நாடாளுமன்றத்தில் வைகோ’ என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா சமீபத்திய பரபரப்பு. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் பழ.நெடுமாறன் புத்தகத்தை வெளியிட, தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் அணிவகுத்தனர்.
''நாங்கள் தேர்தலில் போட்டியிடாத இயக்கம் என்றாலும், தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தை விவாதமேடையாக ஆக்குபவர்களைத் தடுப்பது இல்லை. வைகோவின் இந்த உரைகளைப் படிக்கும் போது ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் குரலாக, ஓலமாக இவை இருக்கின்றன'' என்றார் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர் பெ.மணியரசன்.
அடுத்து பேசிய தியாகு ஒரு சம்பவத்தைச் சொன்னார். ''இந்திரா பிரதமராக இருந்தபோது அவருக்கு நாடாளுமன்றத்தில் சிம்மசொப்பனமாக இருந்தவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜோதிர்மயி பாசு. அவர்தான் வைகோவுக்கு வழிகாட்டி. அவரது இறப்பு, வைகோ வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை செயின் ஸ்மோக்கராக இருந்தவர் வைகோ. ஜோதிர்மயி பாசு இறந்து அவரது உடலை இவர்தான் எடுத்துச் சென்றார். பாசு முன்பு இவர் புகை பிடிப்பது இல்லை. இறந்துபோன உடலை எடுத்துச் சென்றபோதும் புகை பிடிப்பதைத் தவிர்த்தார். அதன்பிறகு, புகைப்பதையே நிறுத்தி விட்டார்'' என்று தியாகு சொன்னபோது அதை வைகோவும் ஆமோதித்தார்.
தமிழருவி மணியன், ''வைகோவை அதிகாரத்தில் உட்கார வைக்க, அரசியல் களத்தில் பலரை அப்புறப்படுத்த வேண்டும். முதலாவது, கலைஞர் கருணாநிதி. ஈழத்துக்குச் செய்த துரோகத்தால் அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கு யாரும் கஷ்டப்படத் தேவையே இல்லை. செய்யக்கூடாததைச் செய்து அவரே ஓய்வு பெறுவார். மூன்றாவது, விஜயகாந்த். கட்சி ஆரம்பித்ததில் இருந்து, 'ரேஷன்பொருள் வீடு தேடி வரும்’ என்பதைத் தவிர இதுவரை வேறு எதையும் அவருக்கு சொல்லத் தெரியவில்லை. இன்னொருவர் இருக்கிறார்... ஒரு நாள் பெரியாராகவும், இன்னொரு நாள் அம்பேத்கராகவும், அடுத்தநாள் மார்க்ஸாகவும் காட்சி தருகிறார். மதுக்கடைகளை பூட்டப்போகிறேன் என்கிறார். அவர் கூட்டம் நடத்தினால் சுற்றி உள்ள மதுக் கடைகளில்தான் விற்பனை அதிகரிக்கிறது. அவருக்குப் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவர் பெயர் ராமதாஸ். இத்தகைய தமிழ்நாட்டின் நிலைமையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது'' என்று மணியன் முடிக்கும்போது சிரிப்பும் கைதட்டலும் அதிகம் கிளம்பியது.
''வைகோ முதல்வர் ஆக வேண்டும் என்று நாங்கள் பேசினால் அடிப்பார். தமிழருவி மணியன் பேசி இருக்கிறார். வைகோவிடம் அடிவாங்காமல் தப்பித்தவர் இவர்தான்'' என்று நாஞ்சில் சம்பத் சொல்லி கலகலப்புக் கூட்டினார்!
No comments:
Post a Comment