முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஈழத் தமிழர் செந்தூரன்.
'நான் கொழும்பு நகரில் கண்டி பகுதியைச் சேர்ந்தவன். அப்பா உயிரோடு இல்லை. அம்மா மட்டும்தான் இருக்கிறார். எங்கள் நாட்டில் வாழ்வதற்கான சூழ்நிலை இணக்கமாக இல்லாததால் தமிழகம் வந்தேன். கடந்த வருடம் ஜூலை 14-ம் தேதி சிவகங்கை க்யூ பிராஞ்ச் போலீஸார் என்னைக் கைதுசெய்தனர். ஆறு மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், விசாரணைக்கும் உட்படுத்தப்படாமல் அடைத்து வைத்திருந்தார்கள். எனவே உண்ணாவிரதம் இருக்க முயன்றேன். அதனால் என்னை கடந்த ஜனவரி 16-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அதன் பிறகு, நான் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்து, செங்கல்பட்டு முகாமில் அடைத்துவைத்தது தமிழக போலீஸ்.
என்னைப் போன்றே பலரும் இங்கே அடைக்கப்பட்டுள்ளனர். எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகளான எங்களை விடுவிக்கக் கோரி பலமுறை உண்ணாவிரதம் இருந்தோம். விடுதலையை வலியுறுத்தி கடந்த முறை செங்கல்பட்டில் உண்ணாவிரதம் இருந்தபோது, க்யூ பிராஞ்ச் எஸ்.பி. சம்பத்குமார் எங்களைப் பார்க்க மருத்துவனைக்கு வந்தார். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாகச் சொன்னார். அதை நம்பி உண்ணாவிரதத்தைக் கைவிட்டோம். அவர்கள் கொடுத்த காலக் கெடு முடிந்த பிறகும் எங்களை விடுதலை செய்யவில்லை. மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக நாங்கள் கடிதம் கொடுத்ததும், என்னை பூந்தமல்லி முகாமுக்கு மாற்றினார்கள். ஆனாலும் நான் என்னுடைய முடிவை நான் கைவிடவில்லை. என் உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன். என்னைப் பார்க்க எனது மாமியார் கமலாதேவி இலங்கையில் இருந்து வந்திருந்தார். அவர் ஓர் இதய நோயாளி. நான் படும் துன்பத்தைப் பார்த்து அவருக்கு மனரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த வாரத்தில் இறந்துவிட்டார். இந்த முகாமைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள க்யூ பிராஞ்ச் போலீஸார் எங்களைப் பார்க்க வரும் வழக்கறிஞர்களையும் உறவினர்களையும் சந்திக்கவிடாமல் தடுக்கிறார்கள்.
'என்னை ஏன் சிறப்பு முகாமில் வைத்திருக்கிறீர்கள்’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டேன். அதற்கு சரியான விளக்கம் அளிக்காமல் மழுப்பல் பதில் அனுப்பியிருந்தனர். எனவே வேறு வழி இல்லாமல் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டேன். முகாம்களில் அடைக்கப்பட்டு இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும் அல்லது எனது உயிர் பிரியும்'' என்று உறுதியோடு சொன்னார்.
செந்தூரனின் கோரிக்கைக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ''தங்கள் மீதான வழக்குகளில் பிணைய விடுதலை பெற்று விட்ட பின்னரும் எம் சொந்தங்களை இப்படிக் காலவரையற்று அடைத்துவைப்பது ஏன்? தமிழ் நாட்டின் இதர முகாம்களில் வசிக் கும் சொந்தங்களுடன் வாழவிடுங்கள் என்பதுதான் அவர்களது ஒரே கோரிக்கை. இலங்கையில் உள்ள வன்னியில் நம் சொந்தங்களை வதைக்கும் முள்வேலி முகாம்களைப் போல, இங்கே செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. செந்தூரன், கடந்த 6-ம் தேதி முதல் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார். அவருடைய போராட்டத்தை க்யூ பிரிவு பரிகாசம் செய்துள்ளது. இதனால் நொந்துபோன செந்தூரன் இப்போது தண்ணீர்கூட குடிக்காமல் கடும் பட்டினிப் போராட்டத்தில் இருக்கிறார். இனியும் எங்களால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தமிழ் மண்ணில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் செயல்படும் வதை முகாம்களை இழுத்து மூடும் வரை நாங்கள் ஓய மாட்டோம்'' என்று சீறினார்.
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் செந்தூர னுக்கு ஆதரவாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்துப் பேசிய வைகோ, ''செந்தூரனின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது உயிருக்கு ஊறு நேர்ந்தால், தமிழக அரசும் காவல் துறையும்தான் முழுப் பொறுப்பு. உடனடியாக அவரையும், சிறப்பு முகாம்களில் அடைபட்டு கிடக்கும் 47 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்யவேண்டும்'' என்று கர்ஜித்தார்.
அறப் போராட்டத்துக்கு நமது அரசு காட்டும் மரியாதை இதுதானா?
No comments:
Post a Comment