கடந்த வாரம், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்க்க, பெரியகுளத்தில் உள்ள அவருடைய வீட்டில் கட்சிப் பிரமுகர்கள் வரவேற்பறையில் காத்திருந்தனர். காலை நேரம் என்பதால், நல்ல கூட்டம். தேனி நக ராட்சி சேர்மனும், அ.தி.மு.க. நகரச் செயலாளருமான முருகேசன் தன் னுடைய ஆதரவா ளர்களுடன் அமைச்சர் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது, அவர் உட்காருவதற்கு நாற்காலி எதுவும் காலியாக இல்லை.
அப்போது, அங்கே உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் சேர்மனுக்கு வணக்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால், மாணவர் அணி முன்னாள் செயலாளர் விஜய ராமசாமி மட்டும் முருகேசனைக் கண்டுகொள்ளவில்லையாம். உடனே முருகேசன், 'தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்த உனக்கு இவ்வளவு திமிரா?’ என்று சொல்லி திட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு விஜய ராமசாமி, 'நீங்க மட்டும் என்னவாம்? போன தி.மு.க. ஆட்சியில் என்னோட சொந்தக்காரர்னு சொல்லிக்கிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் சுற்ற வில்லையா? அவரை வைத்து வசதி ஆகவில்லையா?’ என்று டென்ஷன் ஆகியிருக்கிறார்.
ஆத்திரம் அடைந்த முருகேசன், பதிலுக்கு ஏக வசனத்தில் திட்டியபடி விஜய ராமசாமியைத் தாக்கவும்... குபுகுபுவென ரத்தம் கொட்டியது. சத்தம் கேட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம், 'இதுவரைக்கும் பொதுஇடத்தில்தான் சண்டை போட்டீங்க... இப்போ என் வீட்டுக்குள்ளேயே இப்படிப் பண்றீங்களே... உங்களுக்குனு பொறுப்பு இருக்கு. பார்த்து நடந்துக்கோங்க’ என்று, முருகேசனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். இது, பெரியகுளம் வட்டாரத்தில் பெரிய பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. பிரமுகர்கள், ''விஜய ராமசாமி விஷயம்மட்டுமில்லீங்க. போன வாரம் 22-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் அய்யாசாமியை நடுரோட்டில் வைச்சு முருகேசன் அடிச்சுட்டார். அதுக்கு முந்தின வாரம் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் காந்திராஜனைப் பொளந்துட்டார்'' என்று புள்ளி விவரம் வாசிக்கிறார்கள்.
அடிவாங்கியதாகச் சொல்லப்படும் மற்றவர்கள் பேசமறுத்த நிலையில், காந்திராஜன் மட்டும் பேசினார். ''நான் 1970-ம் ஆண்டு முதல் இருந்து கட்சிப்பணி ஆற்றி வருகிறேன். இப்போது, எம்.ஜி.ஆர். மன்ற நகரத் துணைச் செயலாளராக இருக்கிறேன்.
கடந்த மாதம் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஈஸ்வரன் இறந்த பிறகு, அவருடைய இடம் காலியானதால் அமைச்சரிடம் அந்தப் பதவியைக் கேட்டேன். அவர், 'அப்புறம் பார்க்கலாம்’ என்று சொல்லி விட்டார். இது முருகேசனுக்குத் தெரிய வர, அரசு சுற்றுலா மாளிகையில் கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் எல்லோர் முன்னிலையிலும், 'உனக்கெல்லாம் கட்சிப்பதவி தேவையா?’ என்று என்னுடைய சாதியைச் சொல்லித் திட்டி முகத்திலேயே குத்தினார். 'அடிங்கடா... அவனைக் கொல்லுங்கடா’ என்று முருகேசன் சொல்ல... அவருடைய ஆதரவாளர்களும் என்னைத் தாக்கினார்கள். அப்போதே இதுபற்றி அமைச்சரி டம் முறையிட்டேன். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
அவர் என்னை மட்டுமல்ல, தேனி மாவட்டச் செயலாளர் சிவக்குமாரையும் கேவலமாகப் பேசி அடிக்கப் பாய்ந்திருக்கிறார். இப்போது, தேனியில் புதிதாகக் கட்டப்படும் பிரபல ஜவுளிக் கடையில், அமைச்சர் பெயரைச் சொல்லி முறைகேடு செய்து இருக்கிறார். நகராட்சியில் அவசர அவசரமாகத் தீர்மானம் போட்டு விதிமுறையை மீறி, கட்டடம் கட்ட அனுமதி கொடுத்து இருக்கிறார். எதிர்க்கட்சி கவுன் சிலர் மூலம் நகராட்சியில் புகார் செய்யவைத்து, அந்தக் கட்டடத்தின் பக்கத்தில் இருக்கும் பொதுக்கழிவறையை அகற்றி இருக்கிறார். மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார், ரியல் எஸ்டேட் என்று எல்லாவற்றிலும் தலையிட்டு அதிகாரம் செலுத்துகிறார். அதிகாரிகளை மிரட்டுவது, அடிப்பது என்று இவருடைய அடாவடித்தனங்கள் எல்லை மீறிப் போகின்றன. அமைச்சரிடம் புகார் சொல்லியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கொதித்தார்.
இதுகுறித்து, முருகேசனிடம் பேசியபோது, ''என்னைப் பத்தி தேவையில்லாம சிலர் புகார் கிளப்பி இருக்காங்க. அதெல்லாம் பொய். அமைச்சர் வீட்டில் என்ன நடந்த துன்னா, தி.மு.க-வுக்குப் போயிட்டு வந்ததால, விஜய ராமசாமிகிட்ட சின்ன சத்தம் போட்டேன். நான் எந்தக் கட்டடத்துக்கும் விதிமுறையை மீறி அனுமதி தரலை. அந்தக் கட்டடத்துக்கான அனுமதி தி.மு.க. ஆட்சிக் காலத்துல கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஈஸ்வரன் இறந்த மறுநாளே காந்திராஜன் அந்தப் பதவியைக் கேட்டதால, கருமாதி முடிஞ்சு பார்த்துக்கலாம்னு அவரைத் திட்டினேன். இப்ப எல்லார்கிட்டேயும் சமாதானம் ஆகிட்டோம்'' என்று அமைதியாகப் பதில் சொன்னார்.
இந்த விவகாரம் முடிவுக்கு வரும் முன்னரே, கூட்டுறவு அச்சக ஊழியர் சங்க ஊழியர்களை மிரட்டினாராம் முருகேசன். அதனால், கடுப்பான ஊழியர்கள் முருகேசனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
பன்னீர் பெயரைப் பழுதாக்காமல் விட மாட்டார் களோ?
No comments:
Post a Comment