Monday, September 10, 2012

'இது மண்ணுக்கான வெற்றி!'' கிங்ஸ்-க்கு சூடு கொடுத்த உச்ச நீதிமன்றம்..


'இனி எங்க மண்ணை யாராலும் கெடுக்க முடியாது’ என ஆனந்தக் கூச்சல் போடுகின்றனர் வடசேரி விவசாய மக்கள். தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படும் கிங்ஸ் எரிசாராய ஆலைக்கு எதிராக சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புதான் அந்த வட்டாரத்து மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது! 
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, வளமான விவசாயக் கிராமம். இங்கு கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனம் அமைந்துள்ளது. கூடுதலாக எரிசாராய ஆலையைத் துவக்க கிங்ஸ் நிறுவனம் முயற்சிக்க... வடசேரி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அ.தி.மு.க. உட்பட பல்வேறு சமுக அமைப்புகள் வடசேரி மக்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கின.
அதைத் தொடர்ந்து, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா, 'சாராயத் தொழிற்சாலையைத் தடுப்பதோடு, அதற்குக் காரணமாக இருப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிக்கை விட்டார். டி.ஆர்.பாலுவையும் எரிசாராய ஆலையையும் சம்பந்தப்படுத்தி போராட்டங்கள் நடந்தன. அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரத்தநாட்டில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.இந்தநிலையில், எரிசாராய ஆலை தொடங்குவது குறித்து வடசேரி மக்களின் கருத்துக்களைக் கேட்க மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் 9.4.10 அன்று வடசேரிக்கு வந்தனர். 'கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் பொதுஇடத்தில் நடத்த வேண்டும்’ எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகளோ, 'ஃபேக்டரிக்குள்தான் நடத்துவோம்’ எனப் பிடிவாதம் பிடித்தனர். இதனால், வடசேரி மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேசமயம், பிற ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட ஆட்களை வைத்து ஃபேக்டரி நிர்வாகமும், அதிகாரிகள் தரப்பும் கூட்டம் நடத்தி முடித்து விட்டதாக செய்தி பரவியது. இதை, வடசேரி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு வடசேரி மக்கள் மீது லத்தியால் கடும் தாக்குதல் நடத்தியது போலீஸ். பெண்கள், சமுக ஆர்வலர்கள் அனைவரும் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். சிலருக்கு அரிவாள் வெட்டுக்களும் விழுந்தன. சில மணி நேரம் நீடித்த தடியடியால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. 
இனி, அரசை நம்பிப் பயன் இல்லை என்று முடிவு செய்த மக்கள், நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினர். வருடங்கள் உருண்டோடிய நிலையில், சட்டப் போராட்டம் நடத்திய மக்களுக்கு உச்ச நீதிமன்றம் நல்லதோர் தீர்ப்பை கடந்த வாரம் வழங்கி இருக்கிறது.
வடசேரிக் கிராம விவசாயிகள் சங்க உறுப்பினரான பழனிவேல்ராஜ் இதுபற்றி நம்மிடம் பேசினார். ''அப்போது தி.மு.க. ஆட்சி என்பதால், டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் செயல்பட்டனர். கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்திய அப்போதைய தஞ்சை கலெக்டர் (பொறுப்பு) கருணாகரனும், எஸ்.பி. செந்தில்வேலனும் எங்கள் கோரிக்கையைக் கேட்கக்கூட இல்லை. ஆளும் கட்சியினர் சொல்வதைக் கேட்டு எங்களைத் தாக்கினர். அன்று நடந்த கொடூரச் சம்பவத்தை மறக்க​வே கூடாது எனக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்​பட்ட ஏப்ரல் 9-ம் தேதியை கறுப்பு நாளாக அறிவித்து, கடையடைப்பு நடத்தி ​வருகிறோம்.
மறுபுறம், எரிசாராய ஆலைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினோம். மக்களிடம்  பணம் வசூல் செய்துதான் வழக்கு நடத்தினோம். இரண்டு ஆண்டு​கள் நீடித்த விசாரணையில், டெல்லி உச்ச நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது எங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. மண்ணுக்கான வெற்றி'' என உணர்ச்சிவசப்பட்டார்.
வடசேரி விவசாயிகளின் சட்ட ஆலோ​சக​ரான அய்யநாதன், ''எரிசா​ராய ஆலைக்கான அனுமதியை ரத்துசெய்யக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்தான் முதலில் வழக்கு நடைபெற்றது. பின்னர், சென்னைக்கு மாற்றப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையை அணுகச் சொன்னார்கள். நாங்கள் இறுதியாக டெல்லி உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றோம். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஆலை அனுமதி தொடர்பாக தவறான தகவல்களை கிங்ஸ் நிர்வாகம் தந்திருக்கிறது. தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள செல்லம்பட்டியில் ஆலை தொடங்க சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெற்றுவிட்டு, டாக்குமென்ட்களில் வடசேரி என்று திருத்தி இருக்கிறார்கள். ஆகவே, ஆலை தொடர்பாக இதுவரை நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து ​செய்கிறோம். ஆலைக்கு மீண்டும் அனுமதி வேண்டும் என்றால், கிங்ஸ் நிறுவனம் முதலில் இருந்து அனைத்து தரப்பில் இருந்தும் முறையான அனுமதி பெற்றுக்கொண்டு வர வேண்டும்’ என தெரிவித்து இருக்கிறது. எனவே, வடசேரியில் எரிசாராய ஆலை என்பது இனி வராது'' என்றார்.
இதுகுறித்து, டி.ஆர்.பாலு தரப்பில் பேச முயற்சி செய்தோம். அவர்கள்பேச மறுத்து ​விட்டனர். மக்களின்தொடர் போராட்டம் அந்தப் பகுதியைக் காப்பாற்றி ​விட்டது!

No comments:

Post a Comment