மெகா ஊழல்களில் சிக்கித் தவிக்கும் மன்மோகன் அரசுக்கு மற்றொரு தலைவலியாக உருவாகி இருக்கிறது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு விவகாரம். இது எஸ்.சி., எஸ்.டி. தொடர்பான விஷயமென்பதால், அனைத்துக் கட்சிகளும் அரசுக்குக் கிடுக்கிப்பிடி போட, அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவருவதில் முனைப்பாக இருக்கிறது மத்திய அரசு. இந்த விவகாரத்தில் வோட்டு வங்கியைக் குறிவைத்து எதிர்க்கருத்து எதையும் சொல்லாமல் கோரஸாக குரல் கொடுக்கின்றன கட்சிகள்.
இப்போது இந்தப் பிரச்னை எப்படி உருவானது? உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியில் இருந்தபோது, மாநில அரசில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது. இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது இந்தச் சட்டமென்று அதை ரத்து செய்துவிட்டது உயர் நீதிமன்றம். உச்சநீதிமன்றமும் அதை ஓ.கே. சொல்லிவிட, பதறிப் போய்விட்டன அரசியல் கட்சிகள். ஒரு மாநில அரசின் சட்டம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது குறித்து, அரசியல் கட்சிகள் ஏன் கொந்தளிக்க வேண்டும்?
மத்திய அரசைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்பில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு 22.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. சுதந்திரம் பெற்று முதல் பத்து வருடங்கள்தான் என்று தொடங்கிய இந்த ஒதுக்கீடுச் சலுகை இன்றுவரை தொடர்கிறது. தவிர மத்திய அரசில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. கம்யூனல் ரோஸ்டர் என்ற பெயரில் அமல்படுத்தப்படும் இந்தச் சலுகை பிரிவு ஏ வில் உள்ள உயர் பதவிகளுக்குப் பொருந்தாது. மாநில அரசுகள் அரசியல் சூழல், வாக்குவங்கி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பிலும் பதவி உயர்விலும் ஒதுக்கீட்டுச் சலுகைகளை அமல்படுத்தி வருகின்றன. இப்போது உ.பி. அரசின் சட்டம், உச்ச நீதிமன்றத்தில் அடி வாங்கிய நிலையில், ஏற்கெனவே மத்திய-மாநில அரசுகளால் அமல்படுத்தப்படும் ‘பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு’ ஆபத்து வந்துவிடுமோ என்றுதான் கலங்கிப் போயிருக்கின்றன அரசியல் கட்சிகள். எனவேதான் அதைப் பாதுகாக்க அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவர போராடுகின்றன.
உ.பி. சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், பதவி உயர்வில் ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்த உரிய புள்ளிவிவரத்தை மாநில அரசு தரவில்லை என்று காரணம் சொல்லியிருக்கிறது. அது தவிர அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமத்துவக் கொள்கைக்கு எதிரானது என்றும் சொல்லியிருக்கிறது. அரசியல் சட்டம் 16 (4) வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குகிறது. பிரிவு 16 (4) ஏ அரசியல் சட்டத் திருத்தம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குகிறது. இப்போது எழுந்துள்ள சூழ்நிலை காரணமாக 16 (4) ஏ சட்டப் பிரிவு உச்ச நீதிமன்றத்தால் அடிவாங்கிவிடுமோ என்று பயப்படுகிறார்கள் அரசியல் தலைவர்கள்.‘இந்த விஷயத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் மத்திய அரசின் அட்வகேட் ஜெனரல் வாஹனாவதி. இது தொடர்பாக எந்தச் சட்டத் திருத்தம் செய்தாலும் அது கட்டாயம் நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். அப்போது வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் உச்சவரம்பு நிர்ணயித்தது போலவே பதவி உயர்வு இட ஒதுக்கீட்டிலும் பல புதிய வழிகாட்டுதல்கள், அல்லது அந்தச் சட்டத் திருத்தமே முழுமையாக ரத்தே செய்யப்படக்கூடுமோ என்று பயப்படுகின்றன கட்சிகள். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது தகுதி, திறமைக்கு எதிரானது என்ற வாதமும் இருக்கிறது.
இப்போது கொடுக்கப்படும் பதவி உயர்வுகளின் அடிப்படையில் பார்த்தால் கூட மனித ஆற்றல் பயன்படுத்தப்படும் அளவீட்டின் தரவரிசையில் இந்தியா 127வது இடத்தில்தான் இருக்கிறது. தகுதி, திறமை எங்கே போயிற்று? இது தவிர, மத்திய அரசின் 93 செயலாளர்களில், ஒருவர் கூட தலித் கிடையாது. இது ஏற்றத்தாழ்வு இல்லையா?" என்று கேட்கிறார்கள் இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள். அதேசமயம், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சலுகை என்பது பணியாளர்களிடையே விரக்தியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றன என்பது இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் வாதம். எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். இதுவே, மன்மோகன் அரசுக்கு உள்ள குழப்பத்துக்குக் காரணம்.
No comments:
Post a Comment