Friday, September 7, 2012

எனது இந்தியா (கொள்ளை அடித்த கல்வி வள்ளல் ! ) - எஸ். ராமகிருஷ்ணன்....



உடனே, கிளவரிங் தலைமையில் புதிய கவுன்சில் கூட்டப்பட்டது. அதில், நந்தகுமார் விசாரிக்கப்பட்டார். வாரன் ஹேஸ்டிங் லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டு, லஞ்சப் பணமான 3,54,105 ரூபாயை வாரன் ஹேஸ்டிங் உடனே கம்பெனியின் கணக்கில் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாரன் ஹேஸ்டிங், நந்தகுமாரை ஒழிப்பதற்கான தருணத்துக்காகக் காத்திருந்தார். 1774-ம் ஆண்டு மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் ஆணைப்படி கல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் உருவாக்கப்பட்டது. அதில், நந்தகுமாருக்கு எதிராக ஒரு மோசடி வழக்கை தனது பினாமிகளைக்கொண்டு பதிவு செய்தார் வாரன் ஹேஸ்டிங்.

அதாவது, 1770-ம் ஆண்டு நந்தகுமார் நிர்வாக அதிகாரியாக இருந்தபோது பண மோசடி செய்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்கக் கூடாது, இது பொய் வழக்கு என்று முறையிட்டார் நந்தகுமார். ஆனால், வாரன் ஹேஸ்டிங்கின் செல்வாக்கு நீதிபதி வரை பாய்ந்தது. ஆகவே, வழக்கை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.

12 ஜுரிகள் கொண்ட குழு, நீதிபதி இம்பே தலைமையில் இந்த வழக்கை விசாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அவசரஅவசரமாக விசாரணை நடந்தது. முடிவில், நந்தகுமார் செய்த குற்றம் மன்னிக்க முடியாதது. ஆகவே, அவருக்கு அதிகபட்சத் தண்டனை வழங்க வேண்டும் என்று ஜுரிகள் முடிவு செய்தனர். ஆனால், நீதிமன்றத்தில் தான் முறையாக விசாரிக்கப்படவில்லை. ஆகவே, முழுமையான குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். சாட்சிகளையும் முறையாக மறு விசாரணை செய்ய வேண்டும் என்று, மன்றாடினார் நந்தகுமார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
இங்கிலாந்தின் பாராளுமன்றம் பண மோசடியை மன்னிக்க முடியாத குற்றமாக சட்டம் இயற்றி உள்ளதால், இங்கிலாந்து சட்டப்படி நந்தகுமாருக்கு தூக்குத் தண்டனை விதிப்பது என்று நீதிமன்றம் முடிவு செய்தது. நிர்வாகக் காரணத்துக்காக மட்டுமே தான் கையப்பமிட்டு பணவோலையை மாற்றியதாகவும், அது கையாடல் இல்லை என்றும், இந்தியாவில், இங்கிலாந்தின் சட்டம் செல்லாது என்றும் மேல் முறையீடு செய்ய முயன்றார் நந்தகுமார்.

காலனிய ஆட்சி நடந்த எந்தப் பிரதேசத்திலும் இங்கிலாந்தின் சட்டம் செல்லுபடியாகும். ஆகவே, இங்கிலாந்து சட்டப்படி அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் அறிவித்தது. அப்படியானால், இதுகுறித்து ஜார்ஜ் மன்னரின் பிரிவியூ கவுன்சிலில் முறையிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் நந்தகுமார். அதுவும் மறுக்கப்​பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கபட்ட கைதி என்ற முறையில், கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை தனக்கு இருக்கிறது, அதையாவது அனுமதிக்க வேண்டும் என்று மன்றாடினார் நந்தகுமார். ஆனால், நீதிமன்றம் அதையும் நிராகரித்தது.

வாரன் ஹேஸ்டிங் தனது அதிகாரத்தைக்கொண்டு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியதோடு இந்தியாவில் முதன்முறையாக இங்கிலாந்தின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழியையும் உருவாக்கினார். 1775-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நந்தகுமார் தூக்கில் போடப்பட்டார்.  இந்தச் சம்பவம், கவர்னர் ஜெனரலுக்கு எதிராக யாராவது குற்றம் சாட்டினால் இந்தக் கதிதான் ஏற்படும் என்பதற்குச் சான்றுபோல அமைந்தது. அதற்குப் பிறகு வந்த ஆங்கிலேய அதிகாரிகள் அத்தனை பேரும் தன் இஷ்டம்போல கொள்ளை அடிக்க வழிவகை செய்தது நந்தகுமாரின் மரணம். மேலும், அதிகாரத்தைச் சாமான்ய மனிதனால் எதிர்க்க முடியாது என்பதையும் மக்கள் மனதில் ஆழமாகப் பதியவைத்தது.

இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி இம்பே, வாரன் ஹேஸ்டிங்கின் சுயநலத்துக்காக தவறான தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இது, நீதியின் பெயரால் நடத்தப்பட்ட கொலை என்று விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து வாரன் ஹேஸ்டிங் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டு இங்கிலாந்தின் காமன் சபையிலும் எழுந்தது. இந்த வழக்கு மீது ஏழு ஆண்டுகள் தொடர் விசாரணை நடந்தது. முடிவில், வாரன் ஹேஸ்டிங் குற்றமற்றவர் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில்  கொள்ளை அடித்த பணத்துடன் தனது 85 வயது வரை ஒரு கனவானைப் போல வாழ்ந்த வாரன் ஹேஸ்டிங், இந்தியாவை எப்படி நல்லாட்சி செய்வது என்பதற்கான கிழக்கிந்தியக் கம்பெனியின் அரசியல் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார். ஓர் எழுத்தராக ஐந்து பவுண்ட் பணத்துடன் இந்தியா வந்து இறங்கிய வாரன் ஹேஸ்டிங், இந்தியாவில் கொள்ளை அடித்த பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 20 மில்லியன் பவுண்ட் என்கிறார்கள்.

இவ்வளவு குற்றங்களும் ஊழலும் செய்த வாரன்​ஹேஸ்டிங் பெயரால் இன்றும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. நியூசிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் அவரது பெயரால் நகரங்கள் உள்ளன. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வாரன் ஹேஸ்டிங்கின் நினைவாக நகரங்கள் இருக்கின்றன என்றால், ஊழல் பணத்தால் கல்வித் தந்தை ஆனவர்களின் கதையும் காலனிய ஆட்சியிலே நடந்தேறி இருக்கிறது.

இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக்​கொண்டு அமெரிக்காவில் கல்வி நிலையம் அமைத்தவர் எலிகு யேல். அதுதான் அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகம்.

இந்தியாவில் முறைகேடாகப் பணம் சம்பாதித்த ஒருவரின் பெயரைக்கொண்டிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சி யேல் பல்கலைகழகத்துக்கு ஒருபோதும் ஏற்பட்டதே இல்லை. இன்று, அந்தப் பல்கலைக்கழகத்தை பெரும் அறிவுச் சுரங்கமாகக் கருதுகிறார்கள். பல்துறைகளில் விரிவான ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால், தங்கள் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய யேல், இந்தியாவில் எப்படி இவ்வளவு வருவாய் ஈட்டினார்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதானா? என்பதைப் பற்றி யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை. யேலை ஒரு புனிதரைப் போல சித்திரிக்கும் செய்திகளும், தகவல்களுமே நிரம்பி இருக்கின்றன.

மதராஸ் கவர்னராக யேல் இருந்தபோது தன்னிச்சையாக வணிகம் செய்ததைப் பற்றியோ, இந்தியக் காடுகளை அழித்து தேக்கு மரங்களை விற்றுப் பணம் சேர்த்ததைப் பற்றியோ, வைர வணிகம், அடிமை வணிகத்தில் ஈடுபட்டதையோ ஒரு வரிகூட, அவருடைய சுய விவரக் குறிப்பில் இல்லை. யேல், தனது அடிமை ஒருவரோடு உள்ள ஓவியம் ஒன்று அவரது நினைவுச் சின்னமாக பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிவைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த கறுப்பின அடிமையை அவர் விலைக்கு வாங்கி தனது வீட்டு வேலையாளாக வைத்திருந்தார் என்ற செய்தி 2007-ம் ஆண்டு பரவியது. உடனே, அது உண்மை இல்லை என்று மறுத்த பல்கலைக்கழகம் அவசரமாக அந்த ஓவியத்தை இடமாற்றம் செய்ததோடு அதில் இருந்த அடிமையின் உருவத்தையும் நீக்கியது.

சித்திரத்தில் விரும்பியபடி மாற்றம் செய்துகொள்​ளலாம். ஆனால், வரலாற்றில் அப்படி மாற்றம் செய்ய முடியாதே! எலிகு யேல், கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியாக சென்னையில் பணியாற்றியவர். அவரது திருமணம், புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மரியன்னை தேவாலயத்தில் நடந்தது. யேலின் மகன் டேவிட் சிறுவயதிலேயே இறந்துபோகவே, அவனது உடல் சென்னையில்தான் அடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் அருகே உள்ள தேவனாம்பட்டினத்தில் தனது மகன் பெயரில் டேவிட் கோட்டை என்ற பெரிய கோட்டை ஒன்றை இரண்டு மில்லியன் செலவில் யேல் கட்டினார். அந்தப் பணம் முறைகேடாக சம்பாதித்தது என்ற குற்றசாட்டுக்கு ஆளாகி, பதவி இழந்தார். இங்கிலாந்தில் இருந்து எழுத்தர் வேலைக்காக வெறும் கையோடு இந்தியா வந்து இறங்கிய யேல், 27 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றி சேர்த்த சொத்தின் மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள்.

அன்று கவர்னர் பதவிக்கே 100 பவுண்ட்தான் சம்பளம் கிடைத்தது. அப்படி இருக்க, யேல் மட்டும் 27 ஆண்டுகளில் 100 கோடி ரூபாயை எப்படி சம்பாதித்தார்? இதற்கு, ஒரு குழந்தைகூட எளி​தாகப் பதில் சொல்லிவிடும். யேல், அடிமை வணிகத்தில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனால், அவரது காலகட்டத்தில் அடிமை வணிகம் நடந்தது உண்மை என்று யேலின் வரலாற்றை எழுதிய மால்கம் தெரிவித்து இருக்கிறார்.

1649-ல் யேல் அமெரிக்காவின் பாஸ்டனில் பிறந்தார். அவரது பெற்றோர் இங்கிலாந்தை சேர்ந்த​வர்கள். இளமைக் காலத்தில் கல்வி கற்பதற்காக இங்கிலாந்து சென்ற யேல், அங்கே இருந்து கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தராகப் பணியாற்ற இந்தியாவுக்கு வந்தார். கம்பெனியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த யேல், சென்னையின் இரண்டாவது கவர்னராகப் பதவி வகித்தார். இந்தக் காலகட்டத்தில் தனது வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள நேரடியாக பல்வேறு துஷ்பிரயோகங்களில் இறங்கினார். 1687-ம் ஆண்டு இவர்தான் இந்தியாவில் யூனியன் ஜாக் கொடியை முதல் முறையாக ஏற்றிப் பறக்கவிட்டவர். சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் இவர் நட்டுவைத்த 50 அடி உயர கொடிக் கம்பம் இந்தியாவில் மிகப் பெரிய கொடிக் கம்பமாகும். சென்னைக் கடற்கரையில் கரை தட்டி உடைந்த கப்பலின் பெயர் லாயல் அட்வெஞ்சர். அந்தக் கப்பலில் கொடிக் கம்பம் வந்திருக்கலாம் என்கிறார்கள். எலிகு யேல், கவர்னராக இருந்தபோது கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனராக ஜோசைய்யா சைல்டு என்பவர் இருந்தார். அவர், கவர்னர் யேலின் தன்னிச்சையான நிர்வாகத்தை அடக்கவும், அதிகாரத்தைக் குறைக்கவும், நகராட்சி அமைக்க வேண்டும் என்ற கருத்தைப் பரிந்துரை செய்து 1687 செப்டம்பர் 28-ம் தேதி கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதற்காக வழங்கப்பட்ட உரிமை சாசனத்தால் 1688 செப்டம்பர் 29-ம் தேதி சென்னை கார்ப்பரேஷன் உருவானது. அதன் முதல் மேயராக நத்தேனியல் ஹிக்கன்ஸன் பதவி ஏற்றார்.

யேல், தனது சம்பாத்தியத்துக்காக உள்ளூர் வரியை மிதமிஞ்சி உயர்த்தியதோடு மக்களைக் கடுமையாகத் தண்டிக்கவும் செய்தார். இவரது குதிரை லாயத்தில் வேலை செய்த ஒருவன் குதிரையைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தக் காலத்​தில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று. 1718-ம் ஆண்டு யேலின் 69-வது வயதில் காட்டன் மதேர் என்பவர், அமெரிக்காவின் கனெடிக்கெட் பகுதியில் உள்ள தங்களது இறையியல் நிறுவனம் ஒன்றை புதிய கல்வி நிலையமாக மாற்றுவதற்கு நிதி உதவி அளிக்குமாறு வேண்டினார். யேல், தாராள மனதுடன் தன்னிடம் இருந்த 400 புத்தகங்கள், ஜார்ஜ் மன்னரின் ஒவியம், உடைகள் மற்றும் மரச் சாமான்கள் யாவையும் பரிசாக அளித்தார். இவற்றை ஏலத்தில்விட்டபோது 562 டாலர் பணம் கிடைத்தது. அதைக்கொண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டது. அவர் நினைவாகவே கல்வி நிறுவனத்துக்கு யேல் பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு, அது பெரிய பல்கலைக்கழகமாக வளர்ச்சி அடைந்தது. 1745-ம் ஆண்டு முதல் அந்தப் பல்கலைக்கழகத்துக்கே யேல் பெயர் சூட்டப்பட்டது.

இதில் சுவாரஸ்யமான இன்னொரு சம்பவமும் நடந்தது. யேலை விட அதிகமான நிதி உதவி அளித்த இன்னொரு நபர் ஜெரேமியா டம்மர். அவரது பெயரைத்தான் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டம்மர் என்றால் வாய் பேச முடியாதவர் என்று பொருள். ஆகவே, பல்கலைக்கழகத்துக்கு டம்மர் பெயர் வைத்தால் அது கேலிக்கு உரியதாகிவிடும் என்று காரணம் சொல்லப்பட்டது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் இமாலயத் தவறுகள்கூட காலமாற்றத்தில் கண்டுகொள்ளப்படுவது இல்லை என்பதுபோல, 1692-ம் ஆண்டு லஞ்ச ஊழல் குற்றசாட்டுக்கு உள்ளாகிப் பதவி இழந்த ஒருவரின் பெயர், இன்று உலகம் முழுவதும் உயர்வான கல்வி நிலையத்தின் பெயராக விளங்குகிறது.

யேல் மற்றும் வாரன் ஹேஸ்டிங் ஆகிய இருவரையும் கண்ட மதராஸ் இன்று, சென்னை என்ற மாநகரமாக உருமாறியபோதும், தனது கடந்த காலச் சுவடுகளின் மிச்சம் போல அதிகாரத்தில் இருப்பவர்களை குறுக்கு வழியில் பணம் தேடுபவர்களாக அலையவிடுகிறது. ஒருவேளை, வரலாற்றின் தொடரும் துர்விதி என்பது இதுதானோ?

No comments:

Post a Comment