மத்தியப் பிரதேசத்தில் ம.தி.மு.க. தொண்டர்களின் முற்றுகையைக் கடந்த இதழில் எழுதி இருந்தோம். ராஜபக்ஷேவுக்குக் கறுப்புக் கொடி காட்டாமல் திரும்ப மாட்டோம் என்று இவர்களும், உங்களை உள்ளே விட மாட்டோம் என்று அவர்களும் விடாப்பிடியாக இருந்தது வரை எழுதி இருந்தோம். அடுத்து நடந்தவை இங்கே...
சமாதானம் சொன்ன சௌகான்!
20-ம் தேதி மாலை வரை, வைகோ உள்ளிட்டவர்களை அமைதியாக டீல் செய்த ம.பி. போலீஸ், 21-ம் தேதி காலையில் அச்சுறுத்தும் காரியங்களைத் தொடங்கியது. மணல் மூட்டை, தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று போலீஸ் படை குவியத் தொடங்கியது. இந்த அச்சுறுத்தல் ஒரு பக்கம் ஆரம்பிக்க,, அந்த மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், வைகோவைக் குளிர்ச்சிப்படுத்தும் விதமாகப் பேச ஆரம்பித்தார். ''வைகோ, ராஜபக்ஷே இருவருமே எங்கள் மாநிலத்தின் விருந்தினர்கள்'' என்று சொன்னார். இது, மறியலில் உட்கார்ந்து இருந்த வைகோவை மேலும் ஆத்திரப்பட வைத்தது. ''ஒரு கொலைகாரன் உங்களுக்கு விருந்தாளியா? அவருக்கு வர வேற்பு... எங்களுக்குத் தடையா?'' என்று மீடியாக்களிடம் கேட்டுக் கொந்தளித்தார் வைகோ!
யார் எதிரி?
சாஞ்சிக்குள் நம்மை விட மாட்டார்கள் என்று தெரிந்ததும் தடையை மீறி உள்ளே நுழைவதற்கான திட்டத்தை வைகோ யோசிக்கத் தொடங்கினார். 21-ம் தேதி மதியம் 12 மணிக்கு ம.தி.மு.க-வினர் அனைவருடனும் வைகோ உள்ளே நுழைய நினைத்தார். அப்போது, பாதுகாப்புப் படை போலீஸாரும் அதிகாரிகளும் சமாதானப்படுத்தத் தொடங்கினார்கள். 'மீறினால், உங்களைக் கைது செய்வோம்’ என்றார்கள். 'அது உங்கள் இஷ்டம்’ என்றார்கள். அதன்பிறகே, ம.பி. போலீஸ் கைது நடவடிக்கையில் இறங்கியது.
அங்கே இருந்து 40 கி.மீட்டர் தூரத்தில் உள்ள சன்செர் என்ற இடத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென் றனர்.
தமிழர்களைப் பார்த்தால் பயம்’
சாலை வழியாக வைகோ தலைமையில் வந்தவர்கள் கைது செய்யப்பட்ட பிறகுதான், ம.பி. போலீஸார் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால், ரயிலிலும் விமானத்திலும் ம.தி.மு.க. தொண்டர்கள் சிலர் வரப்போகும் தகவல் தாமதமாகத்தான் அவர்களுக்குக் கிடைத்தது. மீண்டும் பரபரப்பானது போலீஸ்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் விமானம், ரயிலில் பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்களையும் உடனடியாகக் கண்காணித்தனர். ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் பொறியாளர் செந்திலதிபன் தலைமையிலான எட்டுப் பேர் எப்படியோ சாஞ்சிக்குள் நுழைந்து விட்ட தகவல் போலீஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. இன்னும் ஆறு கி.மீ. தூரம் அவர்கள் வந்தால்... விழா நடக்கும் மேடையை நெருங்கி விடலாம் என்பதால் தீவிர வேட்டையில் இறங்கினர். ஒருவழியாக, அவர்களை திவான்
கஞ்ச் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்தார் போலீஸ் அதிகாரி மகேந்திரசிங் மீனா. ''தமிழர்கள் என்றாலே பயமாக இருக்கிறது. மனித வெடிகுண்டாக மாறக்கூடியவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனவே தமிழன் ஒரு ஆள் வந்தாலும் ஆபத்து என்று மத்தியப் பிரதேச அரசு எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. உங்கள் தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும்'' என்று செந்திலதிபனிடம் சொன்னாராம் அவர். சாஞ்சியைச் சுற்றிய ஆறு கிலோ மீட்டர் தூரத்தை ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் உடனடியாக ஒப்படைத்து விட்டார்கள்!
ராஜபக்ஷே சாஞ்சியை விட்டுக் கிளம்பிய பிறகுதான், வைகோ உள்ளிட்டவர்களை விடுதலை செய்தது ம.பி. அரசு. அதன் பிறகும் மாநில எல்லை வரை சென்று வழியனுப்பி விட்டுத்தான் கிளம்பினார்கள்.
23-ம் தேதி இரவு சென்னை அண்ணா நினைவிடத்துக்கு வந்து சேர்ந்தன ம.தி.மு.க-வினர் சென்ற 21 வாகனங்கள். ''நாம் புத்தரை எதிர்க்கவில்லை. கொலை காரனைத்தான் எதிர்க்கிறோம். இந்தப் போராட்டத்தின் மூலமாக அகில இந்தியா முழுவதும் ஈழப் பிரச்னையைக் கொண்டு போய்ச் சேர்த்து விட்டோம். இனி ஒரு முறை ராஜபக்ஷே இங்கே வந்தால், பிரதமர் வீட்டை முற்றுகை இடுவோம்'' என்று கொந்தளித்தார் வைகோ!
எங்கே சுஷ்மா ஸ்வராஜ்?
ராஜபக்ஷே வருகையை முன்னிட்டு சாஞ்சியை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பொது மக்களைக் கூட இயல்பாக வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை. பொதுஇடத்தில் நான்கைந்து பேர் கூடக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கண்ணாடிக் கூண்டுக்குள் நின்றுதான் ராஜபக்ஷே பேசினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்த சுஷ்மா சுவராஜ், ஏனோ விழாவில் கலந்து கொள்ளவே இல்லை.
No comments:
Post a Comment