Friday, September 7, 2012

ஜெயலலிதா எதிரில் கருணாநிதியைப் புகழ்ந்தாரா? ரஜினி பேச்சின் ரகசியம் சொல்கிறார் சோ


ன்மோகன் சிங், மோடி, பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி, ஜெயலலிதா முன்னிலையில் கருணாநிதியை ரஜினி பாராட்டியது...  பேச விஷயமா இல்லை சோவிடம்? விரிவாகவே பேசினார்...
 ''நிலக்கரி ஊழலில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடிக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கவைத்து இருக்கின்றன. என்னவாகும்?''
''வெளிநாடுகளில் இந்த மாதிரி விஷயங்களுக்கு ராஜினாமா செய்வார்கள். ஆனால், இங்கு அந்த மாதிரி மரபு இல்லை. தவிர, சிங் நேர்மைத் திலகமும் இல்லை. எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கிப் போராடுவது வாஸ்தவம்தான். ஆனால், இதை எல்லாம் பார்த்து இந்த அரசு அசந்துபோய்விடும் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒட்டுமொத்த ராஜினாமா செய்தால் அரசுக்கு ஓர் அதிர்ச்சி ஏற்படலாம். ஆனால், அப்படி எல்லாம் பா.ஜ.க-வுடன் எல்லா எதிர்க் கட்சிகளும் கைகோத்துப் போராட மாட்டார்கள். ஏன்... ராஜினாமா செய்யச் சொன்னால் பா.ஜ.க. உறுப்பினர்கள் பலரேகூட யோசிக்கலாம்.''
''ஓர் அரசு இவ்வளவு பலவீனமாக இருக்கும் சூழலிலும்கூட எதிர்க் கட்சிகளால் தலையெடுக்க முடியாததற்கு என்ன காரணம்?''
''அரசின் பலவீனம் முழு பலவீனமாக இல்லை. குறிப்பாக, அரசுக்கு நம்பர்களில் பலவீனம் இல்லை. ஜனநாயகம் என்றால் என்ன? நம்பர்நாயகம்தானே?! நம்பர்கள் அவர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன. அப்படிச் சாதகமாக இல்லாத சூழலில், சி.பி.ஐ-யைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அது மாயாவதியோ, முலாயம் சிங்கோ... யாருடைய நம்பர்கள் தேவையோ சி.பி.ஐ-யை அனுப்பி அந்த நம்பர்களைத் தனதாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் முக்கியமான காரணம்!''
''எதிர்க் கட்சிகளில் வலுவான தலைவர் இல்லை... குறிப்பாக பா.ஜ.க-வில். அதுவும் ஒரு காரணம் இல்லையா?''
''கட்காரி வலுவற்ற ஒரு தலைவர்தான். ஆனால், ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிக்கும் விஷயமாக அது இருக்காது. யார் பிரதமர் வேட்பாளர் என்பதுதான் முக்கியமாக இருக்கும். நரேந்திர மோடியை பா.ஜ.க. முன்நிறுத்தினால், மோடி பிரதமராக வேண்டுமா; இல்லையா? அதுதான் வரும் தேர்தலில் விஷயமாக இருக்கும்!''
''குஜராத் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினருமான மாயா கோட்னானி குற்றவாளி என்று கூறி 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து இருக்கிறது நீதிமன்றம். குஜராத் வெறியாட்டங்களில் பா.ஜ.க-வின் கரங்கள் இருந்ததை இப்போதாவது ஒப்புக்கொள்கிறீர்களா?''
''மாயா கோட்னானி கலவரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்றுதானே தீர்ப்பு வந்திருக்கிறது? இதை எப்படி பா.ஜ.க-வுடன் தொடர்புபடுத்துவீர்கள்? ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் இருக்கிறார். ஏதோ ஒரு கட்சியை அவர் சார்ந்து இருக்கிறார். அவர் ஏதோ ஒரு குற்றம் செய்கிறார். அது எப்படி அந்தக் கட்சியின் குற்றம் ஆகும்?''
''அப்படி என்றால், இப்போதும் பிரதமர் பதவிக்கு மோடியைத் தூக்கிப் பிடிப்பதில் இருந்து நீங்கள் மாறவில்லை?''
''ஏன் மாற வேண்டும்? மாறுவதற்கு இடையில் எதுவும் நடந்துவிடவில்லையே?''
''மோடி Vs ராகுல் என்றால் எப்படி இருக்கும்?''
''ராகுலால் காங்கிரஸுக்குப் பெரிய அனுகூலம் இருக்காது. மோடி வந்தால் நிச்சயம் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பார். மாவோயிஸ்ட், பயங்கரவாதப் பிரச்னைகள் எங்கிருந்து வந்தாலும் அதை அடக்குவதில் முனைப்பு காட்டுவார். நேர்மையான ஆட்சி நடக்கும்!''
''பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதா?''
''இதை அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும்.''
''நீங்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கி இருப்பீர்களே?''
''அதற்கு நான் தேவைப்பட மாட்டேன்!''
''முதல்வர் - திரையுலக நண்பர்களுடனான சந்திப்பில் என்ன பேசிக்கொண்டீர்கள்?''
''நெடுநாள் நண்பர்கள் என்ன பேசிக்கொள்வார்களோ அதைத்தான் பேசிக்கொண்டோம்!''
''ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, 'கருணாநிதி என் ஆருயிர் நண்பர்’ என்று ரஜினி பேசினாரே... கருணாநிதி - ஜெயலலிதா இருவருடனான ரஜினியின் நட்புச் சமநிலையை ஜெயலலிதா ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டாரா?''
''இதனால், ஜெயலலிதாவுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது. ஜெயலலிதா அதை எப்படி எடுத்துக்கொண்டார் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், முதல்வரை மேடையில் வைத்துக்கொண்டு, 'கலைஞரின் இன்றைய புகழ் காலத்துக்கும் நீடிக்கும்’ என்று ரஜினி பேசியது கலைஞரை அவர் விமர்சனம் செய்ததுபோலத்தான் இருந்தது. கலைஞருக்கு ஏராளமான 'புகழ்' இருக்கிறது. குடும்ப ஆட்சி நடத்தினார் என்ற 'புகழ்' இருக்கிறது. குடும்பத்துக்குத் தமிழ்நாட்டையே தாரைவார்த்தார் என்ற 'புகழ்' இருக்கிறது. ஈழம் விஷயத்தில் கோமாளி நாடகம் நடத்தினார் என்ற 'புகழ்' இருக்கிறது. அலைக்கற்றை ஊழல் 'புகழ்' இருக்கிறது. இந்தப் 'புகழ்' எல்லாம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று ரஜினி கடுமையாக விமர்சித்தார் என்பதாகவே அவர் மேடையில் பேசியபோது எனக்குத் தோன்றியது. நல்ல வேளை ரஜினி கலைஞரோடு நிறுத்திக்கொண்டார். இன்னும் ஸ்டாலின் புகழ், அழகிரி புகழ், கனிமொழி புகழ் என்று வரிசையாகப் பட்டியலிட்டு இருந்தால்... அந்த மேடை யில் இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தியைப் புகழ நேரம் இல்லாமல் போயிருக்கும்.''
ஒரு விஷயத்தை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். கலைஞர் ஆட்சியின்போது நடந்த 'பெப்சி' விழாவில் அன்றைய முதல்வர் முன்பாக பேசிய ரஜினி, அதற்கு முன்பும் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பள்ளிக்கரணையில் 'பெப்சி' உறுப்பினர்களுகு நிலம் ஒதுக்கியதைக் குறிப்பிட்டுப் பேசினார். அதை 'பெப்சி' உறுப்பினர்கள் ஏற்காமல் போனது அவர்களுக்குத்தான் நஷ்டம் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார். 'டயமண்ட் போல விலை மதிப்புள்ள இடத்தைக் கோட்டை விட்டு விட்டீர்களே என்று ரஜினி சொன்னார். இதை கலைஞரை மேடையில் வைத்துக்கொண்டே பேசுகிறோமே என்றெல்லாம் ரஜினி தயங்கவில்லை. எப்போதுமே அவர் அப்ப்டித்தான்!"
''சரி, அ.தி.மு.க. ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?''
''நான் ஏற்கெனவே சொன்னதுதான்... கடந்த ஆட்சி சீர்குலைத்த நிர்வாகத்தைச் சீரமைக்கவே அவர்களுக்கு நாள் ஆகும்.''
''ஒரு வருடம் முடிந்துவிட்டதே...''
''அது ஒரு பெரிய காலகட்டம் இல்லை என்கிறேன்.''  
''நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது; அமைச்சர்கள் செயல்படவே இல்லை...''
''காவல் துறை சீரமைக்கப்பட்டு இருக்கிறது. மின்வெட்டுப் பிரச்னை யைச் சமாளிக்கிறார்கள். ஒரு பெரிய ஊழல் - கிரானைட் ஊழல் வெளிக்கொண்டுவரப்பட்டு இருக்கிறது. பலரிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. கல்வித் துறைக்குப் பெரிய கவனம் கொடுக்கிறார்கள். அமைச்சர்கள் செயல்படாமல் இவை எல்லாம் எப்படி நடக்கும்? சரியான திசையில்தான் இந்த அரசு போய்க்கொண்டு இருக்கிறது!''
''சரி... உங்கள் பார்வையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று தமிழக அமைச்சர்களைக் கூறுங்களேன் பார்ப்போம்?''
''பொதுவாக எந்த அமைச்சரவையைப் பற்றியும் அந்த மாதிரி குறிப்பிட்டு நான் பேசுவது இல்லை!''
''ஊழல் மீதான அரசின் நடவடிக்கைபற்றிக் குறிப்பிட்டீர்கள். அரசு உறுதியாகச் செயல்படுகிறது என்றால், கிரானைட் ஊழல் சம்பந்தப்பட்ட அத்தனை துறை அலுவலர்களையும் கூண்டோடு தூக்க வேண்டும்... இல்லையா?''
''இப்போதுதானே நடவடிக்கைகள் ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்திருந்து பாருங்கள்.''
''ஒரு பத்திரிகையாளராகச் சொல்லுங்கள்... முதல்வருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. அரசின் மீது சிறு விமர்சனம் என்றால்கூட வழக்குகள் பாய்கின்றன. இந்த அணுகுமுறை சரிதானா?''

''முதல்வரின் வேலை என்ன... எப்போதும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதா? முதல்வர் ஒன்றும் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லையே.பத்திரிகையாளர்களைத் தினமும் சந்திக்க. அப்புறம், நான் பத்திரிகையாளன் என்றால், நான் எழுதுவதற்கேற்ற பலன்களை நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நானே 'துக்ளக்’குக் காக எவ்வளவோ வழக்குகளைச் சந்தித்து இருக்கிறேன்.''
''எல்லாவற்றுக்கும் வக்காலத்து வாங்குகிறீர்கள்... அ.தி.மு.க-வின் கொள்கைப்பரப்புச் செயலாளர் அல்லது ஜெயலலிதாவின் மக்கள் தொடர்பு அலுவலர்போல...''
''அ.தி.மு.க-வின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்றோ, ஜெயலலிதாவின் புகழும் வெற்றிகளும் பாதிக்கப்பட வேண்டும் என்றோ நான் நினைக்கவில்லை. அப்படியிருக்க இந்த மாதிரி பதவிகளுக்கு நான் ஏன் ஆசைப்படப்போகிறேன்?''


No comments:

Post a Comment