தளபதி’ ஸ்டாலினைச் சந்திக்கச் சென்றால், சுட்டி குட்டி சோல்ஜர்கள் சூழ விளையாடிக்கொண்டு இருந்தார்.
கையில் வைத்திருந்தால், தோளுக்கு மேல் ஏறுகிறாள் தன்மயா. அதைப் பார்த்துவிட்டு முட்டி மோதி தாத்தாவின் மறு தோளில் ஏறுகிறான் நளன். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து நடந்து காட்டும் நிலானி பாப்பாவையும் இழுத்து அணைத்துக்கொள்கிறார். 'என்னையும் சேர்த்துக்கோங்க’ என்று ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான் இன்பா.
''பேரன், பேத்திகளுக்கான நேரத்தில் பேட்டிக்கு வந்திருக்கிறீர்களே'' என்று துர்கா ஸ்டாலின் வரவேற்க, ''அரசியல் சூட்டைத் தணிக்கும் சுகமான சுமைகள் இவர்கள்தானே'' என்று அர்த்தம் சொல்லிச் சிரிக்கிறார் ஸ்டாலின்!
''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மீது தொடர்ந்து வழக்குகளைத் தாக்கல் செய்து உஷ்ணத்தைக் கூட்டிவருகிறாரே?''
''அவருக்குத் தெரிந்ததே வழக்குப் போடுவதும் கைதுசெய்வதும்தானே. 'இம் என்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம்’ என்பது பிரிட்டிஷார் ஆட்சியில் மட்டும் அல்ல; ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறது. ஒரு நாட்டின் முதலமைச்சரின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதே தவறு, பொதுமக்களுக்கு நிகழும் சுகாதாரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லவே கூடாது என்றால், எதிர்க் கட்சிகளே இருக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறாரா? எதுவும் பேசக் கூடாதா? ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறாரா? இப்போது என்ன மிசா சட்டமா நடைமுறையில் இருக்கிறது?''
''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி?''
''ஜெயலலிதா வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்து இருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்போம். அவர் ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், பேருந்துக் கட்டணம் உயரும், பால் விலை அதிகரிக்கும் என்பது தமிழ்நாட்டின் தலைவிதி. தேர்தல் நேரத்தில் அவர் கொடுக்காத இந்த வாக்குறுதிகளை மட்டும்தான் உடனடியாக நிறைவேற்றுவார்.
தலைமைச் செயலகத்துக்குச் சாதாரணமாக வந்து செல்லும் ஒரு அப்பாவி மனிதனுக்குக்கூடத் தெரியும், அந்தக் கட்டடத்தில் இட நெருக்கடி மிகுந்திருக்கிறது, பலவீனமாக இருக்கிறது என்று. அதனை மாற்றி புதிய தலைமைச் செயலகத்தை சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், காண்பவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் அமைத்து, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கையால் திறப்பு விழாவும் நடத்தினார் கலைஞர். 'அந்தக் கட்டடத்துக்குள் நான் வர மாட்டேன்’ என்று சிறு பிள்ளைத் தனமாகச் சபதம் போட்டு, கோடிக்கணக்கான அரசாங்கப் பணத்தை அப்படியே கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கட்டும் என்று நினைப்பவர் ஒரு பொறுப்புள்ள மாநில முதலமைச்சராக எப்படி இருக்க முடியும்?
ஆசியாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பில் அமைக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். அந்தப் பெருமை கலைஞருக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, அதை மருத்துவமனையாக்கத் துடிக்கிறார்.
தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களை வைத்து மோதிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஆட்சியைப் பிடித்த கட்சி, அரசியல் உள்நோக்கங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவிடம் கடந்த இரண்டு முறையும் அது இல்லை. இப்போதும் இல்லை. வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டார். இப்போது எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகளைப் போடுகிறார்.
பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் - கைதுகள்; சரிந்து, சிதைந்துவரும் சட்டம் - ஒழுங்கு நிலை; குறுவை பொய்த்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குமுறல்; விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்களின் வேதனை; பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் பரிதவிப்பு... இவைதான் இந்த ஓர் ஆண்டு கால ஆட்சியின் சுருக்கம்!''
''தி.மு.க. புள்ளிகள் மீது நில அபகரிப்புப் புகார்கள் கொடுத்தது அனைத்துமே பாதிக்கப்பட்டவர்கள்தானே? அரசாங்கமோ, போலீஸோ, இந்த வழக்குகளைப் போடவில்லையே?''
''சம்பந்தப்பட்ட வழக்குகளின் தன்மைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால், தி.மு.க-வினர் மீது புகார் கொடுத்தால் மட்டும் சட்டப்படி முதல் நிலை விசாரணை ஏதும் இன்றி உடன டியாக போலீஸ் கைதுசெய்த ஆர்வத்துக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்தானே இருக்கிறது? இரண்டு மூன்று புகார்களைச் சேர்த்துக்கொண்டு உடனே குண்டாஸில் கைதுசெய்கிறார்கள். ஜெயலலிதா செய்தது நியாயமான நடவடிக்கை என்றால், குண்டாஸில் கைதான அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்கிறதே... அது எப்படி? இதில் இருந்தே பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கைதுகள் நடக் கின்றன என்று தெரியவில்லையா?''
''கொடநாட்டில் இருந்தாலும், முதல்வர் அங்கிருந்தே அரசு நடவடிக்கைகளைக் கண்காணித்துச் செயல்பட்டு வந்ததாகத்தானே சொல்கிறார்கள்?''
''ஒன்றரை மாத காலம் அவர் கொடநாட்டில் இருந்தது அவரது விருப்புரிமை. அதனை விமர்சிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. பொதுமக்களின் எண்ண ஓட்டத்தைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம்!''
''தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சோர்வுதான் அதிகம் தெரிகிறது. எந்த எழுச்சியும் இருப்பதாகத் தெரியவில்லையே?''
''வெற்றி - தோல்விகளைக் கணக்கிட்டுச் செயல் படும் கட்சி அல்ல தி.மு.க. தோல்வியைப் பார்த்து சோர்வு அடைந்திருந்தால், தலைவர் கலைஞர் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்தத் தோல்விகூட, கழகத் தொண்டனை மேலும் எழுச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்வேன். அதேபோல், மிகக் குறுகிய இடைவெளியில் டெசோ மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். கட்சிப் பொதுக் கூட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடக்கின்றன. ஆலோசனைக் கூட்டங்கள் சின்னச் சின்னக் கிளைக் கழகங்களில்கூட முறையாக நடக்கின்றன. எனவே, கழகத் தொண்டர்கள் சோர்வு அடைந்து விட்டதாகச் சொல்வது, அவர்களைச் சோர்வுஅடையச் செய்ய வேண்டும் என்று நினைப் பவர்களின் அபவாதம்!''
''தொண்டர்களின் உற்சாகத்தைக் கோஷ்டி அரசியல்தான் குறைத்துவிடுகிறது என்கிறார்களே? ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி போன்று பிரிந்து செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?''
''திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்தமாக கலைஞர் கோஷ்டி மட்டும்தான். நீங்கள் சொல்வது வெறும் காட்சிப் பிழை. இவை எல்லாம், ஊடகங்களின் கற்பனை. 'ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமல் தனித் தனி வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன் பிறப்புகள்தான்’ என்று பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. கட்சியில் அனைவரும் உடன்பிறப்புகளே என்ற ஒன்றுபட்ட சிந்தனையுடன், பாசத்துடன்தான் அனைவரும் செயல்பட்டுவருகிறோம். பேதங்களுக்கோ, பிரிவினைகளுக்கோ இங்கே இடம் இல்லை!''
''உங்களது தலைமையைக் கட்சியில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''
''கலைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட கேள்விக்கே இடம் இல்லை!''
''உங்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுத்து கருணாநிதி வழிகாட்ட வேண்டும் என்று உங்களது ஆதரவாளர்களில் சிலர் நினைக்கிறார்களே?''
''என்னுடைய ஆதரவாளர்கள் என்று பிரித்துக் கேள்வி கேட்பதே தவறு!''
''அடுத்த தலைமைப் பதவிக்காகத்தான் நீங்கள் ஓடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?''
''பகவத் கீதையின் சிந்தனைக்கு நாங்கள் மாறுபட்டவர்கள் என்றாலும், 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதற்கு ஏற்ப, பலனைப் பற்றிக் கவலைப்படாமல் எனது கடமையை நான் ஆற்றிக்கொண்டு இருக்கிறேன்.
மிகச் சிறு இளைஞனாக கோபாலபுரம் கிளைக் கழகத்தின் சார்பில் நாடகம் நடத்திய காலத்தில் என் உள்ளத்தில் இருந்த உற்சாகம் இன்னமும் இருக்கிறது. கட்சிரீதியாக இளைஞர் அணியில் இருந்தாலும், பொருளாளராகத் தொடர்ந்தாலும், ஆட்சிரீதியாக சென்னை மாநகராட்சி மேயராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும் என்னுடைய பொறுப்புகளின் தன்மையை உணர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன்.
எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என்னுடைய பயணங்களை நான் குறைத்துக்கொள்ளவில்லை. கழகத் தலைவர் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு இதுவரை 14 முறை சிறை சென்றுள்ளேன். அனைத்து அடக்குமுறைகளையும் சந்தித்து உள்ளேன். நான் உழைப்பது எனது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, எந்தப் பதவியையும் குறிவைத்து அல்ல!''
''தலைவரின் மகன் என்பதால், கழகத்தில் தனி மரியாதை கிடைப்பது இயல்புதானே?''
''தலைவரின் மகன் என்பது பிறப்பால் நான் பெற்றிருக்கும் சிறப்பு. அந்தச் சிறப்பு மட்டுமே தனி மரியா தைக்கான தகுதியைத் தந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''
''நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?''
''அப்படிச் சொல்பவர்களுக்கு பேரறிஞர் அண்ணா சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்... 'அதிமாக முறுக்கேறிய கயிறு அறுந்துவிடும்’ என்றார் அந்தப் பெருந்தகை!''
''கட்சித் தொண்டர்களுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா?''
''ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுடன் உறவாட என்ன தயக்கம் இருக்க முடியும்? வீட்டிலும் அறிவாலயத் திலும் என்னைச் சந்திக்கக் காத்திருக்கும் அனைவருடனும் அன்போடும் நெருக்கமாகவும் இருக்கிறேன். வெளியூர் பயணங்களில் தொண்டர்கள் துணையுடன்தான் இருக்கிறேன். அவர்களது வீட்டு விசேஷங்கள் அனைத்துக்கும் உரிமையுடன் செல்கிறேன். கட்சித் தோழர்களோடு நெருங்கி இருப்பதை இன்பத்துள் இன்பம் என்று எண்ணி இருப்பவன் நான். அதில் தயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை!''
''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?''
''தலைவர் கலைஞரின் படை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயாராகவே இருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே!''
''வெற்றி வாய்ப்பு?''
''சந்தேகம் என்ன... நாங்கள் பெரு வெற்றி பெறுவோம்!''
''ஒரு வலுவான கூட்டணியைச் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அமைத்தார். அது வெற்றியைக் கொடுத்தது. அப்படிப்பட்ட திட்டம் தி.மு.க-வுக்கு உண்டா? குறிப்பாக, விஜயகாந்தை உங்களது அணிக்குள் இணைத்துக்கொள்வீர்களா?''
''தலைவர் கலைஞர் எப்போதும் வலுவான அணியைத்தான் அமைப்பார். நண்பர் விஜயகாந்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒரு தவறைச் செய்துவிட்டோம் என்று அவரே ஒப்புக்கொண்டு உள்ளார். ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிக்கத் தேவையான அரசியல் முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்பார் என அவரது கட்சியினரே அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்!''
No comments:
Post a Comment