Wednesday, September 26, 2012

பிணம் எரிந்துகொண்டு இருக்கும்போது மின்சாரம் கட். மீதி எரிவதற்கு கரன்ட் வருமா... வராதா?



கோடைக் காலம் கழிந்த பிறகும் மின்வெட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்ப​துடன் பவர் கட் நேரம் இன்னும் அதிகரிக்கவே தமிழகம் முழுவதும் தகிக்கிறது. சென்னை தவிர பிற மாவட்டங்கள் அனைத்திலும் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படவே, அரசுக்கு எதிராக உக்கிரமாக இருக்கிறார்கள் பொதுமக்கள்! 
கடந்த சில வருடங்களாகவே இந்தச் சிக்கல் இருந்து வந்தாலும், சமீபத்திய இரண்டு வாரங்களில் எகிறி நிற்கிறது மின்வெட்டு சாதனை.  இந்த விவகாரம் குறித்து கொதித்துப் பேசும் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவரான ஜேம்ஸ், ''தமிழ்நாட்டில் நான்கு வருடங்களாகவே மின் தட்டுப்பாடு பிரச்னை இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியில் கடும் மின்பற்றாக்குறை இருந்த சமயத்தில் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்தாங்க. மின்வெட்டு நேரங்களை இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம்னு திறமையா சமாளிச்சாங்க. இந்த அரசாங்கமோ, எத்தனை மணி நேரம் மின்வெட்டு ஆனாலும் பரவாயில்லை, வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது இல்லை என்று பிடிவாதமா இருக்கு.
தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு ஆர்டர் கொடுத் தால், பொருட்கள் சரியான நேரத்துக்கு சப்ளை ஆவது இல்லை என்ற காரணத்தால் குஜராத் மாதிரியான மாநிலங்களைப் பலரும் தேடிப்போக ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே, வங்கியிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் வாங்கிய கடன், இப்போ வட்டியோட சேர்த்து நெஞ்சை அடைக்குது. மொத்த ஆர்டரும் போயிடும் போல இருக்கு. அதனால், கண்ணுக்குத் தெரிய எதிர்காலமே இல்லைங்க'' என்கிறார் வேதனையோடு.
தனியார் மருத்துவமனைகளில் எல்லாம் ஜெனரேட்டர் வந்துவிட்டது. ஆனால், பல அரசு மருத்துவமனைகளில் ரொம்பவே அவதிப்படுகிறார்கள். பச்சிளங்குழந்தைகளும் தீக்காயம் பட்ட நோயாளிகளும் படும் வேதனை உச்சகட்டம். மாவட்ட அரசு மருத்துவமனைகளில், பிணங்கள் இருக்கும் ஃப்ரீஸர்களுக்கு மின்சப்ளை இல்லாததால் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. மின்மயானங்களில் ஒரு நாளைக்கு ஐந்து பிணங்கள் எரிந்த நிலை மாறி, இரண்டு என்றாகி விட்டது. மற்றவற்றை, கட்டை வைத்து எரிக்கத் தொடங்கி விட்டனர். ஒரு பிணம் எரிந்துகொண்டு இருக்கும்போது மின்சாரம் கட் ஆனால்... மீதி எரிவதற்கு கரன்ட் இப்ப வருமா... வராதா? இது கெட்ட சகுனமோ? என்று சோகத்துடன் கூடுதல் மன வருத்தப்படுகிறார்கள்.
சேலம் ஸ்டீல் ஃபர்னிச்சர் சங்கத்தின் செயலாளர் ஈசன் எழில் விழியன் நம்மிடம், '' இரண்டு மணிநேரம் கட் ஆனால் பவர் கட் என்று சொல்லலாம். ஆனால் இப்போது கரன்ட் சுத்தமாவே கிடையாதுங்கிறதுதான் உண்மை. ஒரு நாளைக்கு 14 மணி நேரம் பவர் கட் என்றால், எப்படித் தொழில் செய்ய முடியும்? வேலை ஆட்களுக்கு வேலையும் கொடுக்க முடியலை. அவங்களை சும்மா உட்கார வெச்சுக்கிட்டு சம்பளமும் கொடுக்க முடியலை. எப்போ கரன்ட் வரும்... போகும்னு யாருக்கும் தெரியலை. நெருக்கடிக் காலம்னு சொல்வாங்க இல்லையா... அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இப்போ தமிழகம் இருக்கு.
போன ஆட்சியில ஆற்காடு வீராசாமியை, 'பவர்கட்’ அமைச்சர்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இப்போ ஆற்காடு வீராசாமி எவ்வளவோ பரவாயில்லைனு சொல்ல வெச்சுட்டாங்க. இதில், ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு நல்ல முடிவு எடுக்கலைன்னா... கூடங்குளத்தில் மக்கள் பொங்கிய மாதிரி தமிழ்நாடு முழுக்கப் பொங்க ஆரம்பிச்சுடுவாங்க'' என்று வேதனையில் வெடித்தார்.
மதுரை, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்கள் வியர்வையில் கரைகின்றன. அனல் மின் நிலையத்தைத் தன் மடியில் வைத்திருக்கும் தூத்துக்குடியில் 12 மணி நேரம் பவர் கட் பாடாய்ப்படுத்துகிறது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கிணற்றுப் பாசனத்தை நம்பியிருக்கும் பல்லாயிரம் ஏக்கர் வாழைத் தோட்டங்கள் தண்ணீர் இல்லாமல் கருக ஆரம்பித்து விட்டது. தமிழகத்துக்கே சோறு போடும் டெல்டா விவசாயிகள், கருகும் பயிர்களைப் பார்த்து கண்ணீர் வடித்து நிற்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி அச்சுதன், ''மின் வெட்டுப் பிரச்னையால் மொத்தமாகவே விவசாயம் அழிஞ்சுபோச்சு. தினமும் கரென்ட்டை நிறுத்துறது இல்லாம, வாரத்துக்கு ஒருநாள் முழுசாவும் நிறுத்திக் கழுத்தறுக்குறாங்க. மின்வெட்டுப் பிரச்னையால், விவசாயிங்க நிலைமை பாதாளத்துக்குப் போயிருச்சு. இதோட விளைவு, உணவுப் பொருள் எல்லாத்துக்குமே கடுமையான தட்டுப்பாடு வரப்போகுது. ஆனா, இதைப்பத்திக் கொஞ்சமும் கவலைப்​​படாத அரசாங்கம், பன்னாட்டு கம்பெனிகளுக்கு மட்டும் தடையில்லா மின் சாரத்தை அள்ளி வழங்​குது. ஜென​ரேட்டர் வெச்சுத் தொழில் நடத்தும் அளவுக்குக் காசு வெச்​சிருக்கிறவங்களுக்கு கூடுதல் நேரம் பவர் கட் பண்ணிட்டு, எங்களை மாதிரி விவசாயம் செய்றவங்களுக்குக் கொடுத்தா என்னவாம்? பயிரைக் காயவிட்டு, பட் டினியில் மக்களை சாகடிச்​சுட்டு வெறும் காரையும் மொபைலையும் தயாரிச்சு என்ன புண்ணியம்?'' என்று கேட்கிறார் வேதனையுடன்.
என்னதான் தீர்வு என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் பேசினோம். ''கடுமையான மின்தடைக்குக் கடந்த தி.மு.க. அரசின் செயல்பாடுதான் காரணம். தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மின்சார உற்பத்திக்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறோம். டிசம்பர் மாத இறுதிக்குள் மின்தடை சீராகிவிடும். 2013-ம் ஆண்டு முதல் தமிழகம் மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுவிடும். அதன்பிறகு, மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இல்லை'' என்று நம்பிக்கையுடன் சொன்னார்.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளோ, ''காற்றாலைகளில் ஏற்ற இறக்கத்தோடு காற்று வீசுவதால், மின் உற்பத்தி மிகவும் குறைவாக இருக்கிறது. மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய மின்சாரத்தில் 1,000 மெகா வாட் குறைவாகத்தான் கிடைக்கிறது. அதோடு, தமிழகத்தில் இருக்கும் நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இல்லை என்பதால், தண்ணீரில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் தடைபட்டு இருக்கிறது. மின் கட்டமைப்பு மூலமாகக் கிடைக்கும் மின்சாரமும் வருவது இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரமும் ஒழுங்கு முறை ஆணையத்தின் சில கட்டுப்பாடுகளால் நமக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தக் குறை எல்லாம் இப்போதைக்கு சரியாகும் என்று நம்பிக்கையே இல்லை'' என்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி கிராமத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடு இருக்கிறது. அந்த வீட்டுக்கு அதிகத் திறன்கொண்ட ஜெனரேட்டர் ஒன்றை சில தினங்களுக்கு முன் பொருத்திவிட்டாராம் அமைச்சர்.
அமைச்சர் வாங்கலாம். ஆனால், அடித்தட்டு மக்கள்..?

No comments:

Post a Comment