Wednesday, September 26, 2012

'வீரப்பனைக் கொல்ல உதவினேன்... பலன் இல்லை!'' புலம்பும் சையத் ஷானவாஸ்


சில மரணங்கள், மீண்டும் மீண்டும் பேசப்படும் அளவுக்கு சர்ச்சை நிறைந் ததாக இருக்கும். சந்தனக் கடத்தல் வீரப்பன் மரணமும் அப்படித்தான். 'வீரப்பன் மரணத்துக்கு நான்தான் காரணமாக இருந்தேன். ஆனால், எனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை’ என்று அதிர்ச்சியைக் கிளப்புகிறார் சையத் ஷானவாஸ். 
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானவாஸை சந்தித்தோம். இவர் இப்போது, கோவை புறநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இளநிலைப் பணியாளராக இருக்கிறார்.
''நான் சின்ன வயதில் இருந்தே போலீஸில் சேர வேண்டும் என்ற ஆர் வத்துடன் இருந்தேன். 10-ம் வகுப்பை முடித்ததுமே எங்கள் பகுதியில் போலீஸ் நண்பனாக செயல்பட்டேன். அப்போது, உடுமலைப்பேட்டை எஸ்.ஐ-யாக இருந்த வின்சென்ட், வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக தமிழக சிறப்பு அதிரடிப் படைக்கு மாற்றப்பட்டார். நான் அவருடன் தொடர்பில் இருந்தேன்.
அந்த நேரத்தில் கோவை சிறையில் இருந்த வீரப்பனின் அண்ணன் மாதை யனைச் சந்திக்க, வீரப்பனின் உறவுக்காரரான கனகராஜ் என்பவர் வந்தார். அவர் சில வருடங்களுக்கு முன், அதிரடிப் படையால் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவர். அவரிடம் இருந்த ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், 'சிறையில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகள் மூலம் நமக்குத் தேவையான ஆயுதங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’ என்று, தன் அண்ணனுக்கு வீரப்பன் கூறி இருந்தான். அப்போது, அதிரடிப் படையின் எஸ்.பி-யாக இருந்த செந்தாமரைக்கண்ணன் கையில் அந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. உடனே அவர், நான்கு முஸ்லிம் இளைஞர்களைத் தீவிரவாதிகளாக நடிக்க வைத்து வீரப்பனிடம் அனுப்பி அவன் நடவடிக்கைளைக் கண்காணிக்கத் திட்டம் தீட்டினார்.
நான் வேலைக்காக எந்த ரிஸ்க்கும் எடுப்பேன் என்பதை வின்சென்ட் மூலம் தெரிந்துகொண்ட எஸ்.பி., என்னை அழைத்தார். என்னோடு கன்னியாகுமரியைச் சேர்ந்த அனஸ்கான், உபயத்துல்லா, உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஜியாவுல் ஹக் ஆகியோரைத் தேர்ந்து எடுத்தார். இதில், அனஸ்கான் அடிதடி வழக்குக்காகவும், உபயதுல்லா கொலை வழக்கு ஒன்றுக்காகவும் சிறையில் இருந்தவர்கள். எங்களுக்கு மூன்று மாதங்கள் ஆயுதப்பயிற்சி கொடுத்தனர். பயிற்சிகள் முடித்த பிறகு செந்தாமரைக்கண்ணனும், இன்னொரு உயர் அதிகாரியும் எங்களை அழைத்துப் பேசினார்கள். 'நீங்கள் நால்வரும் வீரப்பனிடம் போய் கொஞ்ச நாட்கள் இருக்க வேண்டும். அவனைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, பலவீனங்களை அறிந்து வரவேண்டும்’ என்றனர். பிறகு, என்னை  மட்டும் சென்னைக்கு அழைத்துச் சென்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம்  அறிமுகப்படுத்தினர். அவர், 'நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். வேலையை மட்டும் சரியாகச் செய்து முடித்தால் போதும். 50 லட்சம் ரூபாய் சன்மானமும் சப் இன்ஸ் பெக்டர் பதவியும் உங்களுக்குக் கிடைக்கும்’ என்று உறுதிஅளித்தார். போலீஸாக வேண்டும் என்ற வெறி யில் இருந்த எனக்கு அவருடைய வார்த்தை மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
அதன்பிறகு, வீரப்பனின் உறவுக்காரரான கனகராஜை அழைத்து வந்த செந்தாமரைக் கண்ணன், எங்கள் நால்வரையும் வீரப்பனிடம் போய் சேர்ப்பிக்குமாறு கூறினார். கனகராஜ் மறுத்தார். உடனே, அவருடைய மகனைப் பிணையாக வைத்துக்கொண்டு, 'எங்களை அழைத்துச் செல்லவில்லை என்றால், மகனைக் கொன்று விடுவோம்’ என்று மிரட்டிய பிறகே சம்மதித்தார்.
2003-ம் ஆண்டு நாங்கள் வீரப்பனிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். யாரையும் நம்பாத வீரப்பன், கனக ராஜ் அறிமுகப்படுத்தியதால்... எங்களை முழுமையாக நம்பினான். 20 நாட்கள் அவனுடன் தங்கியிருந்து, அவனுடைய அனைத்து நடவடிக்கைளையும் கண்காணித்தோம். வீரப்பனுக்குக் கொஞ்சம்கூட சந்தேகம் வராதபடி நடந்துகொண்டோம். அதன் பிறகு, வீரப்பனிடம் இருந்து வெளியே வந்து அவனுடைய திட்டங்களைப்பற்றி போலீஸாரிடம் கூறினோம்.
நாங்கள் சொன்ன தகவலை வைத்துத்தான் அப்போது சில முக்கியப் புள்ளிகளை அரசு பொடா சட்டத்தில் கைது செய்தது. அதன் பிறகு, நாங்கள் கூறிய தகவலை வைத்துத்தான் வீரப் பனை போலீஸார் கொன்றனர். வீரப்பனைப் பிடிக்கும் எங்கள் திட்டத்துக்கு, 'ஆபரேஷன் ககூன்’ (ஆபரேஷன் பட்டுக்கூடு) என்று பெயரிடப்பட்டு இருந்தது. 
வீரப்பனைக் கொன்ற பிறகு, அரசு நடத்திய விழாவில் உபயதுல்லாவுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபாயை முதல்வர் வழங்கினார். ஆனால், விஜயகுமார் சொன்னது போல எனக்கு 50 லட்ச ரூபாய் தரவில்லை, எஸ்.ஐ. வேலையும் தரவில்லை. எனக்கும் மற்றவர்களுக்கும் கிளர்க் வேலைதான் கிடைத்தது. கொஞ்சநாளில் எஸ்.ஐ. போஸ்டிங் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், ஏழு வருடங்கள் உருண்டோடி விட்டன.
இதுகுறித்து, முதல்வர்களாக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் மனு அனுப்பியும் எந்தப் பதிலும் இல்லை. இப்போதும் வீரப்பனின் கூட் டாளிகள் மூலம் எனக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. எனக்குக் கொடுத்த வாக்குறுதியை போலீஸ் அதிகாரிகள் மறந்து விட்டனர். இன்றைய முதல்வர்தான் எனக்குக் கருணைகாட்ட வேண்டும். என் உழைப்புக்கு அங்கீகாரம் தர வேண்டும்'' என்றார் உருக்கமாக.
இந்தவிவகாரம் குறித்து செந்தாமரைக் கண்ணனிடம் பேசினோம். ''நாங்கள் நால்வரை யும் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால், 50 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று எப்போதும் வாக்குறுதி கொடுக்கவில்லை. வேலை வாய்ப்புக்கு உறுதி கொடுத்திருந்தோம். அதை செய்து கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

No comments:

Post a Comment