வத்திக்கானில் பாப்பரசரின் அன்றாட பணிகள் மற்றும் அவரது சர்வதேச விவகாரங்களை வெளியிடுகின்ற அதிகாரபூர்வ செய்தி இதழானஒஸ்ஸர்வேட்டோரி ரொமானோ வழமைக்கு மாறான வர்ணப் படமொன்றையும் கட்டுரையொன்றையும் அதன் கடந்த ஞாயிறு இதழின் முன்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பார்பி டோல் என்று அழைக்கப்படும் புதிய பாவை பொம்மையின் படம் தான் அது. இந்தப் புதிய பார்பி டோல் சிறார்களுக்கான மருத்துவமனைகளில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.
தாய்மாரோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு யாரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கே மருத்துவமனைகளில் வைத்து இந்த பார்பிடோல் கொடுக்கப்படவுள்ளது.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி சிகிச்சை முறையின்போது தலைமயிரை இழப்பார்கள்.
தலை வழுக்கையாக மாறி, அவர்கள் உருமாற்றம் பெறுவதை அவர்களின் குழந்தைகள் இலகுவாக புரிந்துகொள்ளுகின்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் நோக்கம்தான் இந்த புதிய பார்பி டோலின் அறிமுகத்தில் இருக்கிறது.
அதற்காகத்தான் இந்த பார்பி டோலின் தலையும் வழுக்கையாக தயாரிக்கப்பட்டிருக்கிறது.
சமூக இணைய வலைத்தளங்களில் வழுக்கைத் தலையுடன் தோன்றும் பாவை பொம்மை படமொன்று புற்றுநோய் வழிப்புணர்வு பிரசாரங்களை தாங்கிவருகின்றது.
ஃபேஸ்புக் தளத்தில் வெளியான பால்ட் பார்பியின் படம்தான் மெட்டல் நிறுவனம் புதிய பால்ட் பார்பி டோலை உருவாக்க காரணமாக அமைந்திருக்கிறது.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள சிறார் நல மருத்துவமனைகளுக்கு இந்த பார்பி டோலை விநியோகிப்பதற்கு அதனைத் தயாரிக்கும் மெட்டல் நிறுவனம் எண்ணியுள்ளது.
வழமையில் ஒஸ்ஸர்வேட்டோரி ரொமானோ இதழில் கன்னி மரியாளின் படங்கள் தான் நிறைந்திருக்கும். இப்போது புதிதாக பாவை பொம்மைகளின் படங்களை பார்த்ததும் அதன் வாசகர்களுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.
பார்பி டோலின் பரிணாம வளர்ச்சி
இன்று உலகில் அதிகளவில் விற்பனையாகும் ஒரு பாவை பொம்மையான பார்பி டோல், காலத்துக்கேற்ற விதத்தில் கண்டுவந்துள்ள மாற்றங்களில் இன்னொரு முக்கிய வளர்ச்சிதான் இன்றைய வழுக்கைத் தலைகொண்ட பார்பி.
இன்று அமெரிக்காவைப் பொறுத்தவரை 90 வீதமான 3 வயதுமுதல் 10 வயது வரையான பெண் குழந்தைகளிடத்தில் பார்பி டோல் ஒன்று இருக்கிறது.
புற்றுநோய் மற்றும் கீமோதெரபி சிகிச்சையினால் ஏற்படுகின்ற மாற்றங்களை ஒரு குழந்தை புரிந்துகொள்ள உதவும் சமூகரீதியான மாற்றத்துக்கு உதவும் ஒரு கருவிதான் இந்த பால்ட் பார்பி டோல் என்று வரலாற்று ஆய்வாளர்களின் நம்புகின்றனர்.
பெண் குழந்தைகளை பெரிதும் ஈர்க்கின்ற பாவை பொம்மைகளின் நவ நாகரிக வடிவம் தான் பார்பி டோல்.
1959 இல் அது அறிமுகமானது. அதன் பின்னர் 1988 இல் பார்பி த டாக்டர் ஆக பரிணாமம் பெற்றது. அதன்பின்னர் விமானம் ஓட்டும் பைலட் ஆகவும், உடற்பயிற்சி பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பார்பி 1990 இல் பிரபலமானது.
இப்போது வெளியாகின்ற பால்ட் பார்பி, அதன் வழுக்கைத் தலையை மறைப்பதற்கான தலைமுடி விக் அங்கிகளையும் தொப்பிகளையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வத்திக்கான் செய்தி இதழ் 150 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது.
அண்மைய மாதங்களில் இந்தப் பத்திரிகை முக்கிய சில மாற்றங்களைக் கண்டுவருகிறது.
கடந்த காலங்களில் மிக கட்டுப்பாடான சமய மற்றும் அரசியல் விடயங்களையே தொனிப்பொருட்களாக பேசிவந்த இந்தப் பத்திரிகை, இப்போது சமூக மற்றும் நிகழ்கால கலாசார விடயங்களையும் தாங்கிவருகின்றமை பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment