இறக்கத்தானே பிறந்தோம்... இருக்கும் வரை தளபதியுடன்!’ மதுரைக்குள் பளிச்சிடும் இந்த போஸ்டர்களைச் சுட்டிக்காட்டும் தி.மு.க-வின் சீனியர்கள், 'நடக்குறது நல்ல சகுனமாய் தெரியலை... போகிற போக்கைப் பார்த்தால் 2003 சரித்திரம் திரும்புமோ?’ என்று பதைபதைக்கிறார்கள். '2003 சரித்திரம்’ என்று அவர்கள் சொல்வது, தா.கிருட்டிணன் கொலை சம்பவத்தை!
மதுரை தி.மு.க-வில் அழகிரி என்ன சொல்கிறாரோ அதுதான் மற்றவர்களுக்கு வேதவாக்காக இருந்தது ஒரு காலம். ஆனால், இப்போது மதுரைக்குக்குள்ளேயே கூட்டம் நடத்தி அழகிரியை மறைமுகமாகச் சாடும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அழகிரி பெயர் போடாத போஸ்டரை, அவர் வீட்டுக்கு அருகிலேயே ஒட்டும் அளவுக்கு ரவுசு கட்டுகிறது ஸ்டாலின் அணி.
இந்தநிலையில், அ.தி.மு.க. அரசைக் கண்டித்து செப்டம்பர் 13-ம் தேதி மதுரை தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டம் ஏக ரகளையில் முடிந்தது. வழக்க மாக அழகிரி கோஷ்டிக்குத்தான் மற்றவர்கள் பயப் படுவார்கள். ஆனால், இந்த முறை வரலாறு திரும்பியது. அழகிரி கோஷ்டியைச் சேர்ந்த இசக்கிமுத்துவை, ஸ்டாலின் கோஷ்டியைச் சேர்ந்த ஜெயராம் உள்ளிட்டவர்கள் அடித்துக் கீழே தள்ளி காலையும் உடைத்தார்கள். மீண்டும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக அண்ணா பிறந்த நாளுக்கு, 'அண்ணா சிலைக்கு நாங்க தனியா மாலை போட்டுக்கிறோம்... நீங்க தனியாப் போட்டுக்கங்கப்பா’ என்று, மன்னன் கோஷ்டிக்கு முன்னறிவிப்பு கொடுத்து விட்டார் தளபதி. இதனால், தனித்தனியாக மாலை அணிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய மன்னன் தரப்பினர், ''புதுசா கட்சிப் பதவிக்கு வந்தவங்க எதையாச்சும் செஞ்சு பேர் வாங்கணும்னுதான் பார்ப்பாங்க. அன்னைக்கு ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த இளைஞர் அணிப் பசங்க சிலபேரு ஆயுதங்களோட வந்திருப்பதைப் பார்த்து நாங்க ஒதுங்கிட்டோம். பாவம் இசக்கிமுத்து மட்டும் மாட்டிக்கிட்டார். நாங்களும் தயாராப் போயிருந்தா, அன்னைக்கு ஏடாகூடமாகி இருக்கும். கட்சித் தலைமையும் அழகிரிக்கு ஒரு நியாயம்... ஸ்டா லினுக்கு ஒரு நியாயம்னுதான் வெச்சிருக்கு. குஷ்பு கூட்டத்துக்குப் போகலைனு எங்களுக்கு நோட்டீஸ் விடுறாங்க. 'இசக்கிமுத்துவை நான்தான் அடிச்சேன்’னு ஜெயராம் பேட்டி குடுக்குறார், அவருக்கு நோட்டீஸ் அனுப்பினாங்களா? அண்ணா பிறந்த நாளுக்கு ஏன் ரெண்டு கோஷ்டியாப் போயி மாலை போட்டீங்கன்னு தளபதிக்கு நோட்டீஸ் விட்டு ருக்கணுமா வேணாமா?'' என்றவர்கள், ''ஸ்டாலினே நாளைக்கு கட்சித் தலைவரா வரணும்னாலும் அண் ணனோட ஆதரவு வேணும்ல. அதுக்காகவாச்சும் அண்ணன் சொல்றதைக் கேட்டு நடக்கலாம்ல'' என் கிறார்கள்.
ஜெயராமிடம் பேசியதற்கு, ''கட்சிப் பொறுப்பில் இல்லாதவங்க மேடையில் ஏற வேண்டாம்னு சொன் னேன். இசக்கிமுத்து, 'அப்புடித்தாண்டா ஏறுவேன்’னு சொன்னார். அதனால தள்ளுமுள்ளு ஆகிப்போச்சு. எங்க ஆளுங்க ஆயுதங்களோட வந்ததா சொல்றது அபத்தம். நாங்க எஜுகேட்டட் ஃபேமிலி. எங்க வீட் டிலேயும் கலெக்டர், தாசில்தார், ஹெட்மாஸ்டர் எல்லாம் இருக்காங்க. ரவுடித்தனம் பண்ணிட்டோ, கொலை செஞ்சுட்டோ, நாங்க ஜெயிலுக்குப் போனது இல்லை'' என்று யாரையோ சாடினார்.
மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியோ, ''நடக் கும் விஷயங்களைப் பார்த்தா, பயமாத்தான் இருக்கு. என்னைப் பதவியைவிட்டுத் தூக்கத்தான் ரகளை பண்ணிப் பார்க்கிறாங்க. நான் ஒண்ணும் இந்தப் பதவியில் ஒட்டிக்கிட்டு இருக்கணும்னு நினைக்கலை. தலைமை சொன்னா, அடுத்த நிமிஷமே பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு துண்டை உதறித் தோள்ல போட்டுப் போயிட்டே இருப்பேன். அடிதடி சம்பவம் தொடர்பா விசாரிக்கிறதுக்காக, ரெண்டு தரப்பையும் 24-ம் தேதி அறிவாலயத்துக்கு வரச்சொல்லிருக்கார் தலைவர். அப்புறமாச்சும் மதுரை தி.மு.க-வுல அமைதி திரும்பினா சரிதான்'' என்றவரிடம் ''பொட்டு சுரேஷ்தான் உங்களைப் பின்னால் இருந்து இயக்குறதா மன்னன் தரப்பு சொல் லுதே...'' என்று கேட்டோம்.
''ஐயோ... பாவம்! எதுலயாச்சும் அடிபட்டா இந்த கவர்மென்ட்ல கேஸைப் போட்டுத் தாளிச்சிருவாங்கன்னு அரசியலே வேண்டாம்னு அவர் ஒதுங்கிட்டார். இப்படித்தான் ஏதாச்சும் புரளியைக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க'' என்றார்.
மதுரை தி.மு.க-வில் ஜெயராம், 'பொட்டு’ சுரேஷ், தளபதி, வி.கே.குருசாமி, மன்னன், இசக்கிமுத்து ஆகியோர் அபாய வளையத்தில் இருப்பதாக 'நோட்’ போட்டிருக்கிறது உளவுத்துறை!
''உங்களை நம்பித்தான் என் பிள்ளைகளை ஒப்படைச்சிருக்கேன்!''
மதுரையில் கைகலப்புகள் அதிக மாகி வருவதைத் தொடர்ந்து, கடந்த 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு அறிவால யத்தில் தொடங்கிய மதுரை பஞ்சாயத்து, மதியம் 1.45 மணி வரை இழுத்ததாம். அழகிரி தரப்பில் இருந்து 27 பேரும் ஸ்டாலின் தரப்பில் இருந்து ஏழு பேரும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
'அழகிரி அண்ணனுக்கு உரிய முக்கியத்துவத்தை மாவட்டச் செயலாளர் தளபதி கொடுக்காததால்தான் அவர் ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு நாங்கள் போகவில்லை’ என்று, அழகிரி தரப்பு சொன்னதுமே, 'நீங்கள் பரிந்துரை செய்யும் அளவுக்கு அழகிரிக்குத் தரம் தாழ்ந்து போவிடவில்லை. கூட்டம் நடந்தபோது அழகிரி வெளிநாட்டில் இருந்தது எனக்கும் தெரியும். அழகிரிக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் என்றைக்கும் தலைமை கொடுக்கும். அதனால்தான் அவரைத் தென்மண்டல அமைப்புச் செயலாளராக வைத்திருக்கிறோம்’ என்று விளக்கம் சொன்னாராம் கருணாநிதி. 'கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், வயது மீறியவர்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தவறான ஆட்களை இளைஞர் அணி பகுதிச் செயலாளர்களாகப் போட்டிருக்கிறார் ஜெயராம். ஆலடி அருணா, பூண்டி கலைச்செல்வன் கொலைகளில் சம்பந்தப்பட்டவர்களின் கூட்டாளி ஒருவரும், பெட்ரோல் பங்க் கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரும் ஜெயராம் புண்ணியத் தில் இளைஞர் அணிக்குப் பகுதிச் செயலாளர்களாக வந்திருக் கிறார்கள்’ என்று அறிக்கை வாசித்த அழகிரி அணி ஆட்கள், இளைஞர் அணிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தகுதியற்ற நபர்கள் 20 பேரின் பட்டியலையும் கொடுத்ததாம். அதை மறுத்துப் பேசியதாம் ஸ்டாலின் அணி.
'அண்ணா மீது ஆணையாக, தி.மு.க-வினரை ரவுடிகள் என்று நான் சொல்லவே இல்லை தலைவரே’ என்று சத்தியம் செய்தாராம் தளபதி.
'என்னோட ரெண்டு பிள்ளைகளையும் உங்களை நம்பித்தான் ஒப்படைச்சிருக்கேன்யா... அவங்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி பிரச்னைகளைப் பெருசு படுத்திடாதீங்க. அவனுகளுக்குள்ள பிரச்னை இருந்தாக் கூட, நான் கவலைப்படமாட்டேன். நீங்க ரெண்டு கோஷ்டியா நின்னு கட்சியைக் கூறு போடுறதைத்தான் என்னால தாங்கிக்க முடியலே’ என்று உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதி, 'இனிமேல் மாவட்டச் செயலாளர் உங்கள் அனைவரையும் கலந்து பேசி, கட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். அவருக்கு நீங்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அவர் உங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டால், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு அப்புறம்தான் இங்கு வந்து புகார் தெரிவிக்க வேண்டுமே தவிர, கட்சி நிகழ்ச்சியைப் புறக் கணிக்கக் கூடாது’ என்று ஸ்டாலின் தரப்புக்கு சாதகமாகவும்... அதேநேரம், 'இசக்கிமுத்துதான் அவைத்தலைவராக செயல் படுவார்’ என்று அழகிரி தரப்புக்கு சாதகமாக ஒன்றையும் சொல்லி மத்தியஸ்தம் செய்து அனுப்பி இருக்கிறார். ஆனால், இவர்கள் சமாதானம் ஆனது மாதிரித் தெரியவில்லை!
No comments:
Post a Comment