பல்கலைக்கழகத்துக்கு மட்டுமா... பாரதியாருக்கே அவ மானம்’ என்ற கொந்தளிப்பான குரல்கள் கேட்கின்றன. கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜேம்ஸ் பிச்சை என்பவரைக் கண்டித்துத்தான், இத்தகைய எதிர்ப்புக் குரல்கள்!
துணைவேந்தராக இருந்த சுவாமிநாதனின் பதவிக் காலம் முடிந்ததை அடுத்து, புதிய நபரைத் தேர்வு செய்ய மூன்று பேர்கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தப் பதவிக்குக் கடும் போட்டி நிலவிய சூழலில், அருப்புக்கோட்டை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மண்டல ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் ஜேம்ஸ் பிச்சை மற்றும் பேராசிரியர் கந்தசாமி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஜேம்ஸ் பிச்சையை புதிய துணைவேந்தராக கவர்னர் ரோசய்யா தேர்வு செய்ததுமே, எதிர்ப்புகளும் கிளம்பி விட்டன. 'கடத்தல் வழக்கில் சிக்கியவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா?’ என்று பொங்கி எழுகிறார்கள் பேராசிரியர்கள்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தலைவரான ராஜா இதுபற்றி நம்மிடம் வெளிப்படையாகப் பேசினார். ''1989-ம் ஆண்டு, கோவையில் ஜேம்ஸ் பிச்சை தங்கியிருந்த அறையில் இருந்து தங்க பிஸ்கெட்களை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த வழக்கு காரணமாக, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் அவருடைய சர்வீஸ் பிரேக் ஆகி உள்ளது. அப்படிப்பட்ட மோசமான குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவர், உயர்ந்த பொறுப்புக்கு வரலாமா என்பதே எங்களது முதல் கேள்வி!
பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு மையத்தின் டீனாக இருந்தபோது, வீட்டு வாடகை, பயணப்படி உள் ளிட்ட சில விஷயங்கள் தொடர்பாக தவறான தகவல்களைக் காண்பித்து சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை பிச்சை முறைகேடாகப் பெற்றதாக அந்த மையத்தின் சேர்மன் வரதராஜன் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிட்டியின் முன் கடந்த ஜனவரி 20-ல் மேலும் சில கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்தில் இருந்து 11.65 லட்சம் ரூபாயை தனது வங்கிக் கணக்கில் போட்டுக்கொண்டார் என்றும் போலி பில் அச்சடித்து மையத்தின்தலைவர் மற்றும் துணைத் தலைவரின் கையெழுத்துக்களைப் போட்டு மோசடி செய்தார் என்றும் பிச்சை மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், குடியிருக்கும் வீட்டை நிர்வாகம் வழங் கியும்கூட, நகரக் குடியிருப்பு அலவன்ஸ் என்ற பெயரால் 37 ஆயிரத்து 140 ரூபாய் பெற்றார் என்றும் சுற்றுலா அலவன்ஸ் முன்பணம் என்ற பெயரால் சுமார் 76 ஆயிரம் பெற்றார் என்றும், தேர்வு நடத்த 59 ஆயிரம் ரூபாய் பெற்றார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதற்கெல்லாம் ஜேம்ஸ் பிச்சை கொடுத்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத கமிட்டி, விதிமுறைக்குப் புறம்பாக ஜேம்ஸ்பிச்சை பெற்ற தொகையைப் பறிமுதல் செய்வதற்குப் பரிந்துரை செய்தது. அதனால்தான் டீன் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு, அருப்புக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பாரதியார் பல்கலைக்கழகத்துகான புதிய துணைவேந்தராக இவர் பெயர் பரிசீலிக்கப்படுவது தெரிந்ததுமே, அவர் மீதான குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள் சம்பந்தமான ஆவணங்களை கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதையும் மீறி ஜேம்ஸ் பிச்சையைத் துணைவேந்தராக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக கவர்னராக பர்னாலா கடந்த முறை இருந்தபோது, உயர்கல்வித் துறை நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. புதிய கவர்னர் வந்ததும் சூழல் சரியாகும் என்று நினைத்தோம். ஆனால், நிலைமை இன்னும் மோசமாகப் போய் விட்டது. இதை எதிர்த்துத் தீவிரப் போராட்டத்தை நடத்தப்போகிறோம்'' என்றார் அழுத்தமாக. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பல கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர் சங்கங்கள், ஜேம்ஸ் பிச்சை நியமனத்துக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜேம்ஸ் பிச்சையிடம் பேசினோம். ''ஒரு ஏழை கிறிஸ்துவ ஆசிரியரான நான், கல்வித் துறையின் உயர்மட்ட நிலைக்கு வருவதில் எத்தனை பேருக்கு வயிற்றெரிச்சல் என்று பாருங்கள். நான் முறைகேடுகளில் ஈடு பட்டிருந்தால், 30 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வைத் திருப்பார்களா? குற்றவாளியாக நான் இருந்தால், அதிகாரிகளையும், சட்டத்தையும் தாண்டி உயர் பதவிகளைப் பிடிக்க முடியுமா? துணைவேந்தர் பதவியைப் பிடிக்க முடியாத நபர்கள் தாங் களாகவும், தனக்குப் பணிந்து நடக்கிற நபர் களையும்வைத்து இப்படிப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கிளப்பி விடுகிறார்கள். எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் கூடிய சீக்கிரம் மீண்டு வருவேன். இப்போதைக்கு இதை மட்டுமே சொல்ல முடியும்'' என்கிறார்.
துணைவேந்தருக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். ஆனால் ஜேம்ஸ் பிச்சையோ, மையமாகத்தான் பதில் சொல்கிறார். இவரது நியமனம் மீண்டும் ஒரு முறை பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு!
No comments:
Post a Comment