செம்மண் படிந்த புழுதிக்காட்டில் சிதறிக் கிடக்கின்றன, பிணங்கள். அதில், தங்கள் சொந்தங்கள் யாரேனும் இருக்கிறார் களா என்று கண்ணீரோடு தேடிப்பார்க்கும் மக்களைப் பார்த்தாலே, இதயம் வெடிக்கிறது.தீபாவளிக்கு முன்பே தீ தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கி விட்டது! |
சிவகாசிக்குப் பட்டாசு ஆலை விபத்து என்பது புதிதல்ல. ஆனால், இப்போது நடந்த விபத்தில் வேடிக்கை பார்க்கப் போனவர்களும், உறவினர் களைக் காப்பாற்றச் சென்றவர்களும் கொடூரமான முறையில் பலியாகி இருப்பதுதான் வேதனை. முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலை தீ விபத்தில் இதுவரை 38 பேர் பலியாகி இருப்பதாகச் சொல்கிறது அரசு. 35 பேர் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். அதில் பலருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
பட்டாசு ஆலை விபத்தில் ஏற்படும் உயிர்ப்பலி களின் பின்னணியில் பட்டாசு ஆலை அதிபர்களின் விதிமுறை மீறல்களும், அதிகாரிகள் மத்தியில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யமும்தான் பல் இளிக்கிறது.
லைசென்ஸ் தில்லுமுல்லு!
பட்டாசுத் தொழிற்சாலை தொடங்கு வதற்கு முதலில் தனித்தனி அறைகள் கட்டி பிளான் அப்ரூவல் வாங்கி... லோக்கல் போலீஸ், தீயணைப்புத் துறை ஆகியோரிடம் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற்று, டி.ஆர்.ஓ-விடம் விண்ணப்பிக்க வேண் டும். ஆர்.டி.ஓ., தாசில் தார் மூலம் அந்தப் பட்டாசுத் தொழிற்சாலையைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் இருக்கிறதா, பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று விசாரித்து அந்த தொழிற்சாலைக்கு, பட்டாசு தயாரிப்பதற்கு தேவையான 15 கிலோ வரை சல்ஃபர் வேதிப்பொருள் வழங்குவதற்கு டி.ஆர்.ஓ. அனுமதி வழங்குவார். இதை வைத்து சீனி வெடி, குருவி வெடி போன்ற சின்ன ஐட்டங்கள்தான் தயாரிக்க முடியும். 200 கிலோ முதல் 5 ஆயிரம் கிலோ வரை பட்டாசு மூலப்பொருள்கள் வழங்கும் அதிகாரம் மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்குதான் உண்டு. நாக்பூரில் உள்ள முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் சென்னையில் உள்ள இணை முதன்மை வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர்தான் அதை வழங்கும் அதிகாரிகள். டி.ஆர்.ஓ. வழங்கும் தடையில்லாச் சான்றிதழை அடிப்படையாக வைத்துத்தான் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்குகிறது. எனவே, டி.ஆர்.ஓ-வின் என்.ஓ.சி. பெற பல ஆயிரங்கள் கைமாறுகிறது. வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் தான் லைசென்ஸ் வழங்க முடியும் என்பதால், அங்கும் லட்சக்கணக்கில் அள்ளி இறைக்கப்படுகிறது.
பட்டாசுத் தொழிற்சாலைக்குள் கல் கிடங்கு...
வருவாய்த் துறை மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் ஆய்வு எந்த லட்ச ணத்தில் இருக்கிறது என்பதற்கு 38 பேரை பலிகொண்ட ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலை மிக முக்கிய உதாரணம். விருதுநகர் அ.தி.மு.க. கவுன்சிலர் முருகேசன், சிவகாசி அருகே முதலிப்பட்டியில் கல் உடைக்கும் கிரஷர் தொழிற்சாலையை ஆரம்பித்தார். ஆழமான பெரிய பள்ளம் தோண்டி அதில் இருந்து கற்கள் உடைத்து விற்றுள்ளார். கிரஷர் பிசினஸ் டல் அடிக்கவும் 10 ஆண்டுகளுக்கு முன், கல் குவாரியிலேயே சின்னச் சின்னதாக 45 அறைகள் கட்டி, அதைப் பட்டாசுத் தொழிற்சாலையாக மாற்றி உள்ளார். ஆனால், ஏற்கெனவே தோண்டிய கல் குவாரியை மூடவில்லை. இன்னும் அதள பாதாளத்தில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. வெடி விபத்தில் தப்பி ஓடிய பலர் பதட்டத்தில் இந்தக் கல் கிடங்கில் விழுந்திருந்தால், நீரில் முழ்கி 500-க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பார்கள்.
வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைதான் டாப்!
பட்டாசுத் தொழிற்சாலைக்கு லைசென்ஸ் வழங்குவது, புதுப்பிப்பது எல்லாம் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை கையில்தான். பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்பட்டால், படைக்கல சட்டம் விதிகள் பிரிவு 17(3)ன்படி மறுஉத்தரவு வரும் வரை பட்டாசு தயாரிக்கக் கூடாது. தொழிற்சாலையின் உற்பத்தி லைசென்ஸ்சை வருவாய்த் துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து விடுவார்கள். விபத்து பற்றி டி.ஆர்.ஓ. தலைமையில் தொழிற்சாலை ஆய்வாளர், போலீஸ் மற்றும் டாக்டர்கள் விசாரணை நடத்துவார்கள். பெரும்பாலும் தொழிலாளர்களின் அஜாக்கிரதையால்தான் விபத்து ஏற்பட்டது என்ற ரீதியில் அறிக்கை தயாரிக்கப்படும். இதை அடிப்படையாக வைத்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை மீண்டும் அதே தொழிற்சாலைக்கு லைசென்ஸ் வழங்கும். இதில் கொடுமை என்னவென்றால், வெடிவிபத்து நடந்த 20 நாட்களுக்குள் அந்தப் பட்டாசுத் தொழிற்சாலைக்கு மீண்டும் லைசென்ஸ் கிடைத்து விடும். உண்மையில் விபத்து எப்படி நடந்தது, டி.ஆர்.ஓ. அறிக்கை உண்மைதானா என்பதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்பட மாட்டார்கள். பணம் வருகிறது என்பதால் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் மிகவும் சுலபமாக மீண்டும் லைசென்ஸ் வழங்கி விடுவார்கள். அதனால், பட்டாசுத் தொழிற் சாலை நடத்துபவர்கள், வருவாய்த் துறையினரை விட வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறைக்குத்தான் அதிகம் வாரி இறைப்பார்கள். சிவகாசியில் கடந்த 10 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. லைசென்ஸ் வழங்குவது, ரத்து செய்யும் அதிகாரத்தை வைத்துள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் இதுவரை ஒரு விபத்து சம்பவம் பற்றி கூட விசாரணை நடத்தவில்லை!
செய்யக் கூடாதவை!
பட்டாசுத் தயாரிப்பில் பொட்டாஷியம் குளோரைடு பயன்படுத்தக் கூடாது. இடி, மின்னல் ஏற்படும்போது பட்டாசுகள் தயாரிக்கக் கூடாது. பீடி, சிகரெட், தீப்பெட்டி, செல்போன், ரேடியோ போன்றவற்றைத் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. தொழிலாளர்கள் பருத்தி ஆடைதான் அணிய வேண்டும் என்று பல நிபந்தனைகள் இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் வெறும் சம்பிரதாய அறிவிப்புதான். பெரும்பாலும் யாரும் அவற்றைப் பின்பற்றுவதில்லை.
குடோன் மற்றும் சேமிப்புக் கிடங்கு...
பட்டாசுத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வெடிபொருட்களை சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பான முறையில் வைக்க வேண்டும் என்று அரசு விதிமுறை சொல்கிறது. ஆனால், பல பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் சுற்றி இருக்கும் 2 கி.மீ. து£ரம் காலியாகி விடும். அதுபோல், பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயனங்களை வைத்திருக்கும் அறையும் ரொம்ப முக்கியமானது. அங்கு விபத்து ஏற்பட்டாலும் ஆபத்துதான். ஆனால், சிவகாசியில் இருக்கும் பல பட்டாசுத் தொழிற்சாலை விபத்துக்களில் சேமிப்புக் கிடங்கு மற்றும் குடோன்களுக்கு தீ பரவி வெடித்து, அதில் பலியானவர்களின் எண்ணிக்கைத்தான் அதிகம். ஓம் சக்தி பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில், கெமிக்கல் ரூமில் தீ பரவி அது வெடித்ததால்தான் 38 பேர் பலியானார்கள்!
திசை மாறும் பட்டாசு தொழிற்சாலைகள்!
சிவகாசியைப் பொறுத்தவரை பெரிய பெரிய பட்டாசு நிறுவனங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகின்றன. இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டாலும் பெரியஅளவில் உயிர்ச்சேதம் ஏற்படுவதில்லை. ஆனால், புதிதாக பட்டாசுத் தொழிற்சாலைகள் திடீர் திடீரென ஏராளமாக முளைக்கின்றன. பெரிய பட்டாசு நிறுவனங்களில் பணிபுரிந்த சிலர், அந்த அனுபவத்தைக் கொண்டு சின்ன அளவில் பட்டாசுத் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கின்றனர். ஆனால், பாதுகாப்பு முறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை.
இதில் இன்னொரு விஷயம்... பெரிய பட்டாசு நிறுவனங்கள் சீனி வெடி, லட்சுமி வெடி போன்றவைகளுக்குத் தேவையான திரியை அவர்களே தயாரிப்பார்கள். ஆனால், சின்ன ஆலைகள் பட்ஜெட் எகிறும் என்பதால் அவற்றை வெளியே கொடுத்து வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகளை வைத்துத் தயாரித்து வாங்குகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் தயாராகும் இந்தப் பட்டாசு திரிகள் மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு பல குழந்தைகள், பெண்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு கூட அனுமதி இன்றி தயாரித்த பட்டாசுத் திரியை பறிமுதல் செய்த சிவகாசி ஆர்.டி.ஓ. கொம்பையன் தலைமையிலான அதிகாரிகள் அவற்றை அழிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் உட்பட 10 பேர் பலியானார்கள்.
சிறு தொழிற்சாலைகளைப் பார்த்து இப்போது பெரிய பட்டாசு நிறுவனங்களும் திரி தயாரிப்பு வேலைகளை வெளியே கொடுக்கின்றனர். திரி மருந்து தயாரிப்பிலும் அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை உட்பட சில இடங்களில் பலர் பலியாகி வருகின்றனர். ஆனால், இவை சாதாரண விபத்துக்களாக அமுக்கப்பட்டு விடுகிறது.
பரவி வரும் குத்தகை கலாசாரம்!
சிவகாசியைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றும் அலுவலர்கள் ஒரு கட்டத்தில் தாங்களும் தொழிலதிபர்கள் ஆக வேண்டும் என்ற கனவில் ஏற்கெனவே உள்ள சிறு பட்டாசு ஆலைகளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குத்தகைக்கு எடுக்கின்றனர். பெரிய நிறுவனங்களுக்குப் போட்டியாக பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்ற அவசரத்தில், அதிக அளவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி ராத்திரி பகலாக பட்டாசுகளைத் தயாரிக்கின்றனர். ஒரு ரூமில் 4 பேர்தான் வேலை செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சீக்கிரம் வேலையை முடிப்பதற்காக அதிக ஆட்களை வைத்து வேலை வாங்குகின்றனர். ஆபத்தான வேலைகளைச் செய்யும்போது சிறு தவறு ஏற்பட்டாலும் விபத்து ஏற்பட்டு ஒட்டுமொத்தமாக பலர் உயிர் இழக்க நேரிடும். பட்டாசு ஆலைகளைக் குத்தகைக்கு விடக்கூடாது, குத்தகைத் தொழிலாளர்களை பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடுத்தக்கூடாது என்பது அரசு விதிமுறை. ஆனால், ஓம்சக்தி பட்டாசு ஆலையின் உரிமையாளர் முருகேசனிடம் இருந்து சிவகாசியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்துத்தான் நடத்தி வந்திருக்கிறார். அதிக அளவில் குத்தகைத் தொழிலாளர்களை வைத்து ராத்திரி பகலாக வேலை வாங்கி இருக்கிறார். விபத்து நடந்தபோது குத்தகைத் தொழிலாளர்கள் செய்த சின்ன தவறுதான் அங்கு தீ விபத்து ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது!
ஆலை அதிபர் எஸ்கேப்... போர்மென் பலிகடா!
பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக படைக்கலச் சட்டப்பிரிவு 9 (11)ன் கீழ் பட்டாசு ஆலையின் ஃபோர்மென், மேனேஜர் ஆகியோர் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டதாகச் சொல்லி ஜாமீனில் வரக்கூடிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வார்கள். பட்டாசு ஆலையின் உரிமையாளர் மீதோ அவர்களுடைய பார்ட்னர்கள் மீதோ எந்த வழக்கும் பாயாது. காரணம்... காவல் துறையினர் அவர்கள் மீது காட்டும் கரிசனம்தான். இதுபோன்ற சம்பவங்களில் ஆலை உரிமையாளர்கள் மற்றும் லைசென்ஸ் வழங்கிய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிய சட்டத்தில் இடம் இருக்கிறது. ஆனால் அது எல்லாம் நடப்பதில்லை. ஃபோர்மேன், மேனேஜர் மீது பெயருக்கு சின்ன கேஸ் போட்டுவிட்டு, பட்டாசு ஆலை உரிமையாளர்களை போலீஸார் தப்பிக்க விடுவார்கள்.
இப்போது நடைபெற்ற விபத்தில் ஆலை உரிமை யாளர் முருகேசன், குத்தகைக்கு எடுத்த பால்பாண்டி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதுவும் ஜாமீனில் வெளிவரக்கூடிய செக்ஷன்களில் என்பதையே ஏரியாவாசிகள் ஆச்சர்யமாகப் பேசிக்கொள்கிறார்கள்!
கண்டுகொள்ளப்படாத கலெக்டரின் அறிக்கை!
விருதுநகரின் முந்தைய கலெக்டர் பாலாஜி, பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு விதிமுறை மீறல்கள் தொடர்பாக தனி டீம் வைத்து அதிரடி ரெய்டு நடத்தினார். அப்போது 172 பட்டாசு ஆலைகள் விதிமுறைகள், பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது தெரியவந்தது. உடனே அந்த ஆலைகளின் லைசென்ஸை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் சாத்தூரில் உள்ள ஒரு பட்டாசு ஆலையும் அடக்கம். ஆனால், கொஞ்ச நாளில் அந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியானார்கள். லைசென்ஸ் ரத்து ஆன ஆலையில் வெடி விபத்தா என்று அதிர்ச்சி அடைந்த கலெக்டர் பாலாஜி விசாரணையில் இறங்கியபோதுதான், பட்டாசு ஆலை நிர்வாகத்தினர் சத்தம் இல்லாமல் நாக்பூரில் வெடிமருந்துக் கட்டுப்பாட்டுத் துறையிடம் மீண்டும் லைசென்ஸ் பெற்றது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த கலெக்டர் பாலாஜி, அரசுக்கு ஒரு விரிவான அறிக்கையை அனுப்பினார். விபத்து நடந்த தொழிற்சாலைக்கு மீண்டும் லைசென்ஸ் வழங்கும் முன்பு, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு செய்வதோடு, மாவட்ட கலெக்டரின் அனுமதியையும் பெற வேண்டும் என்றது அந்த அறிக்கை. அந்த அறிக்கை கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் தொழிற்சாலையின் லைசென்ஸ் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த லிஸ்ட்டில் இடம் பெற்றிருந்தது. வழக்கம்போல், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மீண்டும் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். அப்படிப் பாதுகாப்பற்ற முறையில் இயங்கிய இந்த ஆலைதான் இப்போது 38 பேரைக் காவு வாங்கியிருக்கிறது!
விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட வந்திருந்த வருவாய்த் துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்குப் பாதுகாப்புக் குறைபாடுகளும், தொழிலாளர்களின் அஜாக்கிரதையும்தான் முக்கியக் காரணம். கார், பஸ் போன்ற வாகனங்களை இயக்குவதற்கு டிரைவிங் லைசென்ஸ் தகுதியாக கருதப்படுகிறது. அதுபோல், பட்டாசுத் தொழி லாளர்களுக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்பு உணர்வும் பயிற்சியும் வழங்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் சிக்கியவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிப்பதற்கு வசதியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை. வெளியூரில் இருந்துதான் வரவழைக்க வேண்டி இருக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரிக்கிறது. எனவே, சிவகாசி பகுதியில் கூடுதல் ஆம்புலன்ஸ் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசியில் 100 ஆண்டுகளாக நடந்து வரும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கவும், விபத்தைத் தடுக்கும் வகையிலும் ஒரு விரிவான சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது'' என்றார்.
இந்தக் கொடூர மரணங்களைப் பார்க்கும் போது, பட்டாசு என்பதையே பரிசீலனை செய்ய வேண்டும்!
No comments:
Post a Comment