இந்திய நீதித் துறையையே சென்னைக்கு அழைத்துவரக் காரணம் ஆகிவிட்டது சென்னை உயர் நீதிமன்றத்தின் 150-வது ஆண்டு விழா. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முதல் இளம் வழக்கறிஞர்கள் வரை பலரும் திரண்டு வந்திருக்க... ஒரே கோலாகலம்!
கடந்த 8-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை மாலை என இரண்டு பகுதிகளாக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அலுவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் விழா அரங்கத்துக்கு திரண்டுவரத் தொடங்கினர். உயர் நீதிமன்றம் பற்றி கவிஞர் வைரமுத்து எழுதிய பொன் விழாக் கருத்துப் பாடல் விழாவில் இசைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீரின் மனைவி மின்னா கபீர், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலின் மனைவி இபாத் இக்பால், உயர் நீதிமன்றப் பெண் நீதிபதிகள் பானுமதி, வி.சித்ரா, சுகுணா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
சென்னை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர் சங்கப் பிரதிநிதிகள், நீதிமன்ற உயர் அலுவலர்கள் என அனைவருக்கும் விழாவில் பங்களிப்பு தரும் வகையில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணனுக்குத் தரப்பட்டிருந்த தலைப்பு, 'நீதி நிர்வாகத்தில் மாநில அரசின் பங்கு’. ''நீதித் துறைக்கு தேவையான நிதியை மாநில அரசாங்கம் தாராளமாக ஒதுக்கி வருகிறது. ஆனால், விரைவு நீதிமன்றங்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசாங்கம் இதுவரை ஒதுக்கவில்லை. அந்த நிதியையும் மாநில அரசே முழுமையாக ஒதுக்கித் தந்துள்ளதை நான் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்'' என தமிழக அரசைப் பாராட்டியும் மத்திய அரசை இடித்துரைத்தும் தனது கடமையை செவ்வனே செய்து முடித்தார்.
அம்பேத்கர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் உதயபானு, ''இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில், 896 நீதிபதிகள் பணிபுரிகின்றனர். அவர்களில் 24 நீதிபதிகள் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது நீதியா?'' என்று ஒட்டுமொத்த நீதித் துறையும் அமர்ந்திருந்த அரங்கத்தில் தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மீண்டும் மாலை 5 மணிக்கு விழா ஆரம்பமானது. சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 150-வது ஆண்டு விழா நினைவுத் தூணை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்துவைத்தார். பின்னர், நீதிபதிகளுடன் தேநீர் விருந்தை முடித்துக்கொண்டு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வந்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர், விழா மேடைக்கு வந்த பிரணாப் முகர்ஜியை எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் முப்படைத் தளபதிகளும் விழாவில் கலந்துகொண்டதால், அரங்கம் நிரம்பி வழிந்தது. கவிஞர் வைரமுத்துவும் கலந்துகொண்டார். அவருக்கு முன் வரிசையில் இருக்கை. மேடையில் இருந்த ஜெயலலைதாவுக்கு முகத்தில் ஏக கடுப்பு. வைரமுத்துக்குப் பக்கத்து இருக்கை சபாநாயகர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதாவின் பார்வையில் படும்படி அமர்ந்திருந்த சபாநாயகர் ஜெயக்குமார், வைரமுத்துவுடன் பேச முடியாமலும் அந்த சூழ்நிலை யைத் தவிர்க்க முடியாமலும் விழா முடியும் வரை தவித்தார்.
வரவேற்புரை ஆற்றிய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்டமாஸ் கபீரையும் பி.சதாசிவத்தையும் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதிகள் என்று குறிப்பிட்டார். அப்போது அவர்களிடம் ஏக பூரிப்பு. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, ''சிறப்பான தலைமைப் பண்பைக்கொண்டவர்; நீதித் துறைக்கு எப்போதும் நல்ல ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்குபவர்'' என்றார்.
ஜெயலலிதா பேச எழுந்ததும், அரங்கத்தின் மாடியில் இருந்து ஒற்றைக் குரல், 'தங்கத் தலைவி அம்மா வாழ்க’ என்று ஒலித்தது. அந்தக் குரல் வந்த திசையைப் பார்த்து சிரித்த முதலமைச்சர், பின்னர் பேசத் தொடங்கினார். ''இனி வரும் காலங்களில் வழக்கறிஞர்களின் சேமநல நிதி இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்தே கால் லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா அறிவித்ததும், அரங்கத்தில் எழுந்த வாழ்த்துக் கோஷங்களும் கைதட்டல்களும் அடங்க நீண்ட நேரமானது. தனது உரையை சற்று நேரம் நிறுத்திய ஜெயலலிதா, ''இந்த சேமநல நிதியைப் பெற வயது வரம்போ அல்லது அனுபவ வரம்போ கிடையாது'' என்று அறிவித்தது விழாவின் ஹைலைட். கருணாநிதி இதுபோன்ற அறிவிப்பை தனது ஆட்சியில் செய்தாலும் அரசு ஆணை வெளியிடவில்லை. மேலும், வழக்கறிஞர்களுக்கு வயது வரம்பும் வைத்தார். அது கிடையாது என்று ஜெ.அறிவித்தது வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்தியது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையில், நீதித் துறைக்கு வழங்கிய அறிவுரைகளை அனைவரும் கூர்ந்து கவனித்தனர்.
வழக்கறிஞர்களின் சேமநல நிதியை உயர்த்தி அறிவித்ததன் மூலம், வழக்கறிஞர்களால் குறை சொல்ல முடியாத முதல்வராக ஆகிவிட்டார். இதை உறுதிப்படுத்துவது மாதிரி ஹைகோர்ட் வளாகத்தில், திங்கள் கிழமையன்று பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள் வழக்கறிஞர்கள். 'அம்மாவைப்
பாராட்டும் விழா’ எடுக்கப்போகிறார்களாம்.!
No comments:
Post a Comment