கிரானைட் சுரங்கங்களால் அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை பல்லாயிரம் கோடிகளில் கணக்குப் போடுகிறார்கள். ஆனால், விலையே வைக்க முடியாத வரலாற்றுச் சின்னங்களுக்கும் கிரானைட் சுரங்கங்கள் முடிவுரை எழுதி விட்டனர் என்று அதிர்ச்சி கிளப்புகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆராய்ச் சியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் வெ.வேதாசலம். இவர், மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் அலைந்து திரிந்து, தான் திரட்டிய தகவல்களை வைத்து 'எண்பெருங்குன்றம்’ என்ற நூலை 12 வருடங்களுக்கு முன் எழுதினார்.
''முன்பு, தென்பகுதியில் சமணத்தைப் பரப்ப வந்த முனிவர்கள், மதுரையைச் சுற்றியுள்ள மலைகளின் இயற்கைச்சூழல் பிடித்துப்போய் அங்கேயே தங்கினர். சமணம் போதித்த இந்த முனிவர்களுக்கு, மன்னர்களும் மக்கள் பிரதிநிதிகளும் மலைகளில் குடில்களை அமைத்து, பாறைகளில் படுக்கைகளை செதுக்கிக் கொடுத்து சேவகம் செய்தனர். இந்தப் பணிகளை யார் யார் செய்து கொடுத்தனர் என்பதைக் கல்வெட்டுக்களில் செதுக்கியும் வைத்தார்கள். இந்தக் கல்வெட்டுக்களில் இருக்கும் எழுத்துக்கள் அனைத்தும் தமிழ் பிராமி எழுத்துக்கள்.
இன்று, தமிழுக்குச் செம்மொழி மரியாதை கிடைத்து இருப்பதற்கு முக்கியக் காரணம் இதுபோன்ற தொன்மையான கல்வெட்டு ஆவணங்கள்தான். இந்தியாவில் இருக்கும் தொன்மையான கல்வெட்டுக்களில் மதுரையைச் சுற்றியுள்ள மலைகளில் இருக்கும் கல்வெட்டுக்கள்தான் மிகமுக்கியமானவை. ஆனால், இவற்றின் சிறப்பை அறியாத கிரானைட் சுரங்காதிபதிகள் இவற்றையும் சாதாரணக் கற்களாக நினைத்து அழித்துக்கொண்டு இருக்கின்றனர்.
மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் வழியில் உள்ள குன்னத்தூர் மலையில் கி.மு. 2-ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இந்த மலையில் உதயகிரீஸ்வரர், அஸ்தகிரீஸ்வரர் என்று இரண்டு குடைவரைக் கோயில்கள் இருக்கின்றன. இவை, 8-ம் நூற்றாண்டு கோயில்கள். இந்தக் கோயில்களும் அவை சார்ந்த மலையும் தொல்லியல்துறை வசம் இருக்கிறது. ஆனால், அதன் அருகிலேயே உள்ள குவாரியில் வெடி வைக்கின்றனர். அதனால், கோயில்களும் கல் வெட்டுக்களும் சிதிலமடைந்து வருகின்றன. திருவாதவூர் ஓவா மலையிலும் கி.மு. 2-ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இந்த மலையும் கிரானைட் தேடலுக்குத் தப்பவில்லை. கீழவளவு மலையில் சமணர் சிற்பங்களும், பஞ்ச பாண்டவர் படுக்கைகளும், தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் இருந்தன. இப்போது, அதையும் அழித்து விட்டனர்'' என்றார் வருத்தத்துடன்.
''எங்களால் வரலாற்றுச் சின்னங்களைத் தடுப்புகள் அமைத்துப் பாதுகாக்க முடியும். ஆனால், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் எங்களிடம் இல் லையே'' என்று விரக்தியைக் காட்டும் தொல்லியல் துறையினர், ''எங்கள் துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஏரியாவைச் சுற்றி 500 மீட்டர் சுற்றளவை, கோர் ஜோன், பஃபர் ஜோன், சென்ட்ரல் ஜோன் என்று மூன்று பிரிவாகப் பார்ப்போம். இதில் கோர் ஜோன் மிகவும் சென்சிட்டிவான ஏரியா. இதற்குள் எந்த விதமான கட்டுமானங்களையும் எழுப்ப முடியாது; வெளி ஆட்கள் யாரும் அத்துமீறி நுழையவும் முடியாது. பஃபர் ஜோன் பகுதியில் கட்டடங்களைப் புதுப்பிக்கலாம். மற்ற எந்த வேலையும் செய்ய முடியாது. சென்டர் ஜோனில் முறையான அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளைச் செய்யலாம். இதுதான் விதிமுறை.
மேலூர் பகுதியில் இந்த விதிமுறைகளை எல்லாம் மீறி தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே மலைகளை உடைக்கிறார்கள். கேட்டால், 'வரலாற்றுச் சின்னங்கள் இருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டரை விட்டுத்தான் மலையை உடைக்கிறோம்’னு கோர்ட்டிலேயே கூசாமல் சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் குவாரி லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பலமுறை, கலெக்டர் வரை புகார் கொடுத்து இருக்கிறோம். ஆனால், யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு கிரானைட் தொழில் அதிபர்கள் செல்வாக்குடன் இருக்கின்றனர்'' என்கிறார்கள்.
எஞ்சி இருக்கிற வரலாற்றுப் பொக்கிஷங்களையாவது அரசு காப்பாற்றுமா?
No comments:
Post a Comment