மேலூர் பகுதி கிரானைட் சுரங்கங்களில் கற்கள் அளவீட்டுப் பணிகளுக்குக் கிளம்பிய அதிகாரிகள் குழு, 28 நாட் களில் 58 ஆயிரத்து 915 கற்களை மட்டுமே அளந்து முடித்திருக்கிறது. இன்னும் கடக்க வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், 'இன்னும் 20 நாட்களுக்குள் முக்கியக் கட்டத்தை எட்டிவிடுவோம்’ என நம்பிக்கை தருகிறார் மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.
தொடங்கியது விஜிலென்ஸ் விசாரணை
கிரானைட் சுரங்க மோசடிகளில் தொடர்பு டைய அதிகாரிகளைச் சிக்கவைக்க விஜிலென்ஸ் நடவடிக்கையும் பாயலாம் என்று நாம் எழுதி இருந்தபடியே, ஆரம்பமாகி விட்டது. வருவாய்த் துறை, காவல் துறை, கனிமவளத் துறை, பொதுப் பணித் துறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துறைகளின் அதிகாரிகள் கிரானைட் கரன்ஸியில் கிறங்கிக்கிடந்து இருக்கிறார்கள் என்பதால் 'சுதந்திரமான விசாரணை நடத்த விஜிலென்ஸ் நடவடிக்கை அவசியம்’ என்று தலைமைச் செயலாளருக்கு அறிக்கை அனுப்பினாராம் கலெக்டர். அந்த அறிக்கையில், சாம் பிளுக்காக ஊழல் அதிகாரிகள் சிலருடைய பெயர்களையும் சுட்டிக்காட்டி இருந்தாராம். இதையடுத்து, சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவின் சிறப்புப் புலனாய்வு பிரிவு ஏ.டி.எஸ்.பி. சண்முகபிரியா தலைமை யில் விஜிலென்ஸ் டீம் களம் இறங்கியது.
ஆகஸ்ட் 29-ம் தேதி, மேலூர் பகுதியில் உள்ள 'டாமின்’ அலுவலகங்களுக்குள் புகுந்து ஆவணங்களை அள்ளிய இந்த டீம், மூன்று பேரைக் கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது. விசாரணை வீரியம் அடைந்தால், முன்னாள் கலெக்டர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கே பதிவு செய்யப்படலாம் என்கிறது போலீஸ் வட்டாரம். அதேசமயம், பி.ஆர்.பழனிச்சாமியின் வழக்குகளை விசாரிக்கும் தனிப் படை போலீஸார், தங்கள் பங்குக்கு டாமின் அதிகாரிகள் ஐந்து பேரை அள்ளிக் கொண்டுபோய் பெண்டு நிமிர்த்தியதில், 'எங்களுக்கு மாதாமாதம் ஆளுக்கு 25ஆயிரம் குடுப்பாங்க. அதைத்தவிர வேறு எந்த பலனும் நாங்க அடையலை’ என்று அலறினார்களாம். இதனிடையே, குவாரிகளில் நடந்திருக்கும் மர்ம மரணங்களைக் கொலை வழக்குகளாக மாற்றுவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து ஏற்கெனவே இந்த வழக்குகளை சந்தேக மரணங்களாகப் பதிவுசெய்த எஸ்.ஐ. நல்லுவை வரவழைத்து ஆலோசனையும் நடத்தினார்களாம்.
மூன்று பகீர் கொலைகள்!
அண்மையில், திருவாதவூர் ஓவமலை குவாரிகளுக்கு கலெக்டர் விசிட் அடித்துவிட்டு சென்ற பிறகு அவரைத் தொடர்பு கொண்ட சிலர், 'இங்கிருக்கிற ஒரு கிரானைட் குவாரியில் வேலை பார்த்த ரெண்டு பசங் களை மண்ணெண்ணெய் திருடி வித்துட்டாங்கன்னு சொல்லி அடிச்சுக்கொன்னு புதைச்சிட்டாங்க. இன்னொரு ஆளை எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்துக் கொன்னுட்டாங்க. இந்தப் பகுதியில் காஸ்ட்லியான காஷ்மீர் ஒயிட் கிரானைட் வெட்டி எடுத்த குவாரி ஒன்றை மூடி, அதுக்கு மேலே மரங்களை நட்டுவெச்சிருக்காங்க. லேசா தோண்டிப் பார்த்தாலே கண்டுபிடிச்சுடலாம். மேலூர், கீழவளவு பகுதியில் சில இடங்களில் கண்மாய்க்குள் கழிவுநீரை நிரப்பி இருப்பாங்க. அதைத் தோண்டினாலும், திருட்டுத்தனமா வெட்டிப் பதுக்கப்பட்ட கிரானைட் கற்கள் இருக்கும்’ என்று தகவல்களைத் துப்பி இருக்கிறார்கள்.
கிரானைட் ஊழல்கள் குறித்துத் தகவல் களைத் திரட்டுவதற்காக மேலூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர் படை ஒன்று கிராமம் கிராமமாகச் சுற்றுகிறது. இவர்களிடம் பேசியதில், ''இங்கு நடந்திருக்கும் கிரானைட் கொள்ளையில் கால்வாசிகூட இன்னும் வெளியில் வரவில்லை. முக்கால்வாசி மண்ணுக்குள் மறைஞ்சு கிடக்கு. மேலூர் ஏரியாவில் கிடைக்கும், 'எல்லோ மெட்டீரியல்’ என்று சொல்லப்படும் மெஜூரா கோல்டு, காஷ்மீர் கோல்டு கிரானைட் கற்களுக்கு உலக அளவில் டிமாண்ட். அதனால், அந்த வகைக் கற்களை பெருமளவில் வெட்டி எடுத்து, கண்மாய்களுக்குள் பதுக்கிவெச்சிருக்காங்க. தெற்குத் தெருவில் உள்ள கிரானைட் கம்பெனியில் ஒரு அண்டர் கிரவுண்ட் இருக்கு. அதுக்குள்ளேயும் காஸ்ட்லியான கிரானைட் கற்கள் இருக்கு. இன்னும் அஞ்சு வருஷம் போச்சுன்னா இந்த வகைக் கற்கள் அரிதாகிடும். அந்த நேரத்துல வெளியே எடுத்து வித்துக்கலாம்கிறது இவங்களோட திட்டம். பெரியகோட்டைப்பட்டி கண்மாய், அய்யன்பந்தி கண்மாயைத் தோண்டிப் பார்த்தா பெரிய அளவுல கிரானைட் பதுக்கல்கள் சிக்கும்'' என்கிறார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஏரியா தலையாரிகளிடம் கூடிய விரைவில் கிடுக்கிப்பிடி விசாரணை இருக்கலாம்!
தீவிரவாதிகளுக்கு வெடிமருந்து சப்ளையா?
'சட்ட விரோதமாக வெடிமருந்துகளைப் பதுக்கி வெச்சிருக்கலாம்’ என்று இளைஞர் படை கொடுத்த தகவலை அடுத்து, புறாக்கூட்டு மலை அருகே உள்ள பி.ஆர்.பி-க்குச் சொந்தமான மூன்று வெடி மருந்து குடோன்களில் 'பாம் ஸ்குவாடு’ போலீஸார் கடந்த 29-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.
''மேலப்பட்டி, இலஞ்சிப்பட்டி, சர்க்கரைபீர் மலை ஆகிய இடங்களிலும் பி.ஆர்.பி-க்குச் சொந்தமான வெடி மருந்து குடோன்கள் இருக்கின்றன. இங்கெல்லாம் தேவைக்கு அதிகமான வெடிப்பொருட்களைக் கொண்டு வந்து ஸ்டாக் வெச்சிருக்காங்க. இங்கெல்லாம் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால், மேலூரைச் சுற்றி இருக்கிற நாலைஞ்சு கிராமங்களே தரைமட்டமாகிடும். குறிப்பிட்ட அளவுக்குப் பாறைகளை உடைக்க இவ்வளவு வெடிமருந்து தேவை என்ற லிமிட்டையும் விதிமுறைகளையும் தாண்டி இவர்களுக்கு தாராளமாய் வெடிமருந்து சப்ளை செய்ய அனுமதித்த அதிகாரிகளையும் கவனிக்கணும்'' என்கிறார்கள் துப்பறியும் படையில் இருக்கும் இளைஞர்கள். மேலூர் பகுதியானது, அல் - உம்மா தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ள ஏரியா என்பதால், இங்குள்ள வெடிமருந்து குடோன்களில் இருந்து தீவிரவாதக் கும்பல்களுக்கு வெடிமருந்து சப்ளை நடந்திருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை போகிறது.
இமாம்அலி, வெடிகுண்டை வெடிக்க வைத்து சோதித்துப் பார்த்த ஏரியா திருவாதவூர் ஓவா மலை. இதன் பின்புறம் இருந்த சிந்து கிரானைட்ஸ் நிறுவனத்தின் ஆக்கிரமிப்புக் கட்டடங் களை கடந்த வாரம் இடித்துத் தள்ள உத்தரவிட்டார் கலெக்டர். இந்த குவாரியை 30-ம் தேதி காலையில் சோதனையிட்ட பாம் ஸ்குவார்டு போலீஸார், அங்கே அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிப் பொருட்களைப் பெட்டி பெட்டியாகக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர். இந்த வெடி மருந்துக் குவியல் தொடர்பாகவும் சிந்து கிரானைட்ஸ் மீது புதிதாக ஒரு வழக்கு பாய்ந்திருக்கிறது!
துரையைப் பிடித்தால் துட்டு!
செப்டம்பர் 4-ல், துரை தயாநிதி உள்ளிட்டவர்களின் முன்ஜாமீன் மனுக் களுக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு எழுதுகிறது என்பதைப் பார்த்துவிட்டு சரண்டர் பற்றி யோசிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார்களாம் பி.ஆர்.பி-யின் உறவுகள். அதற்குள் ளாக அவர்களைச் சரணடையச் செய்ய வேண்டும் என்று பி.ஆர்.பி-யின் சுற்றுவட்டாரங்களுக்கு அதிகபட்ச நெருக்கடியைக் கொடுத்து வருகிறது போலீஸ்!
துரை தயாநிதி வெளிநாட்டில் இருக்கலாம் என அந்தத் தரப்பில் இருந்தே தகவல் கசியும் அதே நேரத்தில், 'துரை தயாநிதியைக் கைதுசெய்யும் போலீஸ் படைக்கு ரிவார்டு உண்டு’ என்று உற்சாகம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஒருவேளை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தன் மகனின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தால், ராம் ஜெத் மலானி அல்லது அந்தி அர்ஜுனா மூலமாக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அனைத்து ஏற்பாடு களையும் செய்து விட்டாராம் அழகிரி.
சோனியாவுக்கு நெருங்கியவர்களின் கம்பெனிக்கு சப்ளை?
24 நாடுகளுக்கு பி.ஆர்.பி. தனது வியாபாரத் தொடர்புகளை விரிவுபடுத்தி இருந்தாலும் இத்தாலி யோடுதான் அதிக நெருக்கமாம். இத்தாலியில் சோனியாவுக்கு நெருங்கியவர்களுக்கு 12 கிரானைட் கம்பெனிகள் இருக்கின்றன. பெல்ஜியம் உள்ளிட்ட இன்னும் இரண்டு நாடுகளிலும் நான்கு கிரானைட் கம்பெனிகள் இருக்கின்றன. அங்கேயும் பி.ஆர்.பி. கம்பெனிக்கும் வியாபாரத் தொடர்புகள் இருக்கிறதாம். மேலும், 'அதிகளவில் அந்நியச் செலாவணி ஈட்டித் தந்த நிறுவனம்’ என, பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக ஜனாதிபதி விருது கொடுக்கப்பட்டதன் சூட்சுமம், இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருப்பதாக செய்திகள் சிறகடித்த பிறகும் மத்திய அரசின் அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கும் மர்மம், மூன்று ஆண்டுகளுக்கு முன் பி.ஆர்.பி. நிறுவனங்களின் கணக்கு வழக்குகளைத் துருவிய வருமான வரித் துறை மண்டல அதிகாரிக்கு காங்கிரஸ் மத்திய அமைச்சர் முட்டுக்கட்டை போட்ட விவகாரம், தி.மு.க. மத்திய அமைச்சர் ஒருவர் கிரானைட் புள்ளிகளைக் காப்பாற்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் விதம், கிரானைட் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு நகர்த்திக் கொண்டுபோக கிரானைட் புள்ளிகள் தரப்பில் காட்டப் படும் ஆர்வம்’ போன்றவற்றை அறிந்து ரொம்பவே சூடாகிப்போனாராம் முதல்வர்.
'இதில் எந்த அளவுக்கு மோசடி நடந்திருக்கு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்குன்னு ஆதியில் இருந்து ரிப்போர்ட் கொடுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். மதுரை கலெக்டர் இதுவரை, மூன்று நாட்களுக்கு ஒன்று வீதம் ஆறு அறிக்கைகளை அனுப்பி இருக்கிறார். கிரானைட் ஊழலில் காங்கிரஸ் - தி.மு.க. தொடர்புகளை பி.ஆர்.பி. வாயாலேயே சொல்ல வைக்கத்தான் போராடுகிறது போலீஸ்'' என்று கிறுகிறுக்க வைக்கிறார்கள்.
இதனிடையே, பி.ஆர்.பி. மீது இதுவரை ஏழு வழக்குகளைப் பாய்ச்சி இருக்கும் போலீஸ், 'குண்டர்’ முத்திரையையும் தயாராக வைத்திருக்கிறதாம்!
No comments:
Post a Comment