டாஸ்மாக் மது பானங்களின் விலையை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி இருப்பது, தமிழக அரசின் மதுக்கொள்கையில் மிகப் பெரிய மாற்றம் வர இருப்பதற்கான அறிகுறி என்கிறார்கள் உயர் அதிகாரிகள்!
அ.தி.மு.க. அரசு பதவிஏற்ற பிறகு, மது பானங் களின் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி இருக்கிறது. கடந்த 10-ம் தேதி, அமலுக்கு வந்த அரசு ஆணையின்படி, டாஸ்மாக் மதுபானங்களின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு ஐந்து ரூபாயும் ஹாஃப் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாயும், புல் பாட்டிலுக்கு 30 முதல் 50 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திடீர் விலையேற்றம் குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம்.
''டாஸ்மாக் நிறுவனத்தின் இப்போதைய ஆண்டு வருமானம் சுமார் 20 ஆயிரம் கோடி. வெகு விரைவில் அரசு புதிய கொள்கை முடிவுகளை எடுக்க இருக்கிறது. அதன்படி, டாஸ்மாக் கடைகளின் வேலைநேரம் குறையலாம். இதன்காரணமாக, வருமானம் சுமார் 40 முதல் 59 சதவிகிதம் வரை குறையும் வாய்ப்பு இருக்கிறது. அதைக் கணக்கிட்டுத்தான் இப்போதே ஒரு பெட்டிக்கு சராசரியாக 480 ரூபாய் கூடுதலாக வரும்படி விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் 50 லட்சம் பெட்டிகள் மூலம் மாதம் சுமார் 200 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாகக் கிடைக்கும். ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைக்கும்.
கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி, அனைத்து வகை பீர்களின் விலைகளை ஏற்றியபோதே அரசு தரப்பில் இருந்து, 'மதுக்கொள்கையில் மிகப்பெரிய மாற்றம் கொண்டு வரப்போகிறோம். இப்போது கிடைத்து வரும் டாஸ்மாக் வருமானத்தில் பாதிப்பு இல்லாமல் மதுக்கடைகளின் நேரத்தைக் குறைத்தோ, புதிய திட்டங்களின் மூலமோ வருவாய் இழப்பை சரிக்கட்டும் திட்டங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்’ என உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அப்போதே, இந்த விலை உயர்வுக்கும் திட்டம் இருந்தது. ஆனால், அப்போது பீர் விலையை உயர்த்திய கையோடு, மது வகைகளின் விலையையும் உயர்த்தினால் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்தில்தான் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் அப்போது, தமிழகத்தில் இருக்கும் 11 மதுபான ஆலைகளும் போக்குவரத்துச் செலவு உயர்வு, கச்சாப்பொருள் விலை உயர்வு காரணமாக கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என நச்சரித்துக் கொண்டிருந்தன. அதனால்தான், அப்போது மதுபானங்களின் விலையை உயர்த்தவில்லை.
இப்போது மதுக்கொள்கைக்குப் புதிய திட்டங்கள் சிலவற்றை யோசித்துள்ளனர். அதன்படி, மதிய உணவு இடைவேளை நேரத்தில் இரண்டு மணி நேரம் கடையைப் பூட்டலாம் அல்லது மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்கலாம் என்ற யோசனை சொல்லப்பட்டு உள்ளது. கேரளா பாணியில் தமிழகத்தில் இருக்கும் மொத்த டாஸ்மாக் பார்களின் உரிமங்களையும் ரத்து செய்துவிட்டு, 'கடையில் மதுவை வாங்கிச் செல்லலாம், அங்கேயே குடிக்க முடியாது’ என்று விதிமுறையைக் கொண்டுவரவும் யோசிக்கிறார்கள். சமீபத்தில் மூன்று, ஐந்து நட்சத்திர ஹோட்டல் பார்கள் மற்றும் கிளப்புகளின் மதுக்கூடங்களின் வருடாந்திர வரி மற்றும் லைசென்ஸ் தொகையை பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இப்போது, அந்த வரி விதிப்பு மற்றும் லைசென்ஸ் தொகையை மீண்டும் உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. தினமும் விற்பனை 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் 'டி’ சென்டர் டாஸ்மாக் கடைகளை மூடும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. இதனால், கிராமப்புறங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுவிடும்.
இப்படி, படிப்படியாகத் திட்டங்களை அமல்படுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன், ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் பூட்டுப்போட்டு, பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதேநேரம் கடந்த காலங்களில் மதுவிலக்கு அமல்படுத்தியபோது... என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன? அந்தத் திட்டம் ஏன் தோல்வி அடைந்தது என்றும் அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். மது விலக்கை அமல்படுத்தி பெருவாரியான மக்களின் ஓட்டுக்களைக் கவரத் திட்டமிட்டு இருக்கும் அதே வேளையில், கள் இறக்க அனுமதி கொடுத்து குறிப்பிட்ட சமூகத்தின் ஒட்டுமொத்த ஓட்டுக்களையும் தன்வசப்படுத்தும் திட்டங்களும் பரிசீலனையில் இருக்கின்றன...'' என்கிறார்கள்!
விலையைப் பார்த்து குடிமகன்களுக்குப் போதை இறங்குகிறதோ இல்லையோ, மதுக்கொள்கையை வகுப்பதில் தமிழக அரசுக்குத் தள்ளாட்டம் இருப்பது தெரிகிறது!
''அரசு ஊழியர்கள் ஆக்கவேண்டும்!''
விலை ஏற்றம் குறித்துப் பேசும் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி-யின் மாநில தலைவர் தியாகராஜன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர், ''தமிழக அரசு மதுவிலக்கை நோக்கி செல்வதாக தகவல்கள் வருகின்றன. ஒருவேளை, மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தினால் டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கி, அவர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் இதர பலன்களை அளிக்க வேண்டும். கடந்த ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்தார் என்பதை டாஸ்மாக் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். டாஸ்மாக்கில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் இருப்பதுபோல தனியாக நிலை ஆணைகளை வகுக்க வேண்டும்...'' என்கிறார்கள்.
No comments:
Post a Comment