Monday, September 10, 2012

டெல்லியில் பதுங்கி இருக்கிறாரா துரை தயாநிதி? கிரானைட் விறுவிறு!


தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்​சாமி அவர்களை உடனே விடுதலை செய்!’ -  மதுரைக்குள் முளைத்திருக்கும் இந்த திடீர் போஸ்டர்களாலும், தொழிலாளர்களின் போராட்டங்​களாலும் கிரானைட் விவகாரத்தில் கிடுகிடுத் திருப்பங்கள்! 
வளைக்கப்படும் கனிமவளத் துறை அதிகாரிகள்!  
கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக கனிமவளத் துறை ஊழியர்கள் மூவர் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்படுவதாக ஏற்கெனவே நாம் எழுதி இருந்தோம். அதேபோல், ரெங்கசாமிபுரம் 'டாமின்’ அலுவலகத்தின் முதுநிலைத் திட்ட அலுவலர் மனோகரன், திட்ட அலுவலர் ஜவகர், சுரங்கப் பணித் துணைவர் ரகுபதி ஆகிய மூவரையும் செப்டம்பர் 1-ம் தேதி கைது செய்துவிட்டது போலீஸ். இன்னும் சிலரும் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட 'டாமின்’  துணை இயக்குநர் ராஜாராமை ஒரு வாரமாக கஸ்டடியில் வைத்து விசாரித்தது போலீஸ். துரை தயாநிதியின் ஒலிம்பஸ் குவாரியில் நடந்திருக்கும் விதிமுறை மீறல்கள் குறித்தே ராஜாராமைத் துளைத்து எடுத்தார்களாம். இப்போது அவரை, 'அழைத்தால் ஆஜராக வேண்டும்’ என்ற நிபந்தனையுடன் விடுவித்து இருக்கிறது போலீஸ். 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு வருடங்கள் ராஜாராம் மதுரை கனிமவளத் துறையில் பணி​புரிந்திருக்கிறார். உதவி இயக்குநராக இருந்தவரை, தி.மு.க. ஆட்சியில் துணை இயக்குநர் புரமோஷன் குடுத்து மதுரையிலேயே பணிபுரிய​வைத்துள்ளனர். அந்த நன்றிக்காக, தி.மு.க. புள்ளிகள் சொன்​​னதற்கு எல்லாம் தலையாட்டி இருக்கிறார். துரை தயாநிதி, பொன்முடி, அழகிரி உள்ளிட்ட தி.மு.க. தலைகளைக் கோக்கவே ராஜாராமைக் கைது செய்யாமல்சுதந்திர​​மாக உலவ​​விட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மூணாறில் பி.ஆர்.பி. குடும்பம்... டெல்லியில் துரை தயாநிதி!
பி.ஆர்.பி. குடும்பத்தினர், மூணாறு அல்லது வண்டிப்பெரியாரில் தங்களுக்குச் சொந் தமான எஸ்டேட்டில் பதுங்கி இருக்கலாம் என்கிறார்கள். ''பி.ஆர்.பி-யின் மேனேஜர் சண் முகநாதனுக்கு கொடைக்கானலில் பங்களா இருக்கிறது. அங்குதான் அவர் பதுங்கி இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன், சொந்த ஊரான பரவை கிராமத்துக்கு வந்துவிட்டுப் போனதாகத் தகவல்'' என்கிறது போலீஸ். பி.ஆர்.பி-யின் பினாமியும் ஜி.ஜி. கிரானைட்ஸ் அதிபருமான கோபாலகிருஷ்ணன், சித்தூருக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் கொத்தம்பள்ளியில் உள்ள பி.ஆர்.பி-யின் கிரானைட் குவாரியில் பதுங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். துரை தயாநிதியை டெல்லியில் சேஃப்டியாகப் பதுக்கிவைத்து இருக்கிறார்கள் என்பது தனிப்படையின் யூகம்.
அறிக்கை விட்ட பி.ஆர்.பி. சுரேஷ்குமார்
பல திசைகளிலும் சமாதானத் தூதுவிட்டு தோற்றுப்போன பி.ஆர்.பி தரப்பு, கடந்த 31-ம் தேதி பத்திரிகைகள் வாயிலாக முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்தது. பி.ஆர்.பி-யின் மகன் சுரேஷ்குமாரின் பெயரில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், 'நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டே தொழில் செய்து வருகிறோம். வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே தரமான கல்லாக இருக்கும்; எஞ்சியவை கழிவுதான். நாங்கள் பூமிக்குள் புதைத்து வைத்த கழிவுக்கற்களைப் பார்த்து, கிரானைட் கற்களைப் பதுக்கி வைத்திருப்பதாக எங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 27 ஆண்டுகளில் நாங்கள் மொத்தமே 6 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி செய்திருக்கிறோம். ஆனால், 35 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக சகாயம் தவறான அறிக்கை கொடுத்திருக்கிறார். 35 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு 100 ஆண்டு​களாவது ஆகும்.
பணிமாற்றம் செய்யப்பட்ட பிறகும் சகாயம் 20 நாட்கள் மதுரையில் தங்கி இருந்து, '35 ஆயிரம் கோடிகள் இழப்பு’ என்று அறிக்கை தயாரித்து அனுப்பி இருக்கிறார். இப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ராவும் அந்தச் செய்திகளின் அடிப்படையில் கிரானைட் குவாரிகள் மீது தவறான கண்ணோட்​டத்தில் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். சுமார் 200 கோடிக்கு ஏற்றுமதி ஆர்டரை நாங்கள் பெற்றிருக்கிறோம். அதைக் குறித்த காலத்துக்குள் முடிக்கவில்லை என்றால், பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாவோம். எனவே, முதல்வர் அவர்கள் தலையிட்டு எங்களது நிறுவனம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டு உள்ளது.
அலற வைக்கும் அபகரிப்புப் புகார்கள்!
பி.ஆர்.பி-யின் சொத்துப் பட்டியலைத் தேடி தமிழகம் முழுவதும் ஊடுருவிய 13 தனிப் படையினர், சுமார் 5,000-க்கும் மேற்பட்ட சொத்துப் பத்திர நகல்களைக் கொண்டுவந்து குவித்திருக்கிறார்களாம். இவற்றைவைத்து மொத்த சொத்து மதிப்பைக் கணக்கிடவே நாள் கணக்கில் ஆகும் என்கிறார்கள். இதனிடையே, கிரானைட் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் நேரில் வந்து புகார் கொடுக்கலாம் என்று எஸ்.பி. பாலகிருஷ்ணன் கொடுத்த அறிவிப்புக்கு செம ரெஸ்பான்ஸ். இதற்காக செப்டம்பர் 1-ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் 65 மனுக்கள் வந்து குவிந்தன. அதில் 90 சதவிகிதம் நில அபகரிப்புப் புகார்கள். அதிலும் 45 மனுக்கள் பி.ஆர்.பி-யைக் குறிவைப்பவை. இந்தப் புகார்களின் அடிப்படையில் பி.ஆர்.பி. மீது கொலை மிரட்டல் வழக்கு ஒன்றும் பதிவாகி இருக்கிறது. கடந்த 5-ம் தேதி வரை பி.ஆர்.பி. மீது பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 8.
தொழிலாளர்கள் முற்றுகை... விவசாயிகள் கோரிக்கை!
பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலைக்கு சீல் வைத்ததைக் கண்டித்து, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டித் தொகுதி எம்.எல்.ஏ-வான கதிரவன் கடந்த 5-ம் தேதி, பி.ஆர்.பி. கிரானைட் தொழிலாளர்கள் சுமார் 1,000 பேருடன் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நியாயம் கேட்டு வந்தார். கிரானைட் தொழிற்சாலையைத் திறக்கக் கோரி அங்கேயே முற்றுகைப் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள், பி.ஆர்.பி. மீது பொய்வழக்குகள் போடப்படுவதாகக் கண் டனக் குரல் எழுப்பினர்.
''பி.ஆர்.பி. கிரானைட் ஆலை மூடப்பட்​டதால் என்னுடைய தொகுதியைச் சேர்ந்த சுமார் 20 ஆயிரம் இளைஞர்கள் நடுத்தெருவில் நிற்கிறார்கள். முறைகேடுகள் நடந்திருந்தால், அது சம்பந்தமாக அரசுவழக்குப் போட்டு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்கட்டும். அதற்காக, குவாரிகளை மூடி தொழிலாளர்​களின் வயிற்றில் அடிப்பது சரியில்லை. 2ஜி விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ஊழல் என்றார்கள். அந்த வழக்கில் எந்தக் கம்பெனிக்கு சீல் வெச்சாங்க... எத்தனை தொழிலாளி பாதிக்கப்பட்டான்? அதே மாதிரித்தான் இந்த வழக்கையும் பார்க்கச் சொல்கிறோம்'' என்றார் கதிரவன்.
இவர்கள் மனு கொடுத்துவிட்டுப் போன பிறகு, விவசாயிகளைத் திரட்டிக்​கொண்டு அங்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளரும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணன், கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்​பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக் கோரி மனு கொடுத்துவிட்டுப் போனார்.
  செப்டம்பர் 11-ல் கலவர அபாயம்
விசாரணைகளை முடக்கிப் போடு​வதற்காக மேலூர் பகுதியில் சாதிரீதியிலான கூட்டங்களை அ.தி.மு.க. புள்ளிகள் சிலரே முன்னின்று நடத்து​கிறார்களாம். சமீபத்தில், மேலூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட புத்தம் புதிய 'டி.வி.எஸ். ஸ்போர்ட் பைக்’குகளை இறக்கி இருக்கிறார்கள். இந்த பைக்குகளில் கிராமங்களை வட்டமடிக்கும் இளை​ஞர்கள், குவாரிக்கு ஆதரவான போராட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டுவதாக தகவல் போலீஸ் காதுகளை எட்டி இருக்கிறது.
   இதுதொடர்பாகபேசிய இன்ஸ்பெக்டர் ஒருவர், ''கிரானைட் குவாரி விசாரணை ஆரம்பத்தில் இருந்தபோதே பெருங்குடியில் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளை சேதப்படுத்திக் கலவரத்தைத் தூண்டப் பார்த்தாங்க. இப்பப் பாருங்க... 'பழனிச்சாமித் தேவரை விடுதலை செய்’னு பி.ஆர்.பி-க்கு சாதியப் பின்புலம் குடுத்து போஸ்டர் ஒட்டியிருக்காங்க. செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரனோட குருபூஜை வருது. அந்த சமயத்தில் கலவரத்தைத் தூண்டிவிடும் முஸ்தீபுகள் பல வழியில் நடக்கிறது'' என்றார்.
காவல் துறை இன்னமும் விழிப்புடன் இருக்கவேண்டிய நேரம் இது!

No comments:

Post a Comment