உலக நாயகன் ஏரியாவில் உற்சாக விசில் பறக்கிறது. ‘இதுவரை இந்திய சினிமா காட்டியிராத ஒரு பக்கத்தை விஸ்வரூபமாக திரையில் காட்டப் போகிறார் கமல்’ என்று உற்சாகப்படுகிறார்கள் உதவி இயக்குநர்கள்.
ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்த நரமாமிசம் சாப்பிடுபவர்களைப் பற்றிய கதை என்று ஒருபக்கம் செய்தி வர, அவசரமாக அதை மறுத்தார் கமல். ஆனாலும் படத் தில் அப்படி ஒரு காட்சி உண்டு என்கிறது யூனிட்டில் நெருங்கிய வட்டம். இது தவிர நீண்ட நாளைக்குப் பிறகு தன் ரசிகர்களுக்கு நடன விருந்து படைக்கப் போகிறார். இதற்காக கதக் நடனத்தை முறைப்படி கற்றுக் கொண்டிருக்கிறார் கமல். பாதிப் படத்தை கனடாவில் எடுக்க நினைத்திருந்த கமலுக்கு ஒரு சவால், மொத்த யூனிட்டிற்கும் விசா தருவதில் சிக்கல் வந்ததாம். அசராத கமல் ஜோர்டான் சென்று நினைத்த காட்சிகளை படமாக்கித் திரும்பியிருக்கிறார்.
அப்போது உடன் சென்றவர் ஆண்ட்ரியா. கமலுக்காக இன்னொரு ஜோடியை ஜோர்டானிலேயே தேடிய போது கிடைத்தவர்தான் பூஜா குமார். இந்திய வம்சாவளியில வந்த பூஜாவை இனி கோடம்பாக்கம் சினிமா அள்ளிக் கொள்ளும். அப்படியொரு அழகு!
இதுவரைக்கும் சென்னையிலும், வெளிநாடுகளிலுமாக 40 சதவீத படத்தை முடித்து விட்ட கமலுக்கு அடுத்த சிக்கல் வந்திருக்கிறது. தயாரிப்பாளரிடம் சொன்ன பட்ஜெட் 30 கோடி என்றும், ஆனால் 50 கோடியைத் தாண்டிய பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே கமலே படத்தை தன் கஸ்டடியில் கொண்டுவந்திருக்கிறார். இந் நிலையில்தான் ‘விஸ்வரூபம்’ 120 கோடி பட்ஜெட் என்று கமலே அறிவிக்க... திரையுலகம் கமலை நிமிர்ந்து பார்த்தது.
‘விஸ்வரூபம்' படத்தில் பாடல் எழுதும் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் படம் பற்றி பேசினோம்.
‘‘விஸ்வரூபம் படத்திற்காகப் பாடல் எழுத கமல் என்னை வரச் சொல்லியிருந்தார். ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்தோம். பாடலின் சூழ்நிலை பற்றி விவரித்த கமல், ‘இந்தப் பாடல் ஒரு சிக்கலான இடத்தில் வருகிறது. வலிமையான வார்த்தைகளில் பாடல் இயங்க வேண்டும்; அதே சமயம் யாரையும் புண்படுத்திவிடக் கூடாது; அப்படி உங்களால் மட்டுமே எழுத முடியும்', என்று சொன்னார். பாடல் இடம் பெறும் சூழலுக்கான படக் காட்சிகளையும் எனக்குக் காட்டினார். ‘சரி' என்று நானும் விடைபெற்றுத் திரும்பினேன்.
இரண்டு நாட்களில் பாடலை எழுதி முடித்து விட்டேன். கமலைச் சந்தித்துப் பாடலைக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு பரவசமாகிப் போனார் கமல். ‘தான் நினைத்த வரிகள் கிடைத்து விட்டன' என்கிற ஆனந்தம் அவருக்கு. அவர் நினைத்ததை நான் எழுதி விட்டேன் என்கிற நிறைவு எனக்கு.
படித்து முடித்த அதே வேகத்தில் அறைக்குள் சென்ற கமல் ஒரு பொருளோடு திரும்பினார். ‘இந்தப் பாடலுக்காக என் பரிசுÕ என்று என் கையில் கொடுத்தார். நான் அதைப் பிரித்துப் பார்த்தேன். அது ஒரு பேனா. ‘இது சாதாரண பேனா அல்ல; இத்தாலிய எரிமலைக் குழம்பிலிருந்து செய்யப்பட்ட பேனா. இதே போன்ற பேனாக்களைக் கொண்டுதான் ஜி -8 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டன. எரிமலைக் குழம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பேனா எரிமலைக் கவிஞரிடம் இருப்பதுதான் சிறந் தது’ என்றார். நான் நன்றி சொல்லிப் பெற்றுக் கொண்டேன்.
தொழில் முறைப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு எப்போதுமே எங்கள் நட்பியல் பேச்சுவார்த்தை சிலமணி நேரங்கள் நீளும். இந்தச் சந்திப்பில் எம்.ஆர்.ராதா - வி.கே. ராமசாமி - நாகேஷ் மூவரைப் பற்றியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம். சுவையான தகவல்களைச் சொன்னார் கமல்.
அப்போது என் கைத்தொலைபேசி ஒலித்தது. எதிர் முனையில் ஒலித்த குரலோடு நான் மகிழ்ச்சியோடும் சிரிப்பொலியோடும் பேசுவதைக் கவனித்த கமல் ‘எதிர் முனையில் யார்?' என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். உங்களுக்கும் எனக்கும் பொதுவான நண்பர்தான் என்று செல்போனை அவரிடம் கொடுத்தேன்.
‘நான் கமல் பேசறேன்' என்றார் கமல்.
‘நான் ரஜினி பேசறேன்' என்றது எதிர்முனைக் குரல்.
நண்பர்கள் இருவரும் ஆசை ஆசையாகப் பேசிக் கொண்டனர்.
‘விஸ்வரூபம் வெற்றிப் படமாக அமையும் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது' இது ரஜினி.
‘‘விரைவில் உங்கள் படப்பிடிப்புத் தளத்தில் உங்கள் நடனக் காட்சியில் சந்திக்கிறேன்" இது கமல். எனக்குத் தோன்றியது: இரு கலைஞர்களுக்கு மத்தியில் போட்டி உண்டு; ஆனால் பொறாமை இல்லை.
கமல் கொடுத்த பேனாவில் நான் முதலில் எழுதியது மணி ரத்னம் படத்துக்கான பாட்டு!’’ என்றார் வைரமுத்து.
பாடல் எழுதிய கதையே பரபரப்பை கிளப்புகிறது. படம் வந்தால் தெரியும் கமலின் விஸ்வரூபம்..
No comments:
Post a Comment