மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தனது 91-வது வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்து. கடந்த 1981-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மதுரையில் நடைபெற்ற 5-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ் அறிஞர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர். அதேபோல் ஜப்பானின் ஷூமாடா நகரில் வசிக்கும் சுஸோ மாட்சுனாகா (91) என்பவரும் ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவள்ளுவரும் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார்.
ஜப்பானில் அரசு அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளராக இருந்து வரும் சுஸோ மாட்சுனாகா, ஜப்பானிய மொழியின் மூலத்தை அறிந்து கொள்ளும் ஆவலில் மொழி ஆய்வு செய்து வந்துள்ளார். இதற்கிடையே இவருடைய பேனா நண்பராக 1980-ல் அறிமுகம் ஆனார் சேலத்தைச் சேர்ந்த சொ.மு.முத்துவின் மகனும் பொறியாளருமான எம்.சேகர் (64). மாநாட்டுக்காக 1981-ல் தமிழகம் வந்த சுஸோ மாட்சுனாகா தனது பேனா நண்பரின் முகத்தைக் காண்பதற்காக சேகரின் வீட்டுக்கு வந்தபோது, அவரது தந்தையாரும் அரசு ஊழியருமான சொ.மு.முத்துவை சந்தித்துள்ளார். இருவரும் இலக்கியம், திருக்குறள், தமிழ் கலாசாரம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது பாரதியார் குறித்து பேச்சு எழுந்தது. பாரதியைக் கேள்விப்பட்ட சுஸோ, அவர் தொடர்பான ஆங்கிலப் புத்தகங்களை கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு குயில்பாட்டு ஆங்கில மொழி பெயர்ப்பு நூலையும் பாரதி குறித்த நூல்களையும் தபாலில் அனுப்பியுள்ளார் முத்து. இந்த நூலில் ஏற்படும் தமிழ் வார்த்தைகளுக்கான அர்த்தங்கள், சந்தேகங்களை ஆங்கிலத்தில் கடிதமாக எழுத, அதற்கு முத்து ஜப்பானுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதப் போக்குவரத்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பாரதியை நன்கு கற்றுத் தேர்ந்த சுஸோ, ஜப்பானின் ஜப்பானீஸ் மொழியில் சுப்பிரமணிய பாரதியின் குயில்பாட்டு, இதர பாடல்கள் என்ற தலைப்பில் புத்தகமாகவே வெளியிட்டார். இதன் தாக்கமாகவே டோக்கியோவில் 1982 ஏப்ரல் 6-ல் பாரதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சதந்திர கதைகள், வள்ளலாரின் மணிமொழிகள், மணிமேகலை, நாலடியார் ஆகியவற்றின் ஆங்கில பதிப்புகளை அனுப்பி, உரிய விளக்கத்தை கடிதத்தில் அனுப்ப அவற்றையும் ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்துள்ளார் சுஸோ. ஜப்பான் மொழியில் வெளியான வள்ளலாரின் குரல் என்ற நூலின் வெளியீட்டு விழா 1986 ஜனவரியில் வடலூரில் பொள்ளாச்சி ந.மகாலிங்கம், ஊரன் அடிகளார் முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக கலை, இலக்கிய, கலாசாரம், திருமண முறை போன்றவற்றை அறிந்து கொள்ள விரும்பிய சுஸோ மாட்சுனாகா, சொ.மு.முத்துவின் உதவியுடன் திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் குறித்து கடிதம் மூலம் அனுப்பிய தகவல்களைத் தொகுத்து, எனது கடிதங்களில் இந்தியாவைப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் 4 நூல்களை ஜப்பானிய மொழியில் வெளியிட்டு, அதன் பிரதிகளையும் முத்துவுக்கு அனுப்பியுள்ளார்.
இந்திய கலாசாரத்தை சுஸோ மாட்சுனாகா மூலம் ஜப்பானியர்கள் அறிந்து கொள்ள உதவியமைக்காக ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்துவுக்கு கடந்த 2007 ஆகஸ்டில் ஜப்பான் அரசாங்கம் தபால் தலை வெளியிட்டுள்ளது. தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் இந்த கௌரவம் சேலத்தைச் சேர்ந்தவருக்கு கிடைத்திருப்பது உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கே இன்னும் தெரியாமல் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இருவரையும் சந்திக்க வைக்க முயற்சி ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் சுஸோ மாட்சுனாகாவும், ஓமலூரைச் சேர்ந்த சொ.மு.முத்துவும் கடைசியாக 1981-ம் ஆண்டு நேரில் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு கடிதம் மூலமாகவே ஆங்கில மொழியில் தொடர்பு கொண்டு வருகின்றனர். இருவருக்கும் 91 வயது ஆன நிலையிலும் இருவரும் நல்ல திடகாத்திரமாகவும், தங்களது வேலைகளை தாங்களே செய்து கொள்பவர்களாகவும் உள்ளனர்.
No comments:
Post a Comment