சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் பதவிக்கு நிச்சயம் ஆபத்து வரும், அப்போது அடுத்த முதல்வராக யாரைப் போடலாம் என்று ஜோசியரிடம் ஜாதகத்துடன் போனதால்தான் சசிகலா குரூப்புக்கு முதல்வர் ஜெயலலிதா ஆப்பு வைத்து விட்டதாக ஒரு தகவல் பரவியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா இடையிலான பிளவுக்கு என்ன காரணம் குறித்த 'உளவுத் தகவல்கள்' தொடர்ந்து கசிந்தவண்ணம் உள்ளன. பல காரணங்களை இதற்கு அடுக்குகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது போயஸ் தோட்ட வீட்டுக்குள் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் இதுவரை தங்கியிருக்கவில்லை, மாறாக ஏராளமான ரகசியங்களும் சேர்ந்து குடித்தனம் செய்துள்ளது தெரிய வருகிறது.
ஜெயலலிதாவிடமிருந்து சசிகலா நீண்ட காலத்திற்கு முன்பே மனதளவில் பிரிய ஆரம்பித்து விட்டதாக கூறுகிறார்கள். குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் தனக்கு பாதகமாக ஜெயலலிதா மாறக் கூடும் என்று சசிகலா தரப்பு 'கெஸ்' செய்ய ஆரம்பித்து விட்டதாம். இதனால்தான் அடுத்தது என்ன என்று அட்வான்ஸ்டாக யோசிக்கு ஆரம்பித்துள்ளது இந்தக் கூட்டம்.
இதற்காக ஜெயலலிதாவுக்காக யாருடனெல்லாம் பேசாமல் இருந்தாரோ அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார் சசிகலா. அவர்களுடன் ரகசியமாகவும் சந்தித்துப் பேசியுள்ளார். சிலர் போயஸ் தோட்ட வீடு வரைக்கும் கூட வந்து போயுள்ளனராம். இந்த ரகசிய சந்திப்புகளுக்கு கார்டனில் உள்ள சசிகலா ஆதரவு காவல்துறை அதிகாரிகள் உடந்தை என்று கூறப்படுகிறது.
மேலும் பெங்களூர் கோர்ட்டுக்கு விசாரணைக்கு சசிகலா வந்தபோதும் இந்த ஜெயலலிதாவுக்கு வேண்டப்படாதவர்கள் வந்து சசிகலாவைப் பார்த்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இதெல்லாம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு அவருக்கு விசுவாசமான அதிகாரிகள் மூலம் போயிருக்கிறது.
அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை மட்டும் பக்குவாகமாக, பாதுகாப்பாக கொண்டு வருவது குறித்து முக்கிய சட்ட நிபுணர் ஒருவருடன் சசி தரப்பு ரகசியமாக ஆலோசனை நடத்தியுள்ளதாம்.
மேலும் திமுக தரப்பைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களுடனும் கூட சசிகலாவுக்குத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுவும் ஜெயலலிதாவை அதிர வைத்துள்ளது.
இதை விட ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், ஜெயலலிதாவுக்குப் பிறகு யாரை முதல்வராக்குவது என்ற மந்திராலோசனையில் சசிகலா தரப்பு ஈடுபட்டதுதான். இதற்காக முக்கிய ஜோதிடரையும் போய்ப் பார்த்துள்ளனர். அப்போது இரண்டு அமைச்சர்களின் ஜாதகங்களையும் கொடுத்து இதில் யார் எங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள் என்றும் ஆலோசனை கேட்டுள்ளனராம்.
இதெல்லாம் ஜெயலலிதாவை கடும் அதிர்ச்சியிலும், ஆவேசத்திலும் தள்ளி விட்டு விட்டது. இதனால்தான் சசிகலா மீது கடும் கோபம் கொண்டு அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விரட்டியுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.
மொத்தத்தில் சமீப காலமாக தனக்கு வெளியில் உள்ள எதிரிகளை விட உள்ளுக்குள்ளேயே, அதுவும் கூடவே இருப்பது ஜெயலலிதாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதால்தான் தனது கொடநாடு பயணத்தைக் கூட தள்ளிப் போட்டு விட்டு முதலில் வேரறுப்பு வேலைகளில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார் என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment