Friday, September 7, 2012

எனது இந்தியா (கொல்லும் நீதி! ) - எஸ். ராமகிருஷ்ணன்....




அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் அநியாயங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பவன், பொய்க் குற்றம் சாட்டப்பட்டுக் குரூரமாகத் தண்டிக்கப்படுவான் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் அநீதி. இதற்கு, 1775-ல் வங்காளத்தில் நடந்த நந்தகுமார் வழக்கு சிறந்த உதாரணம். வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கு​கிறார் என்று, பர்த்வான் பகுதியின் நிர்வாக அதிகாரியாக இருந்த நந்தகுமார் தொடர்ந்த வழக்கு இந்திய நீதித் துறை வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம்.

கவர்னருக்கு எதிராக ஓர் நிர்வாக அதிகாரி நடத்திய இந்தப் போராட்டம், காலனிய ஆட்சி இங்​கிலாந்தின் சட்டங்களைக்கொண்டு இந்தியர்​களை எப்படி ஒடுக்கியது என்பதற்கான உதாரணம். இந்த வழக்கை அறிந்துகொள்வதற்கு முன், குற்றம் சாட்டப்பட்ட வாரன் ஹேஸ்டிங்கின் சுயசரிதை​யை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

1773-ம் ஆண்டு வங்காளத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் வாரன் ஹேஸ்டிங். இங்கிலாந்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வெஸ்ட் மினிஸ்டர் பள்ளியில் கல்வி கற்று தனது 18-வது வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியில் எழுத்தராக இந்தியாவுக்கு வேலைக்கு வந்தார். கல்கத்தாவில் உள்ள கம்பெனி அலுவலகத்தில் கப்பலில் ஏற்றப்படும் சரக்குகளை பதிவு செய்வதுதான் அவரது வேலை. இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட வாரன் ஹேஸ்டிங், கப்பலில் ஏற்றப்படும் பொருட்கள் முறையாகப் பரிசோதனை செய்யப்படுவது இல்லை, கம்பெனி அதிகாரிகள் தங்களது சொந்தச் சரக்குகளை இந்தக் கப்பலில் ஏற்றி அனுப்பி ரகசியமாகப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டார். அந்தக் குறுக்கு வழி, பணம் சம்பாதிக்கும் ஆசையை அவருக்கும் ஏற்படுத்தியது. கள்ள வணிகம் செய்துவந்த அதிகாரிகளின் விசுவாசத்துக்குரிய நபராகத் தன்னைக் காட்டிக்கொள்வது என்று முடிவு செய்தார். அதன் விளைவு... பதவி உயர்வு பெற்று காசிம் பஜாருக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

காசிம் பஜார், ஒரு முக்கிய வணிக மையம். அங்கே சாமர்த்தியமாக நடந்துகொண்டால் பெரிய வருவாயைப் பெறலாம் என்று வாரன் ஹேஸ்டிங் திட்டமிட்டார். அவரது முயற்சிகளுக்கு முக்கியத் தடையாக இருந்தது, அன்று வங்காளத்தில் இருந்த நவாப்களுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையில் நடந்த பனிப் போர். பிரிட்டிஷ் கம்பெனி, இந்தியாவில் வணிகம் செய்வதை நவாப்புகள் விரும்பவில்லை. ஆனால், நவாப் குடும்பத்துக்குள் பதவிச் சண்டை நடந்துகொண்டிருந்தது. இதைப் பயன்படுத்தி குளிர் காய்வது என்று வாரன் ஹேஸ்டிங் முடிவுசெய்தார்.

நவாப்பின் குடும்பத்துக்கு உள்ளேயே தனக்கு ஆதரவான ஆட்களைத் தேர்வு செய்தார். அவர்களை புதிய நவாப் ஆக்குவதாக பதவி ஆசை காட்டி, அரசியல் சூதாட்டத்தைத் தொடங்கினார் வாரன் ஹேஸ்டிங்.

இந்தச் சதியை அறிந்த சிராஜ் தௌலா என்ற நவாப், கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்று தனது படையுடன் சென்று அவர்களைத் தாக்கிக் கைது செய்து கல்கத்தாவின் இருட்டறை ஒன்றில் அடைத்தான். அப்படிக் கைது செய்யப்பட்டவர்களில் வாரன் ஹேஸ்டிங்கும் ஒருவர். தனது உயிருக்குப் பயந்து புல்டா என்ற தீவுக்கு ஓடிய வாரன் ஹேஸ்டிங், அங்கே தனது கம்பெனியில் பணியாற்றி கலவரத்தில் இறந்துபோன புகானின் என்பவரது மனைவி மேரியைச் சந்தித்தார். அவளது அழகில் மயங்கி அவளைக் காதலித்துத் திருமணமும் செய்துகொண்டார்.

வங்காளத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து கம்பெனியை மீட்க மதராஸில் இருந்து ராபர்ட் கிளைவ் தனது படையுடன் வந்து சேர்ந்தார். பிளாசிப் போரில் நவாப் படை தோற்றது. வாரன் ஹேஸ்டிங்கின் கை மீண்டும் ஓங்கியது. பிரிட்டிஷ் கையாளாக வங்காளத்தின் பொம்மை நவாப்பாக பதவியேற்ற மீர் ஜாபருடன், ஹேஸ்டிங் நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். தனக்கு இந்தப் பதவியைப் பெற்றுத் தந்ததற்காக மீர் ஜாபர் இரண்டு மில்லியன் பணத்தை கிளைவுக்கு அன்பளிப்பாக அளித்தார். அதோடு, கம்பெனியின் முக்கிய அதிகாரிகளுக்கு தங்கம், வெள்ளிப் பொருட்களைப் பரிசாக அனுப்பியதோடு அவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு தேவையான மது, மாது அத்தனையும் அனுப்பத் தொடங்கினார். இதுதான் தனது வளர்ச்சிக்கான காலம் என்பதை அறிந்துகொண்ட வாரன் ஹேஸ்டிங், மீர் ஜாபரின் நெருங்கிய நண்பர் ஆனார். அவரால் கிடைத்த ஆதாயத்தைக்கொண்டு மறைமுகமாக அவரும் வணிகம் செய்யத் தொடங்கினார். நவாப் பதவிக்கான மறைமுகச் சதியின் காரணமாக மீர் ஜாபர் தூக்கி எறியப்பட்டு, மீர் காசிம் அந்தப் பதவிக்கு வந்தார். ஆனாலும், வாரன் ஹேஸ்டிங் விசுவாசத்துடன் மீர் ஜாபருக்கு ஆதரவாகவே நடந்துகொண்டார். இது, அவருக்கு நிறைய சிக்கல்களை உருவாக்கியது.

14 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய வாரன் ஹேஸ்டிங், 1764-ல் பதவி விலகி இங்கிலாந்துக்குத் திரும்பினார். இந்தியாவில் அவரது மனைவி மேரி இறந்துபோய்விடவே தனிஆளாக இங்கி​லாந்தில் வசிக்கத் தொடங்கினார். சம்பாதித்த பணத்தைக்​கொண்டு மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார். புதிதாக ஓர் கோட்டையை விலைக்கு வாங்கினார். தனது ஆள்உயரப் படங்களை வரைந்து அங்கே மாட்டும்படி பிரபல ஓவியர்களை நியமித்தார். தினமும் விருந்தும் குடியும் நடனமும் என்று ஓர் அரசனைப் போல வாழ்க்கையை அனுபவித்தார். இதனால், கடனில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது.

இந்தியாவுக்குச் சென்று மறுபடியும் பணம் சேர்த்தால் மட்டுமே கடனில் இருந்து மீள முடியும் என்ற நிலை உருவானது. ஆனால், அவரது அரசியல் எதிரிகள் அவர் மீண்டும் கிழக்கிந்தியக்  கம்பெனிக்குள் வரவிடாமல் சதி செய்தனர். இந்த நேரத்தில், அவருக்குக் கை கொடுத்தவர் ராபர்ட் கிளைவ். அதிகார போதையில் லஞ்சத்தில் திளைத்த கிளைவ், தனது விசுவாசியாக வாரனை கருதினார். ஆகவே, அவரை மதராஸின் ஆட்சியாளராக நியமித்தார். உடனே, இங்கிலாந்தில் இருந்து கிளம்பி வரும்படி தகவல் அனுப்பினார்.

1769-ல் டோவரில் இருந்து கப்பலில் இந்தியாவுக்குப் புறப்பட்டார் வாரன் ஹேஸ்டிங். இந்தப் பயணத்தில், பேரன் இம்காப் என்ற ஜெர்மானிய ஓவியரைச் சந்தித்தார். பேரனின் அழகான மனைவியைப் பார்த்த உடனேயே வாரனுக்கு அவளை மிகவும் பிடித்து​விட்டது. இருவரும் கப்பலில் ரகசியமாகச் சந்தித்துக்கொண்டனர். தனக்கு உடல் நலமில்லை என்று சொல்லி அந்தப் பெண்ணைத் தனது அறைக்கு வரவழைத்து அவளோடு காதல் நாடகம் ஆடத் தொடங்கினார். இதன் விளைவாக, சென்னை வந்து சேருவதற்குள் இருவரும் நெருக்கமான காதல்கொண்டிருந்தனர். பேரனிடம் இருந்து அவள் முறையாக விவாகரத்து பெற்றுவிட்டால் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்த வாரன் ஹேஸ்டிங், அதற்காக தானே வழக்கறிஞரை நியமித்து உதவி செய்வதாகவும் கூறினார்.

அதன்படி, அவளுக்கு விரைவாக விவாகரத்துக் கிடைக்க வாரன் ஹேஸ்டிங் பெரும் முயற்சி செய்தார். விவாகரத்து கிடைத்தவுடன் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த ஓவியர் பேரன் இம்காப்பை சமாதானம் செய்வதற்காக அவருக்கு 10,000 பவுண்ட் பரிசு அளித்து, ஜெர்மன் திரும்பிச் செல்வதற்கு பயண உதவிகளையும் செய்துதந்தார் வாரன் ஹேஸ்டிங். இப்படி, கப்பல் பயணத்தில் அடுத்தவர் மனைவியை அபகரித்ததுபோல இந்தியாவிலும் ஆட்சி அதிகாரத்தை எளிதாக அபகரிக்க முடியும் என்று அறிந்துகொண்ட, வாரன் ஹேஸ்டிங் காய் நகர்த்தி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்றுக்கொண்டார்.

இங்கிலாந்தில் உள்ள தனது கடன்களைஅடைக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகத்தில் எல்லாவித முறைகேடுகளையும் செய்தார். அதுவரை, நவாபின் ஆட்சியில் இருந்துவந்த நேரடியான வரி வசூல் செய்யும் முறையை மாற்றி, திவான்களை நியமிக்க முடிவு செய்தார் வாரன் ஹேஸ்டிங். இதற்குக் காரணம், அப்படி நியமிக்கப்படுகிறவர்கள் லட்சக்கணக்கில் தனக்கு லஞ்சம் தருவார்கள் என்ற பேராசை. அதன்படி, இரண்டு லட்சம் பணம் பெற்றுக்கொண்டு தனக்கு விருப்பமானவர்களை திவான்களாக நியமித்தார்.

அதில்தான், நந்தகுமாருக்கும் வாரன் ஹேஸ்டிங்​குக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. நவாப் ஆட்சியின்போது கூக்லி கவர்னராகப் பதவி வகித்துவந்த நந்தகுமாருக்கு, எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரர்கள் தனது ஆட்சி அதிகாரத்தில் குறுக்கிடுகிறார்களே என்ற கோபம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வாரன் ஹேஸ்டிங்கிடம் இரண்டு முறை சண்டை போட்டு இருந்தார். அதை மனதில் வைத்துக்கொண்ட வாரன் ஹேஸ்டிங், நந்தகுமாரைப் பழிவாங்க முடிவு செய்தார். அவரது அதிகாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்க ஆரம்பித்தார். மேலும், நந்தகுமாரின் மகன் குருதாஸை புதிய திவானாக நியமிக்க வேண்டும் என்ற ஆசைக்கும் குறுக்காக நின்றார். இந்தப் பிரச்னையைத் தீர்க்க நந்தகுமாரே நேரடியாக வாரன் ஹேஸ்டிங்கை சந்தித்துப் பேசினார். ஒரு லட்ச ரூபாய் லஞ்சமாகத் தருவதாக இருந்தால் மட்டுமே அவரது மகனை திவானாக நியமிக்க முடியும் என்று ஹேஸ்டிங் கூறினார். ஆத்திரமடைந்த நந்தகுமார், வாரன் ஹேஸ்டிங் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்கிறார் என்பதற்கான சாட்சிகளைச் சேகரித்துக்கொண்டு ஹேஸ்டிங் மீது நிர்வாக கவுன்சிலில் புகார் செய்தார். நந்தகுமாரின் இந்த நடவடிக்கை ஒரு சதிச் செயல். தனக்கு எதிராக வங்காளத்தின் நிர்வாகத்தைக் கவனிப்பதற்காக உருவாக்கப்பட்ட கவுன்சிலைச் சேர்ந்த பிரான்சிஸ், கிளாவரிங், மான்சன் ஆகிய மூன்று பேருடைய தூண்டுதல்தான் இது என்று வாரன் ஹேஸ்டிங் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

ஆனால், பிரான்சிஸ் தன்னிடம் நந்தகுமார் ஒரு புகாரை அளித்து இருப்பதாகவும் அதில் வாரன் ஹேஸ்டிங், முன்னிபேகம் என்ற பெண்ணை மைனரான நவாப் முபாரக் உத் தௌலாவின் பொறுப்பாளராக நியமிப்பதற்காக இரண்டரை லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாகக் கூறினார்.

வாரன் ஹேஸ்டிங்குக்கு ஆதரவாக பேர்வெல் என்ற ஒரே ஓர்உறுப்பினர் மட்டுமே குரல் கொடுத்தார். மற்றவர்கள் ஹேஸ்டிங்கை எதிர்த்தனர். ஆனால், நிர்வாகக் கவுன்சில் இந்த விவகாரத்தை விசாரிக்க உரிமை கிடையாது என்று ஹேஸ்டிங் கடுமையாக எதிர்த்தார். இந்த விவகாரம் ஓட்டு எடுப்புக்கு விடப்பட்டது. அதில், வாரன் ஹேஸ்டிங்கை கவுன்சில் விசாரிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் இந்த விசாரணையை நடத்தவிட மாட்டேன் என்றும் கவுன்சிலை கலைத்துவிடப்போவதாகவும் வாரன் ஹேஸ்டிங் மிரட்டினார்.

No comments:

Post a Comment