Thursday, September 20, 2012

முதல் தடவையாக முதலமைச்சர் நாற்காலியை பிடிக்க ஆசைப்படும் வைகோ.


செப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை ஏதாவது ஒரு நகரத்தில் மாபெரும் மாநாடாக ம.தி.மு.க. தொடர்ந்து நடத்திவருகிறது. இந்த ஆண்டு, கரூரில் நடந்த மாநாடு வித்தியாசமானது. ஏனென்றால், வைகோவை முதலமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்க வேண்டும் என்ற குரல் முதல் தடவையாக இந்த மாநாட்டில்தான் அதிகமாக ஒலித்தது. இதுவரை அப்படி யாராவது சொன்னால் அதனை மறுத்துப் பேசும் வைகோ, முதல் தடவையாக 'அதிகாரத்தைக் கைப்பற்று’ என்று தொண்டர்களுக்கும் உத்தரவிட்டு உற்சாகப்படுத்தியது, புதிய திருப்பம்தான். 
தமிழ் ஈழமே தீர்வு என்ற கோரிக்கையைவைத்து பொது வாக்கெடுப்பு நடத்துவது, தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் வரும் நவம்பர் 24-ல் தூத்துக்குடியில் மீனவர் வாழ்வு உரிமை மாநாடு, முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி தென் மாவட்டத்தில் நடைபயணம் என்று அடுத்த இரண்டு மாதங்களுக்கான வேலைத் திட்டத்தைத் தீர்மானமாக அறிவித்தார்கள். இதில் வித்தியாசமான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
'விவசாயத்துக்கு ஆள் கிடைக்காத நிலைமை இன்று இருக்கிறது. 100 நாள் வேலைத் திட்டத்தை, இனி பயனுள்ள விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும்’ என்ற தீர்மானம் பலராலும் வரவேற்கப்பட்டது.
''முதன்முதலாக மாநாட்டு மேடையில் சிவப்பு விளக்கு வைக்கப்பட்டு உள்ளது. பேச்​சாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்குள் பேச்சை முடிக்க வேண்டும் என்று வைகோ கட்டளை இட்டுள்ளார். கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகள் கழித்து முதன்​முதலாக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றால் சிவப்பு விளக்கு பொருத்​தப்பட்ட காரில் வைகோ சுழலப்போகிறார் என்பதற்கான அடையாளம் இது'' என்று நாஞ்சில் சம்பத் அடித்த கமென்ட்டுக்கு செம  கைதட்டல். ''கருணாநிதி தன் கட்சியில் இருந்து வைகோவை நீக்கியபோது தன் உடலில் தீவைத்து மாண்டானே 'நொச்சிப்பட்டி’ தண்டபாணி, அவன் பிறந்த ஊர் இந்தக் கரூர். ஒரு வகையில் அவனது தியாகத்தில் உருவான இந்த இயக்கத்தின் உதயமே கரூர்தான். அந்தக் காலத்தில் சோழர்கள் முடி சூடிக்கொள்வது இங்குதான் நடந்துள்ளது. எனவே, கரூருக்கு 'முடிவழங்கு சோழபுரம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. அந்தப் பெயரை நிரூபிக்கும்வகையில் எதிர்காலத்தில் தமிழகத்தின் முடியை ம.தி.மு.க. சூடப்போகிறது என்பதை மெய்ப்பிக்க நீங்கள் இங்கு திரளாக வந்துள்ளீர்கள்'' என்றார் ஈரோடு எம்.பி-யான கணேசமூர்த்தி.
இரவு 7 மணிக்கு மைக் முன் வந்தார் வைகோ.  
''1995-க்குப் பிறகு அரங்கு நிறைந்த, நெடுஞ்சாலை சூழ்ந்த ஒரு மாநாடு இன்றுதான் நடக்கிறது. 1967-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த அண்ணா, 'சிட்டுக் குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம் வரும்’ என்று முன்பு சொன்னதை நினைவுபடுத்திப் பேசினார். அதைப் போலவே இப்போதும் நான் சொல்கிறேன்... இந்தச் சிட்டுக் குருவிகள் பெரிய வல்லூறுகளை வீழ்த்தும் காலம் நெருங்கி வருகிறது. விடுதலைப் புலிகள் தன்னைக் கொல்ல முயன்றதாகப் பழி போட்டு என்னைக் கட்சியைவிட்டு நீக்கினார் கருணாநிதி.
என்னா​லா கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து வரப் போகிறது? அவரது உயிருக்கு ஆபத்து என்றால் அவரது மகன்கள் அவரைக் காப்பாற்றப்​போவது இல்லை. அவர்களின் பெயரை இந்தப் புனிதமான இடத்தில் நான் சொல்லவும் விரும்பவில்லை. கழகத்துக்காக தென் மாவட்டத்தில் தன் உயிரைக் கொடுத்து உழைத்த உத்தமத் தொண்டன் காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி கொலை செய்யப்பட்டபோது, மயானக் கரைக்கு தலைமைக் கழகத்தில் இருந்து ஏன் யாருமே வரவில்லை. கட்சியா நடத்துகிறீர்கள்... நீங்கள் நடத்துவது கம்பெனிதானே?'' என்று சீறினார்.
அடுத்து கூடங்குளம் பிரச்னையைத் தொட்டவர், ''அற வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கியைவைத்து சுட்டுள்ளார்கள். கழுத்தளவு தண்ணீரில் நின்று போராடிய மக்கள் மீது தாழ்வாக இந்திய விமானத்தைப் பறக்கவிட்டு மிரட்டி உள்ளார்கள். இந்திய விமானத்துக்கு அங்கே என்ன வேலை? அமைதியாகப் போராடுபவர்களை ஏன் அச்சுறுத்துகிறாய்? ஒரு பக்கம் போலீஸ்... கடலில் கப்பல் படை... தலைக்கு மேலே விமானம்... என முப்படைகளையும் வைத்து மக்களை மிரட்டுகிறாயா? இப்படி விமானம் பறந்தது தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தெரியாதா? தெரியாது என்றால், எதற்கு முதலமைச்சர் நாற்காலி?'' என்று கொந்தளித்த வைகோ, ''மக்களிடம் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று'' என்று மீண்டும் அழுத்தம் கொடுத்துச் சொல்லத் தவறவில்லை!

No comments:

Post a Comment