லோதல் நகரத்தின் கிழக்கு முகமாக அமைந்திருக்கும் செங்கல் சுவர் அமைப்பு வர்த்தகக் கலங்கள் வந்து நிற்கக்கூடிய ஓர் அமைப்பு என்கிறார் ராவ். ஆனால், தோர் மற்றும் ஹெய்டர்தால் உள்ளிட்ட மற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர். பெரும்பாலான அகழ்வாராய்ச்சியாளர்கள், இந்த அமைப்பு தண்ணீர் சேகரிப்பதற்கான சாதாரணத் தொட்டியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால், ராஜிவ் நிகம் என்ற பரிசோதனையாளர், லோதாலில் கடல்நீர் சார்ந்த நுண்ணுயிரிப் படலங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்தபோது, அந்தச் செங்கல் சுவரமைப்பு குடிநீர் சேகரிக்கப் பயன்படவில்லை. கப்பல்கள் வந்து நிற்கவே பயன்பட்டது என்கிறார். இந்த வாதப் பிரதிவாதங்கள் இன்றும் தொடர்கின்றன.
லோதலில் வசித்தவர்கள் அக்னியை வணங்கி இருக்கின்றனர். அங்கே, பலிச் சடங்குகள் நடைபெற்று இருக்கின்றன. கடல் அன்னையை வணங்கி விழா நடத்தி இருக்கிறார்கள். இறந்தவர்களை எரிக்கும் பழக்கமும் லோதலில் இருந்திருக்கிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் இருந்து தங்கம் கொண்டுவரப்பட்டு இங்கே தங்க வளையல், மாலைகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
லோதல் கி.மு. 2,400 முதல் கி.மு. 1,900க்கு உட்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்கிறார்கள். லோதலுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது எனக் கூறும் ஆய்வாளர் குரூமூர்த்தி, தனது 'சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும்’ என்ற நூலில் சில விவரங்களைக் குறிப்பிடுகிறார். அதில், ''லோதல் மற்றும் அம்ரா ஆகிய நகரங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஹரப்பா பண்பாட்டுச் சின்னங்களுள், கறுப்பு சிவப்பு நிற மண் கலங்கள் காணப்படுகின்றன. ஹரப்பா பண்பாட்டுடன் கலந்து காணப்படும் இந்த மண் கலங்களை, அந்தப் பண்பாட்டின் இணை பிரியாக் கூறு எனக் கொள்ளலாம். அத்தகைய மண் கலங்கள் தென்னகத்தில் கணக்கிட முடியாத எண்ணிக்கையில் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்களிடமும் கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்க வேண்டும். அண்மையில், மைசூரில் உள்ள அல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம், கறுப்பு சிவப்பு மண் கல வகைகளின் காலம் கி.மு. 1000 எனத் தெரிய வந்துள்ளது. மேலும், கொற்கையில் இவற்றின் காலம் கி.மு. 785 எனவும், ஆதிச்சநல்லூரில் கி.மு. 1500 எனவும் தெரியவந்துள்ளது. இந்தத் தடயங்களைவைத்து ஒப்பிடுகையில், அந்தக் காலத்தில் திராவிடர் பண்பாடு இந்தியாவின் பல பகுதிகளில் பரவியிருந்தது என்பது புலனாகிறது'' என்கிறார் குரூமூர்த்தி.
சிந்து சமவெளியில் காணப்படாத குதிரை, லோதலில் காணப்படுகிறது. இங்கே கண்டு எடுக்கப்பட்ட 23 விலங்கு சிற்பங்களில் ஒன்று குதிரையின் உருவம். ஆகவே, இது ஹரப்பா காலத்தின் கடைசி நிலையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்றும் ஒரு சாரார் கூறுகிறார்கள். லோதலை, சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்வது தவறு. அதை, ஹரப்பா நாகரிகம் என்றே குறிப்பிட வேண்டும் என்று ஒரு பிரிவும், அதை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று குறிப்பிட வேண்டும் என்று இன்னொரு பிரிவும் வாதம் செய்கின்றனர்.
குஜராத்தில் உள்ள லோதல் போல, தமிழகத்தில் பண்டைய வணிக நகரமாக விளங்கிய ஈரோட்டின் அருகில் உள்ள கொடுமணலும், அதுகுறித்த தொல்லியல் ஆய்வுகளும் இன்றும் முறையாகக் கவனப்படுத்தப்படவே இல்லை. நொய்யல் ஆற்றின் வடகரையில், ஈரோடு நகரில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் உள்ளது கொடுமணல் தொல்லியல் களம். கொடு மணம் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த இடம் பற்றிப் 'பதிற்றுப்பத்து’ என்னும் சங்க நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. கொடுமணல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அதை உலகுக்கு அடையாளம் காட்டியவர் கல்வெட்டுஇயல் ஆய்வு அறிஞர் புலவர் இராசு.
கொடு மணலை அகழ்வாய்வு செய்து ரோமானியர்களுடன் தொடர்புடையது நொய்யல் கரை நாகரிகம் என்று வெளிப்படுத்தியது இவர் கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தகுந்த பணியாகும். தென் இந்தியாவில் மிக அரிதான பாடலுடன் கூடிய பழமங்கலம் நடுகல்லைக் கண்டறிந்தது இவரது இன்னோர் அரிய பணி. கொடுமணலில் 1961-ம் ஆண்டில் புலவர் இராசு, செல்வி முத்தையா ஆகியோர் அகழ்வாய்வு மேற்கொண்டனர். இங்கு உள்ள தொல்லியல் களம் 50 ஹெக்டேர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய புதைமேடாகக் காணப்படுகிறது. இதை ஒட்டி, குடியிருப்புப் பகுதிகள் இருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன. பெருங் கற்காலப் பண்பாட்டுக்கு உரிய 300-க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
கொடுமணல், இன்னமும் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்தத் தொல்லியல் களத்தை, தமிழகத்தின் அரிய பண்பாட்டுச் சுரங்கமாகக் கருதுகின்றனர். 'கொடுமணம் பட்ட நெடுமொழி யக்கலொடு’ எனப் பதிற்றுப்பத்தில் குறிப்பு இருக்கிறது. கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு கடலோரத் துறைமுகங்கள் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்புகள் இருக்கின்றன. கொற்கை, பந்தர் ஆகிய இரண்டும் முத்து வணிகத்தில் புகழ்பெற்று விளங்கி இருக்கின்றன.
கொடு மணத்தில் வசித்த பாணர்கள், பந்தர் சென்று செல்வச் செழிப்பு உள்ள வாழியாதனிடம் தென் கடல் முத்தும் அணிகலன்களும் பரிசாகப் பெற்று வந்தால், அவர்கள் கடன் தீர்ந்து சுகமாக வாழலாம் என்று கபிலர் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வரும் கொடுமணல் ஆய்வில் நாணயங்கள், முதுமக்கள் தாழி, பாசி மாலைகள், ஆபரணங்கள், மண் கலயங்கள், இசைக் கருவிகள், தொழிற் கருவிகள், பண்டைய தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண் பாண்டங்கள், போர்க் கருவிகள், நெசவுத் தொழிற்சாலை இருந்த இடம், மணிகள் கோக்கும் தொழிற்சாலைகள், சங்கு அறுக்கும் தொழிற்கூடங்கள், இரும்பு உலைகலன் ஆகியவை கண்டறியப்பட்டு இருக்கின்றன.
கொடு மணலில் இரும்பு உருக்கு ஆலைகள் இருந்து இருக்கின்றன. இரும்பு மற்றும் தாமிர தாதுக்கள் இங்கு கிடைத்து இருக்கின்றன. இங்கு கண்டறியப்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்றை வாசித்துள்ள கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன், 'தண்ணீரும் வெந்நீரும் புகும் தாழி’ என எழுதப்பட்டுள்ளதாக கூறுகிறார். இன்று, சாயப்பட்டறைகளில் வெந்நீரும் தண்ணீரும் புகும் தாழி பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இந்தத் தாழி ஒருவேளை இரும்பு உருக்கும் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் என்கிறார் ஐராவதம் மகாதேவன்.
பண்பாட்டு வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும்கொண்ட தொன்மையான நகரமாக விளங்கி இருக்கிறது கொடுமணல். பண்டைய தமிழர்கள் இரும்புக் கருவிகளை உருவாக்குவதில் தேர்ந்த அறிவுத் திறனுடன் இருந்திருக்கிறார்கள். கொடு மணலில் நெசவு நெய்யப் பயன்படும் தக்களி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் தண்டு இரும்பாலும் வட்டம் சுடுமண்ணாலும் செய்யப்பட்டிருப்பது அதன் தொழிற்நுட்ப சாதனையைப் பறைசாற்றுகிறது. அதுபோலவே பட்டை தீட்டுதல், கற்கள் பதித்தல், அலங்கார வேலைப்பாடு என அணிகலன் உருவாக்குவதிலும் தேர்ந்தவர்களாக இருந்தனர். ஆப்கானிஸ்தான், ரோம் நகரங்களுடன் வணிக உறவுகள் இருந்தன. இரும்புத் தாதுக்கள், சென்னிமலைப் பகுதியில் இருந்து கிடைத்திருக்கின்றன. அதை உருக்குவதற்கு விசேஷமான உருக்கு உலைகளை அமைத்து இருக்கிறார்கள். உருக்கிய இரும்பைக்கொண்டு ஆயுதங்கள், விவசாயக் கருவிகள் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்திருக்கிறார்கள். இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் முன்னோடிகள் என்பதற்கு கொடுமணல் ஒரு சாட்சி.
இங்கு காணப்படும் புதைமேட்டில் முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றில், பத்மாசன நிலையில் ஒரு எலும்புக்கூடு காணப்படுகிறது. சுடுமண் பாண்டங்களில் தமிழ் பிராமி மற்றும் பிராகிருத எழுத்து வடிவங்கள் காணப்படுகின்றன. சம்பன், ஸுமநன், ஊரணன், சந்துவன், மாத்தன், ஆதன் முதலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வணிக மையமாகக் கொடுமணம் இருந்த காரணத்தால், வட இந்தியாவில் இருந்து வணிகர்கள் வந்திருக்கக்கூடும். ஆகவே, இங்கு காணப்படும் தமிழ் எழுத்துக்களில் பிராகிருதக் கலப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
வரலாற்று ஆய்வாளர் இராம.சுந்தரம் தனது கட்டுரை ஒன்றில், தமிழ்ப் பண்பாட்டைப் புரிந்துகொள்ள கொடுமணல் ஆய்வுகள் எப்படி உதவுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ''அந்தக் காலத்தில் சமன்செய் கருவிகள், விதைப்புக் கருவிகள், இறைப்புக் கருவிகள், பயிர்காப்புக் கருவிகள், அறுவடைக் கருவிகள், பதன்செய் கருவிகள் என உழவுக் கருவிகளை பாகுபடுத்துவார்கள். பண்டைத் தமிழர்கள் நாஞ்சில் என்ற கலப்பையைப் பயன்படுத்தி உழுதனர். கலப்பையின் நுகத்தடியில் கொழுவும் இருக்கும். கொழு என்பது நிலத்தைப் பிளந்து உழக்கூடியது. பரம்படிக்கப் பயன்படும் கருவியின் பெயர் தளம்பு. ஏத்தம், ஆம்பி, பத்தர், கிழார், முகவை முதலியன நீர் இறைப்புக் கருவிகள். புன்செய் நிலத்துக் களையை நீக்க, துளர் என்ற கருவியைப் பயன்படுத்தினர். தண்ணுமை, குளிர், தட்டை, தழலை, கவண், அடார் முதலியன பயிர் பாதுகாப்புக் கருவிகளாகும். அடார் என்பது கற்பொறி. கருங்கல் பலகையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கீழே முட்டுக்கொடுத்து உணவை உள்ளே வைத்திருப்பர். உணவை உண்ண வரும் விலங்கு அந்த முட்டைத் தொட்டவுடன் கல் விழுந்து அதனுள் மாட்டிக்கொள்ளும், இதுபோன்ற விவசாயக் கருவிகள் செய்வதில் தமிழ் மக்கள் முன்னோடியாக விளங்கி இருக்கின்றனர்.
இரும்புத் தொழில்நுட்பம் மனிதகுல வரலாற்றில் ஒரு மாபெரும் வளர்ச்சிப் போக்கை ஏற்படுத்தியது. கி.மு. 1000-த்தை ஒட்டியே இந்தியாவில் இரும்பு அறிமுகம் ஆனது. கர்நாடகத்தில் உள்ள ஹல்லூர் பகுதியில் கி.மு. 950-ஐ ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூரிலும், பெருமாள் மலையிலும் இதே காலத்தை ஒட்டிய இரும்புப் பொருட்கள் கிடைத்து இருக்கின்றன. தமிழகத்தில் கி.மு. 700 முதல் கி.பி 200 வரை இரும்புக் காலம் எனலாம். சங்க காலத்தில் இரும்பு நன்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதற்குச் சங்கப் பாடல்கள் சான்று தருகின்றன. கொடுமணல் அகழ்வாய்வு இதை முழுமையாக உறுதிப்படுத்துகிறது'' என்கிறார்.
தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடந்து இருக்கின்றன. இதுவரை நடந்த ஆய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுக்கள், ஆவணங்கள் அனைத்தையும் சேர்த்து விரிவாக நேர்மையாக தமிழக வரலாறு திருத்தி எழுதப்பட வேண்டும். அதுதான் இன்றைய முக்கியத் தேவை.
No comments:
Post a Comment