ப.சிதம்பரத்துக்கான வேண்டுதல், கோயில் கோயிலாக நடக்கிறது!
ஏகாதச ருத்ர பூஜை கடந்த 24-ம் தேதி காலை, பிள்ளையார்பட்டியில் படுசிரத்தையுடன் நடந்து முடிந்திருக்கிறது. எதிரிகளை வீழ்த்தி, முடிவுகளை எடுக்கக்கூடிய முக்கியப் பதவியில் அமர்வதற்காக நடத்தப்படும் இந்த பூஜை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்காக நடத்தப்பட்டது என்று தெரியவரவே, விசாரித்தோம்.
கோயில்களுக்குப் போவதில் அவ்வளவாய் மெனக்கெடாதவர் ப.சிதம்பரம். சனிப்பெயர்ச்சி, சங்கட மான தருணங்களை உருவாக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னதால், குடும்பத்துடன் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலுக்குச் சென்று யாகம் நடத்தினார். அடுத்து, 2ஜி வழக்கில் சிதம்பரத்தை சிக்கவைக்க நாலா பக்கமும் சதிவலைகள் பின்னப்பட்ட நேரத்தில் திருப்பதிக்குச் சென்று வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்து விட்டு வந்தார். அதன்பிறகு, அவருக்கு ஏறுமுகம்தான். இந்த சூழலில்தான், சில நாட்களுக்கு முன், சிதம்பரத்தின் மானகிரி தோட் டத்தில் சிவாச்சாரியார்களை வைத்து பெரிய அளவில் யாகத்தை அவரது மகன் கார்த்தி நடத்தினார் என்றும் செய்திகள் கசிந்தன.
இதுகுறித்துப் பேசிய சிதம்பர விசுவாசிகள், ''செப்டம்பரில் அமைச்சரவை மாற்றம் வருகிறது. தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி பிரதமர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துவிடும்படி சோனி யாவிடம் கெஞ்சுகிறார் மன்மோகன் சிங். அவரது விருப்பம் ஏற்கப்பட்டால், பிரதமர் நாற்காலிக்கு இரண்டே பேர்தான் பொருத்தமானவர்கள். ஒருவர் சிதம்பரம், இன்னொருவர் ஏ.கே.அந்தோணி. அப்படி ஒரு காலம் கனிந்தால் அடுத்த வாய்ப்பு அப் பாவுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மகன் கார்த்தி இந்த யாகத்தை நடத்தினார்.
ஆனால், அந்த யாகத்துக்கு முன்னதாகவே பிள்ளையார்பட்டியில் ஏகாதச ருத்ர ஜெபத்தை நடத்தத் தொடங்கி விட்டார். இதற்கான பொறுப்பை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும் தனது விசுவாசியுமான கோட் டையூர் நெல்லியானிடம் ஒப்படைத்திருந்தார். ப.சிதம்பரத்தின் பிறந்த தேதி 16 என்பதால், 16 மாதங் களுக்குத் தொடர்ந்து இந்த ஏகாதச ருத்ர பூஜையை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களாம் ஜோதிடர்கள். ப.சிதம்பரத்தின் நட்சத்திரமான பூராட நட்சத்திரத்தில் இந்தப் பூஜையை நடத்த வேண்டும் என்பதும் ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்ததுதான்.
'ஏக’ என்றால் ஒன்று, 'தசம்’ என்றால் பத்து. அதனால், 11 கலசங்களை கோயில் கொடி மரத்தின் எதிரே வைத்து 11 சிவாச்சாரியார்கள் அமர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் இந்த கும்ப பூஜையைச் செய்தனர். அதன்பிறகு, பூஜையில் வைத்திருந்த புனிதநீரால், பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்தனர்.
பிள்ளையார்பட்டி பிள்ளையாரும் அங்கே இருக் கும் மருதீசரும் சக்தி வாய்ந்த சுவாமிகள். பிரணாப், ஜனாதிபதி தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்வ தற்கு முன், அவருடைய மகள் இங்கே வந்து சிறப்பு பூஜை செய்துவிட்டுப் போனார். அதனால்தான் அவங்க அப்பா ஜனாதிபதி தேர்தலில் அமோகமாக ஜெயித்தார்.
தலைவர் சிதம்பரத்துக்காக நாங்கள் கடந்த ஜூலை மாதமே, இந்த ஏகாதச ருத்ர பூஜையைத் தொடங்கினோம். அதன் பலனால்தான், 2ஜி வழக்கில் தலைவருக்கு எதிராக சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை, கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தலைவரும் நிதிஅமைச்சர் பதவிக்கு மறுபடியும் வந்து விட்டார். கடந்த மாதம் தலைவர் வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டார். இந்த பூஜை முடிஞ்சதும் ஆபரேஷன் முடிஞ்சு நலமாக வந்துட்டார். இப்போது, மூன்றாவது பூஜை நடந்திருக்கிறது, இதுக்கும் நிச்சயம் நல்ல பலன் இருக்கும். மத்திய அமைச்சரவை மாற்றம் வரப்போகிறது. மத்திய அரசில் முக்கிய இடத்தில் இருக்கும் எங்கள் தலைவர், பிரதமர் ஆக வேண்டும். அதுதான் எங்களோட ஆசை. அதை கற்பக விநாயகர் நிச்சயம் கைகூட்டிக் கொடுப்பார்'' என்றனர்.
சிவாச்சாரியார்கள் சிலரிடம் இந்த 'ஏகாதச ருத்ர’ பூஜையின் தாத்பரியம் குறித்துக் கேட்டதற்கு, ''இது சிவபெருமானுக்குச் செய்யும் பூஜை. பிள்ளையார்பட்டியில் மருதீசர் சந்நிதியும் பிள்ளையார் சந்நிதியும் ஒரே சந்திப்பில் இருப்பதால் அங்கே வைத்து செய்திருப்பார்கள் அல்லது பிள்ளையாருக்கு ஆவாகனம் செய்து பூஜையை நடத்தி இருக்கலாம். நினைத்த காரியம் தடை இல் லாமல் நடக்கவும் உடல் உபாதைகள் நீங்கவும் இந்த ஜெபத்தை நடத்துவது உண்டு'' என்று சொன்னார்கள்
பூஜை முடிந்து மாலையும் கழுத்துமாய் கோயிலைவிட்டு வெளியில் வந்த நெல்லியானிடம் இதுகுறித்துக் கேட்டோம். ''சாமிக்கு வேண்டுதல் வைத்து பூஜை செய்றோம். அதை விளம்பரப்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன்'' என்று நைஸாக நழுவினார்.
இந்த பூஜை குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் பேசுவதற்கு நாம் முயற்சி செய்தும், அவர் பேசுவதற்கு முன்வரவில்லை. இதுகுறித்து அவர் விளக்கம் சொன்னால் பிரசுரம் செய்வதற்குத் தயா ராகவே இருக்கிறோம்!
No comments:
Post a Comment