.மு.க. தொண்டர்கள் மேல் நில அபகரிப்பு வழக்கு போட்டுக் குவிக்கிறாங்க. குறிப்பா, தி.மு.க-வில் ஆக்டிவ்வா வேலை பார்க்கிறவங்களைக் குறிவெச்சு நடவடிக்கைகள் பாயுது.''
''விஜயகாந்த் முதல் சீமான் வரை எந்தப் பிரச்னைக்கும் கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அதற்குத் தி.மு.க-வினர் யாரும் அதிரடி பதிலடி தருவது இல்லையே?''
''அவங்க செய்தியில இடம் பிடிக்கணும்னு எதையோ பண்ணிட்டு இருக்காங்க. நாம வேற எதுக்கு அவங்களைப் பத்திப் பேசி பேனைப் பெருமாள் ஆக்கணும் சொல்லுங்க. தமிழ்நாட்டில் தலைவர் கலைஞர்தான் அரசியல் மையம். ஒண்ணு 'கலைஞர் வாழ்க’னு சொல்லி அரசியல் செய்யணும். இல்லைன்னா, கலைஞரைத் திட்டி அரசியல் செய்யணும். ஆனால், கலைஞர் இல்லாம, அவர் பெயர் சொல்லாம இங்கே யாரும் அரசியல் செய்ய முடியாது. சீமானோ, வைகோவோ, விஜயகாந்தோ... எங்கே அவங்கஅவங்க கட்சித் தொண்டர்களைப் பத்து நாள் ஜெயில்ல இருந்துட்டு வரச் சொல்லுங்க பார்ப்போம். அட! அவ்வளவு ஏங்க... முதல்ல விஜயகாந்தை ஜெயிலுக்குப் போகத் தயாரானு கேளுங்க.
சிறைக் கொடுமையை அனுபவித்து கலைஞர் வளர்த்த கட்சி தி.மு.க. டெசோ மாநாட்டைக் கலைஞர் நடத்திக் காண்பித்த பிறகுதான் ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுத்துக்கிட்டு கலைஞரைக் குத்தம் சொல்றாங்க. வைகோ, சீமான், பழ.நெடுமாறன்... இவங்களுக்கு எல்லாம் பேச மட்டும்தான் தெரியும். வேறு எதுவும் செய்யத் தெரியாது. இவங்க மட்டும் இல்லை... சுப்பிரமணியன் சுவாமி, டி.என்.சேஷன் முதல் பத்திரிகையாளர்கள் வரை யார் தன்னைத் திட்டியிருந்தாலும், அவங்க பாதிக்கப்பட்டா... அவங்களுக்காக முதல் குரல் கொடுக் கிறது கலைஞர்தான்!''
''கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க-வின் தலைமை யாரிடம் வரும்?''
''தலைமைக்குப் பொருத்தமானவரைச் சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை. என்னைப் பொறுத்தமட்டில், தலைவர் கலைஞர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதற்கு எங்களுக்கு மிகவும் உத்வேகமாக இருப்பது தளபதி ஸ்டாலின் அவர்கள் மட்டுமே!''
''உங்களைப் பத்தி நல்லவிதமா சொல்றவங்களுக்குச் சமமா அவதூறு பரப்புறவங்களும் இருக்காங்களே... அது உங்களுக்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் உண்டாக்கி இருக்கே... அதுபத்தி என்ன சொல்றீங்க?''
''இதில் உண்மையைச் சொன்னா, நிறைய சிக்கல் வரும். இப்படியான தகவல்களைப் பரப்புறது எல்லாம் என் கட்சிக்காரங்கள்ல சிலர்தான். அ.திமு.க., காங்கிரஸ்காரங்ககூட என்னைப் பத்தி நல்லவிதமாத்தான் சொல்வாங்க. ஆனா, என் எதிரி, என் கட்சிக்குள்ளேயே இருக் கான். கட்சியில் என் இடத்தைப் பிடிக்கணும்னு ஆசைப்படுறவங்க கிளப்பிவிடுறது இதெல்லாம். எனக்கு எதிரிகள் வெளியில் கிடையாது!''  
''உங்கள் தலைவர் கலைஞரிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன... பிடிக்காதது என்ன?''
''பிடிக்கிறது, பிடிக்காதது எல்லாம் பிரச்னை இல்லை. அவர் கட்டளை எதுவாக இருந்தாலும், அப்படியே செய்றதுதான் என் கடமை. அது எனக்குப் பிடிக்கலைன்னாலும் தலைவர் சொல்லிட்டாரேனு செஞ்சு முடிப்பேன். அதுதான் நேரு!''

No comments:

Post a Comment