வழக்கு, கைது நடவடிக்கைகளால் பதுங்கி இருந்த எம்.நடராசன், பூலித்தேவன் விழாவின் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்!
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்த நாள் விழாவை, அவர் பிறந்த நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடுவார் எம்.நடராசன்.
இந்த வருடம் கடந்த 8-ம் தேதி விழா களை கட்டியது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சகோதரியை மணம் முடித்த கிருஷ்ணமோகன், கார்கில் போரின்போது ராணுவத்தில் கேப்டனாக இருந்த சக்ரவர்த்தி ஆகியோரைக் கொல்கத்தாவில் இருந்து இதற்காக அழைத்து வந்திருந்தார் நடராசன்.
விழாவுக்கு வந்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், ''உலகத்தின் எந்தப் பகுதியில் நடந்த விடுதலைப் போராட்டமும் தோற்றதாக வரலாறு இல்லை. 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஆசிய நாடுகள் அனைத்தும் கிளர்ந்து நின்றபோது, விடுதலைக்கான முதல் குரல் கொடுத்தவர் பூலித்தேவன். அவரது வழியிலேயே இலங்கையிலும் பிரபாகரன் தலைமையில் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் இப்போது, தொய்வு ஏற்பட்டு இருந்தாலும் விரைவில் வெற்றி கிடைக்கும்'' என்றார்.
அடுத்துப் பேசிய கேப்டன் சக்ரவர்த்தி பேச்சில் ஆக்ரோஷம் கொட்டியது. ''இலங்கையில் லட்சக்
கணக்கான தமிழர்களை அந்த நாட்டு ராணுவம் கொன்று குவித்ததை மன்னிக்கவே முடியாது. சுண்டைக்காய் நாடான இலங்கையின் இந்தச் செயலை இந்திய ராணுவம்... குறிப்பாக மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மெட்ராஸ் ரெஜிமென்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களை மட்டும் அனுப்பினாலே அந்த நாட்டை இல்லாமல் செய்து விடுவார்கள். பழ.நெடுமாறன் ஐயாவையும் எம்.நடராஜனையும் நான் மிகவும் மதிக்கிறேன். இவர்கள் இருவரும் இணைந்து இருப்பதன் மூலம் அரசியலில் புதிய எழுச்சி ஏற்படும். நடராசன் தமிழகத்துக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கே வழிகாட்ட வேண்டும்'' என்று புகழ்ந்து தள்ளினார்.
இறுதியில் பேசிய நடராசன், ''இங்கே மேடையில் இருக்கும் கேப்டன் சக்ரவர்த்தி ரியலாக போரில் பங்கேற்று எதிரிகளை வெற்றி பெற்ற கேப்டன். ஆனால் ஒரு சிலர் வாய்க்கு வந்ததைப் பேசிக்கொண்டு 'கேப்டன்’ என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். டெல்லி அரசியலில் இருக்கும் சிதம்பரம், தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார். இங்கே உள்ள தமிழர்களுக்கு மட்டும் அல்லாமல் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் அவர் இருக்கிறார். தஞ்சையில் முள்ளி வாய்க்கால் முற்றம் தயாராகி வருகிறது. முக்கால்வாசி வேலை முடிந்துவிட்டது. இதற்காக நான் 80 நாட்கள் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதை ஒரு வீரத் தழும்பாகவே எடுத்துக்கொள்கிறேன். நான் சொல்வதை நீங்கள் கேட்டு நடந்தால் தமிழகத்தில் வருங்காலத்தில் ஆட்சி, அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருப்போம்'' என்று அமைதியாகவே முடித்தார்.
'ஆளும் கட்சியைத் திட்டுவார்னு வந்தா... கேப் டனைத் திட்டுறார்’ என்றபடி சுவாரஸ்யம் இல்லாமல் கலைந்து சென்றனர் உளவுத்துறையினர்!
No comments:
Post a Comment