இரண்டு வாரங்களுக்கு முன்னால் சென்னை அம்பத்தூரில் ஒரு கூட்டம் பேசினார் கருணாநிதி. மிக நீண்ட காலத்துக்குப் பிறகு அந்தப் பகுதிக்கு அவர் வருகிறார் என்பதால், கூட்டமும் அலைமோதியது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கும் அந்தப் பொதுக் கூட்டத்தில், ஈழத்துப் போராளி அமைப்புகளுக்குள் நடந்த 'சகோதரச் சண்டை’குறித்துப் பேசிய கருணாநிதி, ''இந்த சகோதரச் சண்டைதான் ஈழப் பிரச்னையின் பின்னடைவுக்குக் காரணம்'' என்று சொன்னார். கூட்டம் முடித்துவிட்டு கருணாநிதி வந்த பிறகு, ''அதைப் பத்திப் பேசினால்தான், ஈழ ஆதரவுத் தலைவர்கள் உங்களை விமர்சிக்கிறாங்களே தலைவரே... பிறகு ஏன் அதையே பேசுறீங்க?'' என்று ஒருவர் கேட்டாராம். ''இங்க நடக்கிற சகோதரச் சண்டையைத் தாங்கிக்க முடியாமல்தான் இப்படிப் பேசினேன்'' என்றாராம் கருணாநிதி. இப்படிச் சிலருக்கு மறைமுகமாகத் தகவல் சொல்ல வேண்டிய நிலைமையில் தான் இப்போது கருணாநிதி இருக்கிறார்.
ஆட்சியைப் பறிகொடுத்ததுகூட கருணாநிதிக்கு அதிகக் கவலை ஏற்படுத்தவில்லை. ஆனால், குடும்பத்துக்குள் ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி யுத்தம் நடப்பதுதான் அவரை நிம்மதி இல்லாமல்ஆக்கிக்கொண்டு வருகிறது.
கருணாநிதிக்கு அடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான் என்பது தொண்டர்கள் பெரும்பான்மையினரால் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். 1993-ம் ஆண்டு வைகோ தி.மு.க-வில் இருந்து விலக்கப்பட்ட பின்னால், ஸ்டாலினுக்கு எவராலும் அச்சுறுத்தல் வரவில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் வளரவில்லை. வந்தாலும் அவர்கள் ஆரம்ப காலத்திலேயே அமுக்கப்பட்டார்கள். எதிர்பாராதவிதமாக அழகிரிதான் மதுரையில் இருந்து அந்த ராக்கெட்டை விட்டார். மதுரையில் அழகிரி ஆதிக்கத்தைப் பிடிக்காத சிலர் வெளியேறி ஸ்டாலினை ஆதரிக்க... அதுவரை மதுரையில் தான் வைத்ததுதான் சட்டம் என்று இருந்த அழகிரி, தமிழகம் முழுக்கத் தனது செல்வாக்கைச் செலுத்த ஆரம்பித்தார். மற்ற மாவட்டங்களிலும் ஸ்டாலினுக்குப் பிடிக்காதவர்கள் தங்களை அழகிரி ஆட்களாகக் காட்டிக்கொண்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அழகிரியையும் ஒரு கோஷ்டிக்குத் தலைமை தாங்கும் மனிதராக உட்காரவைத்தது. இந்த நிலைமையில், திகார் சிறைவாசத்துக்குப் பிறகு கனிமொழியும் சகோதரர்களுடன் போட்டியில் இருப்பதாகச் செய்திகள் கிளம்பின.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஸ்டாலினுக்கு கடந்த ஒரு மாத காலமாக ஒரு தவிப்பு! 'தலைவர் பதவியைத் தனக்கு இப்போதே அப்பா தர வேண்டும்’ என்பதே அது. இந்த ஆசை அவருக்கு, தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போதே வந்துவிட்டாலும் அதனை அவர் வெளிப்படுத்தவில்லை. கட்சி, ஆட்சி, அறிவாலயம், 'முரசொலி’ ஆகிய நான்கு அதிகார மையங்களையும் வழிநடத்துபவராக வெளிப்படையாக இல்லாவிட்டாலும், அவர் சொன்னதுதான் நடக்கும், நடக்கிறது என்ற சூழ்நிலையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஸ்டாலின் உருவாக்கிவிட்டார். அமைச்சர்கள் அனைவரும் அவர் சொன்னதையே கேட்டார்கள். அறிவாலய நடைமுறைகள் அவர் கட்டளையிட்டபடிதான் நடந்தன. ஆனால், இப்போது அதனை வெளிப்படையாகச் செய்ய ஸ்டாலின் நினைக்கிறார்.
''இளைஞர் அணிச் செயலாளர் பதவியைவிட்டு அவர் இன்னும் சில மாதங்களில் விலகப்போகிறார். அப்போது தலைவர் பதவியைக் கொடுத்தால்தான் தன்னால் கட்சியை முறையாக நடத்த முடியும்'' என்று ஸ்டாலின் சொல்வதாகச் சொல்கிறார்கள். ''மதுரையில் என்னை மதிக்காத போக்கு உருவாகி இருக்கிறது. இது தொடர்ந்தால் மதுரையைப் போல பல ஊர்களில் நடக்க ஆரம்பிக்கும். அப்புறம் கட்டுப்பாடு குலைந்துவிடும்'' என்று கவலைப்படுகிறார். ''தலைவர் இருக்கும்போதே தளபதியின் பேச்சைக் கேட்காத மனிதர்கள் வளர்ந்தால், திடீர் நெருக்கடி நேரத்தில் கட்டுப்பாடு குலைந்துபோகுமே என்று ஸ்டாலின் கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கவே செய்கிறது'' என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கி றார்கள். ''தனக்குப் பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று தலைவர் நினைக்கிறார். தலைவர் முன்னிலையில் அறிவிக்கப்பட வேண்டும் என்கிறார் தளபதி. இதுதான் இன்றைய சிக்கலுக்குக் காரணம்'' என்று முன்னாள் அமைச்சர்களே இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
இந்த மாதிரியான பேச்சுவார்த்தை கிளம்பினாலே, ''அப்படி மட்டும் தலைவர் அறிவிச்சார்னா... என்னை மறந்துட வேண்டியதுதான். எதுக்கும் கவலைப்படாம குட் பை சொல்லிடுவேன்'' என்று அழகிரி மிரட்டல் ஆரம்பித்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ''அழகிரியைச் சுற்றி ரௌடிகள்தான் இருக்கிறார்கள்'' என்று மதுரை மாநகரச் செயலாளர் தளபதி பேட்டி கொடுத்தார். ''என்னையும் என்னோட இருக்கிறவங்களையும் அவமானப்படுத்துற ஒருத்தர் கட்சியில் இருக்கக் கூடாது. அதுவும் மதுரையில் இருக்கக் கூடாது'' என்று கருணாநிதி யிடம் சமீபத்தில் கொந்தளித்தார் அழகிரி. வழக்கம்போல, 'பொறுமையா இருய்யா’ என்று சமாதானப்படுத்தினார் கருணாநிதி. ''தளபதியைக் கட்சியைவிட்டு நீக்கினால் மட்டுமே நான் கட்சி வேலைகள் பார்ப்பேன்'' என்று சொல்லிவிட்டுப் போனவர்தான். கடந்த இரண்டு மூன்று வாரங்களாகக் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் வலம் வருகிறார். கருணாநிதியின் கனவு மாநாடான 'டெசோ’வின் திறந்தவெளிப் பொதுக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழாவுக்கும் அவர் வரவில்லை. கிரானைட் விவகாரம் வேறு நெருக்குவதால், டெல்லியிலேயே தங்க ஆரம்பித்தார். ஸ்டாலினை வரவேற்க வரவில்லை, குஷ்பு கூட்டத்துக்கு வரவில்லை என்று தனது ஆட்கள் மீது எதற்கெடுத்தாலும் நடவடிக்கை பாய்வதைக்கூட அவரால் தடுக்க முடியவில்லை. மதுரையில் அழகிரி ஆட்களை மேடையில் வைத்து அடிக்கும் அளவுக்கு ஸ்டாலின் குரூப் முஷ்டியை உயர்த்த ஆரம்பித்துள்ளது. ''அழகிரியை நம்பினால் நிச்சயம் காப்பாற்றுவார். ஸ்டாலின் கண்டுக்க மாட்டார்'' என்று இது வரை இருந்த நிலைமை படிப்படியாக மாற ஆரம் பித்துவிட்டது. இதனுடைய உச்சம், விழுப்புரம் மாநாட்டுக்கு அழகிரிக்கு முறையான அழைப்பு வைக்கப்படவில்லை. ''அழகிரியை அப்படியே அவமானப் படுத்தி அப்புறப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்'' என்கின்றன மதுரை வட்டாரக் குரல்கள்.
''நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை முழுமையாக ஸ்டாலின்தான் நடத்தப்போகிறார். அதற்கு முன்னதாக அவரைத் தலைவர் ஆக்குவதே சிறந்தது. அப்போதுதான் தேர்தல் வேலைகள் உற்சாகமாக நடக்கும்'' என்பது அவரது ஆதரவாளர்களின் கோரிக்கை. அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்களில் 30 சதவிகிதம் பேர் இளைஞர்களாக இருப் பார்கள் என்று முதல் படி இறங்கி வந்துள்ளார் கருணாநிதி.
தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டப்படலாம். அப்படிச் செய்தால், அழகிரி எடுக்கப்போகும் ராஜினாமா அஸ்திரம் வலுவானதாக அமையுமா என்பதே தி.மு.க-வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் முக்கியமான விஷயம்.
as
No comments:
Post a Comment