கல் கடத்தல் வழக்கில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பொன்முடி, மணல் மேட்ட ரில் மாட்டிக்கொண்டார்!
கடந்த 23-ம் தேதி காலை 9 மணிக்கு, பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரை போலீஸ் தனது வளையத்தில் கொண்டு வந்ததுமே விழுப்புரத்தில் விறுவிறு திருப்பங்கள். வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் முறைகேடு செய்தாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஜெயச்சந்திரனி டம் நடத்திய விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளருமான பொன்முடி, அவருடைய மகன் பொன்.கௌதம சிகாமணி, அவருடைய மைத்துனர் ராஜமகேந்திரன் மற்றும் சதானந்தம் ஆகியோர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.
பூத்துறை கிராமத்தினர் சிலரிடம் பேசினோம். ''இந்தப் பகுதியில சுமார் 25 ஏக்கர் இடம் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு இருக்கிறது. இதே இடத்தில் பள்ளியந்தூர் ஜெயச்சந்திரனுக்கும் இடம் இருக்கிறது. இவர், பொன்முடிக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கமானவர். பொன்முடி கனிம வள அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கௌதம சிகாமணிக்குக் குவாரி நடத்த அனுமதி வழங்கினார். செம்மண் எடுப்பதற்காக 15.10.2007 முதல் 14.10.2010 வரைதான் அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், ஜெயச்சந்திரனும் கௌதம சிகாமணியும் கடந்த தி.மு.க. ஆட்சி முழுவதும் செம்மண் எடுத்தனர். அதன்பிறகு, அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகும், செம்மண் எடுப்பதைத் தொடர்ந்தனர்.
இந்தப் பணியில் கௌதம சிகாமணியோ, ஜெயச் சந்திரனோ நேரடியாகத் தலையிடுவது கிடையாது. புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில் அமுதா எர்த் மூவர்ஸ் மற்றும் அமுதா டிராவல்ஸ் நடத்திவரும், சதானந்தம் என்பவருடையவண்டியில்தான் செம்மண் ஏற்றிச் செல்வார்கள். ஒரு இடத்தில் மட்டும் மணல் எடுக்க அனுமதி வாங்கியவர்கள், மூன்று இடங்களில் எடுத்தனர். 20 அடி மணல்தான் எடுக்க வேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால், இவர்கள் 90 அடி வரை மணல் எடுத்து இருக்கிறார்கள். இந்தநிலையில்தான் தாசில்தார் தலைமையில் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத் துள்ளனர்'' என்றார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ''வானூர் தாசில்தார் குமாரபாலன் கொடுத்த புகாரின் பேரில், மணல் குவாரியில் நடந்த முறைகேடு சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். இந்த வழக்கில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததற்காக பொன்முடியை முதல் குற்றவாளியாகவும், மணல் குவாரி முறைகேட்டுக்காக கௌதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் மற்றும் சிலரைக் குற்றவாளிகளாகவும் சேர்த்து இருக்கிறோம். ஜெயச்சந்திரனை விசாரணைக்காக அழைத்தோம். மற் றவர்களை மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகிறோம்'' என்றார்.
பொன்முடிக்கு நெருக்கமான வட்டாரத்தினரோ, ''அ.தி.மு.க. அரசு ஒரு பொய்யான வழக்கை ஜோடித்து இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பொன்முடி தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் சென்று எஸ்.பி-யைச் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். வழக்கு போடப்பட்ட தகவல் தெரிந்ததும் எங்கள் மாவட்டச் செயலாளர் கைதாவதற்காகக் கிளம்பி வந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே வர முடியாத செக்ஷன்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தக வல்கள் கிடைத்ததால், முன்ஜாமீன் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்'' என்றார்கள்.
''இதற்குமுன், விழுப்புரம் மாவட்ட ஆர்.டி.ஓ-வாக இருந்த பிரியா, இந்த மணல் குவாரி சம்பந்தமாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அப்போது, பொன்முடி தரப்பில் இருந்து அவருக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்ததாம். இதனால், அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. இப்போது, உயர் அதிகாரிகள் மாறிவிட்ட நிலையில், மீண்டும் அதைத் தூசிதட்டி எடுத்து இருக்கின்றனர். கடந்த ஆட்சியின்போது, தாசில்தார் குமாரபாலன் வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது, அவரை வேண்டும் என்றே மூன்று இடங்களுக்கு மாற்றினார்கள். அதற்குக் காரணமாக இருந்தவர் பொன்முடிதான். அதனால், அதற்குப் பழிவாங்கும் விதமாக, வசமாக ஆப்பு வைத்திருக்கிறார். இதில் இருந்து பொன்முடி தப்பிக்க முடியாது'' என்று கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பேசிக் கொள்கின்றனர்.
வேறு சில குவாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாகவும் பொன்முடி மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயலாம்!
No comments:
Post a Comment